வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்தர மக்கள் குறைதீர்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பலதரப்பட்ட மக்கள் புகார், கோரிக்கை மனுக்களுடன் அங்கு வந்திருந்தனர். அப்போது, 37 வயதான நபர் ஒருவர், திடீரென மறைத்து எடுத்துவந்த மண்ணெண்ணெய் பாட்டிலைத் திறந்து தலைமீது ஊற்றிக்கொண்டார். கண்காணிப்புப் பணியிலிருந்த போலீஸார் விரைந்து ஓடிவந்து, அவர்மீது தண்ணீர் ஊற்றி விசாரித்தனர்.

அப்போது, அந்த நபர், ‘‘நான் பேரணாம்பட்டு அருகில் வசித்துவருகிறேன். கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 12-ம் தேதியிலிருந்து என்னுடைய மனைவி, ஆண் குழந்தையைக் காணவில்லை.
இருவரையும் கண்டுபிடித்துத் தரக் கோரி பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் தற்கொலைக்கு முயன்றேன்’’ என்று தெரிவித்தார்.

இது பற்றி விசாரணை நடத்திய போலீஸார், ‘‘தற்கொலைக்கு முயன்ற இந்த நபருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறது. இதனால்தான் இவர் மனைவி, குழந்தையைத் தூக்கிக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். அவர் தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இருந்தபோதும், தற்கொலைக்கு முயன்ற நபரை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியிடம் அழைத்துச் சென்று முறையிடச் செய்திருக்கிறோம். இவரின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்’’ என்றனர்.