அலசல்
Published:Updated:

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

- போலீஸ் எஸ்.ஐ-யின் வக்கிரம்... உடந்தையாக இருந்த தாய், பெரியம்மா...

குடும்பக் கட்டமைப்பைத் தாண்டிய முறைதவறிய இச்சை ஒரு தாயை, பெற்ற மகளையே பாலியல் தொல்லைக்குத் தள்ளிவிடவைத்திருக்கிறது. நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் இந்தக் கொடுமை நடந்திருப்பது சென்னையில்தான்... தன் கள்ளக்காதலனான போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் காம இச்சைக்காக, தான் பெற்ற மகளையே தாய் ஒருத்தி, வல்லுறவுக்கு நிர்பந்தித்திருக்கிறார். உடன்படாத சிறுமியின் தலையில் துப்பாக்கிவைத்து மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் அந்த போலீஸ் எஸ்.ஐ. இந்தச் சம்பவத்தில் எஸ்.ஐ சதீஷ்குமார், சிறுமியின் அம்மா ரேவதி, பெரியம்மா நிலவழகி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். விவரிக்க மனம் கூசுமளவுக்கு நடந்திருக்கிறது மேற்கண்ட சம்பவம்.

வடசென்னையைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரின் மனைவி ரேவதி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பாலாஜி தனியார் செல்போன் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிகிறார். ரேவதி, மாதவரம் பகுதியிலுள்ள ரேஷன் கடையில் வேலை பார்க்கிறார். அந்த ரேஷன் கடையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது இந்தக் குற்றப்பின்னணி. என்ன நடந்தது என்பதைச் சிறுமியின் வழக்கறிஞர் குமரன் நம்மிடம் விவரித்தார்.

எஸ்.ஐ சதீஷ்குமார்
எஸ்.ஐ சதீஷ்குமார்

``கொரோனா முதல் அலையின்போது ரேஷன் கடை பாதுகாப்புப் பணிக்காக, மாதவரம் போலீஸ் துணை கமிஷனரின் தனிப்படையில் இருக்கும் எஸ்.ஐ சதீஷ்குமார் நியமிக்கப்பட்டார். அந்தக் கடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சதீஷ்குமாருக்கும் ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அடிக்கடி ரேவதியின் வீட்டுக்குச் சென்ற சதீஷ்குமார், அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். வீட்டுக்கு இப்படி வந்துபோகும் தொடர்பில் ரேவதியின் அக்கா நிலவழகியுடனும் சதீஷ்குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருநாள் ரேவதியுடன் தனியறையில் சதீஷ்குமார் இருப்பதைப் பார்த்த பத்தாம் வகுப்பு படிக்கும் ரேவதியின் மகள் அதிர்ச்சியடைந்தார். அப்போது நடந்த வாக்குவாதத்தின்போது, ரேவதியும் சதீஷ்குமாரும் சிறுமியை மிரட்டியிருக்கின்றனர்.

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

“ஒத்துழைப்பு கொடு!”

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சதீஷ்குமாரின் வக்கிரப் பார்வை, சிறுமி மீதும் படர்ந்திருக்கிறது. அதை ரேவதியிடம் கூறியபோது, ரேவதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததுதான் வேதனை. ஒருநாள் தன் மகளிடம் ‘சதீஷ்குமார் அங்கிளோட ஒரு நாள் ஜாலியா வெளியே போயிட்டு வா’ என்று ரேவதி கூறியிருக்கிறார். அதற்குச் சிறுமி சம்மதிக்கவில்லை. அதனால் சிறுமியை சதீஷ்குமாரும் ரேவதியும் சேர்ந்து டார்ச்சர் செய்திருக்கின்றனர். ரேவதியைச் சந்திக்க வரும்போதெல்லாம் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் சதீஷ்குமார்.

