தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் பவானி. இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படித்து முடித்திருக்கிறார். இவரது வீட்டின் அருகே வசித்துவந்த கோகுல் சந்திரசேகர், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலுள்ள கருப்பட்டி ஆலையில் வேலைபார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்துவந்தனர். இவர்களின் காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சிலநாள்களுக்கு முன்பு நாகர்கோவிலிலுள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்தனர். இதற்கிடையே, `பவானியைக் காணவில்லை’ என அவர் குடும்பத்தினர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். விசாரணைக்காக காதல் தம்பதி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்துக்கு வந்தனர். நடந்த சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தியிருக்கிறார்.
விசாரணையில் கோகுல் சந்திரசேகருக்கும் பவானியின் அண்ணன் முத்துப்பாண்டிக்கும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது. அப்போது, தான் மறைத்துவைத்திருந்த ஸ்க்ரூடிரைவரால் கோகுல் சந்திரசேகரின் கழுத்தில் குத்த முயன்றார் முத்துப்பாண்டி. இதை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தடுக்க முயன்றார். இதில், அவரின் வலது கையில் குத்து விழுந்தது. மேலும், கோகுல் சந்திரசேகருக்கு கழுத்தில் சிறிய காயம் ஏற்பட்டது.

காயமடைந்த உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காயமடைந்த கோகுல் சந்திரசேகர், திருச்செந்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துப்பாண்டியிடம் குலசேகரன்பட்டினம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.