அரசியல்
Published:Updated:

“உனக்கு பேய் பிடிச்சிருக்கு” - இளம்பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ..!

இளம்பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ..!
பிரீமியம் ஸ்டோரி
News
இளம்பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ..!

கோவையைச் சேர்ந்த அந்தப் பெண் கொடுத்த முதல் புகாரில் ஆண்ட்ரூஸ் மீது பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தோம்.

இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தி ஏமாற்றியதோடு, அவரின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்த குற்றச்சாட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இது தொடர்பாக, அந்த இளம்பெண் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன!

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல். 55 வயதாகும் இவர், சென்னை பரங்கிமலை காவல் சரகத்தில் மோட்டார் வாகனப் பராமரிப்புப் பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் ஆண்ட்ரூஸுக்கு 2021-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. வெளிநாட்டிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் சி.எஃப்.ஓ-வாகப் பணியாற்றிவந்த அந்தப் பெண், சமூக சேவையில் ஆர்வம்கொண்டவர். அது தொடர்பாக போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஆண்ட்ரூஸிடம் ஓர் உதவி கோரியிருக்கிறார். அடுத்தடுத்த சந்திப்புகளுக்குப் பிறகு இருவரும் நெருங்கிப் பழகவே, திருமணம் செய்துகொள்ளாமல் ‘லிவிங் டுகெதர்’ உறவுமுறையில் வாழ்ந்துவந்திருக்கின்றனர்.

“உனக்கு பேய் பிடிச்சிருக்கு” - இளம்பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ..!

இந்த நிலையில், ஆண்ட்ரூஸின் சில நடவடிக்கைகள் அந்தப் பெண்ணுக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது. மேலும் ஆண்ட்ரூஸ், அந்தப் பெண்ணிடம் “உனக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனால்தான் இப்படி அதிகம் கோபப்படுகிறாய்” என்று கூறி சில பாதிரியார்களிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு யாரோ பில்லி, சூனியம் வைத்திருப்பதாகவும் அதற்காக ஜெபம் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் நம்பிக்கையில்லாத அந்தப் பெண், ஆண்ட்ரூஸிடமிருந்து விலகத் தொடங்கியதால் இருவருக்குமிடையே பிரச்னை எழுந்திருக்கிறது.

இதையடுத்து கடந்த 27.1.2022, 15.5.2022 ஆகிய தினங்களில் ஆண்ட்ரூஸ் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண். அதில், போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஆண்ட்ரூஸ் தன்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், ஆண்ட்ரூஸின் நண்பர் சுந்தர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் சுந்தரை மட்டும் கைதுசெய்தனர். ஆண்ட்ரூஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதால் கைதுசெய்யப்படவில்லை.

ஆண்ட்ரூஸ் கால்டுவெல்,  ஜோஸ் தங்கையா
ஆண்ட்ரூஸ் கால்டுவெல், ஜோஸ் தங்கையா

இதனால் அந்தப் பெண், உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆண்ட்ரூஸைத் தனிப்படை போலீஸார் கொல்கத்தாவில் வைத்து கைதுசெய்து சென்னைக்குக் கடந்த 13.1.2023 அன்று அழைத்துவந்தனர். தற்போது ஆண்ட்ரூஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையாவிடம் பேசினோம். ``கோவையைச் சேர்ந்த அந்தப் பெண் கொடுத்த முதல் புகாரில் ஆண்ட்ரூஸ் மீது பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தோம். உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், ஆண்ட்ரூஸின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதும், அவர் 45 நாள்கள் தலைமறைவாகிவிட்டார். குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.

தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``தலைமறைவாக இருந்த ஆண்ட்ரூஸ் காவல்துறையில் பணியாற்றியதால் ரொம்பவே புத்திசாலித்தனமாகச் செயல்பட்டார். தன்னுடைய பழைய செல்போன் நம்பர், செல்போன் அனைத்தையும் கைவிட்டு, பேசிக் மாடல் செல்போனில் புதிய சிம்கார்டைப் பயன்படுத்தி வந்தார். அந்த போனை சுவிட்ச் ஆஃப் செய்துவைத்துவிட்டு தன்னுடைய வழக்கறிஞருக்கு மட்டும் பேசிவந்தார். அதன் அடிப்படையில்தான் கொல்கத்தாவில் ஆண்ட்ரூஸ் தலைமறைவாக இருப்பதைக் கண்டறிந்தோம். அவர் ரயில் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் சென்றுகொண்டிருந்தார். கொல்கத்தாவிலிருந்து வேறு இடத்துக்குச் செல்ல ரயில் நிலையத்தில் ஆண்ட்ரூஸ் காத்துக்கொண்டிருந்தபோது அவரை நாங்கள் கைதுசெய்தோம்” என்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஆண்ட்ரூஸ் உதவி செய்வதைப்போல நடித்து, அந்தப் பெண்ணிடமிருந்து பணம், சொத்துகளை அபகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஆண்ட்ரூஸின் சுயரூபம் தெரிந்ததும், அவரைவிட்டு விலக அவர் முடிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆண்ட்ரூஸ், அந்தப் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து, அவரின் வீட்டுக்குள் வீசியிருக்கிறார். மேலும், ஆண்ட்ரூஸின் நண்பரான முன்னாள் ராணுவ வீரர் சுந்தரும் அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது தொடர்பாகப் புகார் தெரிவித்தபோது, சுந்தர் மட்டுமே கைதுசெய்யப்பட்டார். ‘ஏன் போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஆண்ட்ரூஸைக் கைதுசெய்யவில்லை?’ என நீதிபதி கேள்வி எழுப்பிய பிறகே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

பொதுச் சமூகத்துக்குச் சொல்லாமல், இருவர் இணைந்து வாழ்வது அவரவர் விருப்பம். ஆனால், அதிலிருக்கும் சில ஆபத்துகளையும் நாம் புரிந்துகொள்வது அவசியம்!