அதைச் சிறுமி தன் அம்மா ரேவதியிடமும், பெரியம்மா நிலவழகியிடமும் கூற... அவர்களோ, ‘அந்த ஆள்கிட்ட ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கியிருக்கோம். ஐபோன் வாங்கித் தந்திருக்கான். நீ ஒருநாள் மட்டும் படுக்கையில அந்தாளோட அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... இல்லைன்னா உன்னையும் உன் அப்பாவையும் அவர் ஏதாச்சும் செஞ்சுடுவார். அவர் போலீஸ் தெரியும்ல...’ என்று மிரட்டியிருக்கின்றனர். பிறகு சதீஷ்குமாரும் சிறுமியிடம், ‘நீ என்கூட படுக்கலைன்னா உங்கப்பன் மேல கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். அப்போதும் சிறுமி உடன்பட மறுக்கவே, துப்பாக்கியைச் சிறுமியின் தலையில் வைத்து மிரட்டியபடியே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில் பாலியல் மிரட்டல்கள் அதிகரிக்கவே, கடந்த மே மாதம் அந்தச் சிறுமி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். நல்லவேளையாக உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை.

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமியைப் பார்ப்பதற்காக, பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த தன் பாட்டியிடம் (அப்பாவின் அம்மா), கண்ணீருடன் தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லிக் கதறியிருக்கிறார் சிறுமி. உடனடியாக பாட்டி, சிறுமியின் தந்தை பாலாஜியிடம் இந்த விஷயங்களையெல்லாம் சொல்ல, கேட்டு அதிர்ந்துபோயிருக்கிறார். அந்த எஸ்.ஐ-க்கு பயந்து நேரில் ஸ்டேஷனுக்குச் செல்லாமல், ஆன்லைனில் போலீஸ் டி.ஜி.பி., சென்னை பெருநகர கமிஷனர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார்களை அனுப்பினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே சிறுமியின் தந்தைக்கு சதீஷ்குமாரிடமிருந்து போனில் மிரட்டல் வந்திருக்கிறது” என்றார் வழக்கறிஞர் குமரன்.

‘என்னதான் நடந்தது?’ என்று சிறுமியின் தந்தை பாலாஜியிடம் கேட்டோம். ``ஆரம்பத்துல அந்த எஸ்.ஐ-யை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து ஃப்ரெண்டுன்னு அறிமுகப்படுத்தினா என் மனைவி. அப்ப எனக்கு எந்தச் சந்தேகமும் வரலை. ஒருநாள் என் மகளோட பிறந்தநாளைக்கு மிட்நைட் 12 மணிக்கு அந்த எஸ்.ஐ கேக்கோடு வீட்டுக்கு வந்தப்பதான் சந்தேகம் வந்துச்சு.அதுக்கப்புறமா, கொஞ்ச நாள்ல ரேவதியோட நடவடிக்கைகள் ரொம்பவே மாறிப்போச்சு. அவளை நான் கண்டிச்சு, புத்திமதி சொன்னேன்... அதற்கு அவள், ‘நாங்க ரெண்டு பேரும் கவர்மென்ட் உத்தியோகம்...’ என்று என்னை மட்டம் தட்டினாள். தொடர்ந்து வார்த்தைகளால் பல நாள்கள் என்னை வேதனைப் படுத்தியதால், நான் விவாகரத்து வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். என் மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு பிரிந்துவிடலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்குள்தான் என் மகள் தற்கொலைக்கு முயன்றாள். அந்தச் சமயத்தில் என் அம்மா மூலம், சதீஷ்குமார் என் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான் என்ற தகவல் தெரியவந்ததும், என்னால் தாங்கவே முடியவில்லை. ஆன்லைன் மூலம் நானும் என் மகளும் புகார் அளித்தோம். ஆனால் பெரிதாக நடவடிக்கை இல்லை. மாறாக சதீஷ்குமாரிடமிருந்து மிரட்டல்தான் வந்தது” என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் விம்மினார்.

குமரன்
குமரன்

வீட்டைச் சுற்றிவளைத்த ரெளடி கும்பல்!

கண்களைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்தவர், “இதுக்கு நடுவுல என் மனைவி என்னிடம் கோபித்துக்கொண்டு அக்கா நிலவழகி வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அம்மாவைச் சமாதானப்படுத்தி அழைத்துவரலாம் என்று நினைத்து, பெரியம்மா வீட்டுக்குப்போன என் மகளை அவங்க பெரியம்மா ‘எல்லாம் உன்னாலதாண்டி’னு செருப்பாலேயே அடிச்சு டார்ச்சர் பண்ணியிருக்கா. என் குழந்தை அழுதுக்கிட்டே எனக்கு போன் செய்யவும், நான் பதறியடிச்சுக்கிட்டு அங்கே போய் மகளை அழைச்சுக்கிட்டு பைக்குல வந்துக்கிட்டிருந்தேன். பின்னாலேயே நாலைஞ்சு ஆட்டோக்கள்ல யார் யாரோ எங்களைத் துரத்தினாங்க. எஸ்.ஐ சதிஷ்குமார்தான் ஆட்களை அனுப்பியிருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு வேகமா என் அம்மா வீட்டுக்குப் போய் கதவை அடைச்சுக்கிட்டோம். ஆனா, அந்தக் கும்பல் கதவு, ஜன்னலையெல்லாம் தட்டி ‘வெளியே வாடா’னு மிரட்டிச்சு. அப்பதான் என் பொண்ணு ஆன்லைன்ல புகார் கொடுத்தப்ப குறிச்சுவெச்சிருந்த துணை கமிஷனர் நம்பருக்கு போன் பண்ணினா. நாங்க ரெண்டு பேரும் என்ன நடக்குதுன்னு லைவ்வா போலீஸுக்குக் காட்டினோம். கொஞ்ச நேரத்துலயே போலீஸ் வந்து எங்களை மீட்டுட்டாங்க” என்று கண்ணீருடன் அவர் விவரித்தபோது பகீர் என்றிருந்தது.

சதீஷ்குமாருடன் பணியாற்றிய சில போலீஸாரிடம் பேசினோம். ``அவனுக்குள்ள இப்படியொரு வக்கிரம் இருக்கும்னு தெரியலை. 2011-ல தேர்வு எழுதி இந்த வேலைக்குச் சேர்ந்தான். மாதவரம் காவல் சரகத்துல துணை கமிஷனரோட ஸ்பெஷல் டீமில் திறமையா செயல்பட்டான்னு உயரதிகாரிகள்கிட்ட பாராட்டும் விருதும் வாங்கியிருக்கான். அதனாலேயே அவன்மேல வந்த புகாரையெல்லாம் சமாளிச்சிருக்கான்னு நெனைக்கிறோம். இத்தனைக்கும் அவனுக்குக் கல்யாணமாகி குழந்தைகளும் இருக்குது. அவனோட நடவடிக்கைகளைவெச்சு சொல்றோம்... அவன் இன்னும் சில குற்றவாளிகளோட மனைவிகள்கிட்டயும் தொடர்புவெச்சுருக்கான்னு சந்தேகமா இருக்கு. அதனால, இன்னும் எத்தனை குடும்பம் இவனால பாதிக்கப்பட்டிருக்குன்னு தெரியலை. உயரதிகாரிகள்தான் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்” என்றார்கள் ஆதங்கத்துடன்!

எஸ்.ஐ சதீஷ்குமார், ரேவதி, நிலவழகி ஆகியோர்மீதான பாலியல் தொல்லை புகாரை விசாரித்த மாதவரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

பாதுகாப்பு தர வேண்டிய காவலரும், உலகின் உச்சபட்ச அரவணைப்பைத் தரும் தாயும் ஒரு சிறுமியை இப்படிச் சித்ரவதை செய்திருப்பது நம்பவுவதற்குக் கடினமான கொடூரமாக இருக்கிறது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையும், சிறுமிக்கு நம்பிக்கையும் ஆலோசனையும் தர வேண்டியது அரசின் கடமை!