பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரணை கைது செய்யுமாறு இந்தியாவின் முக்கியமான மல்யுத்த வீரர்கள், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிக்கையாளர் மீது, காவல்துறை தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.

பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண், மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும், பிரிஜ் பூஷன் பதவி விலக வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தைக் கலைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பஜ்ரங் புனியா உட்பட மல்யுத்த வீரர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர் சாக்ஷி ஜோஷி, போராட்டக்களத்தில் நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுத்து ட்வீட் செய்துள்ளார். அதை கவனித்த காவல்துறை, வீடியோ எடுப்பதைத் தடுக்க முயன்றுள்ளது. அப்போது பெண் காவலர் ஒருவர், சாக்ஷியை கீழே தள்ளியுள்ளார். அவருடைய ஆடையும் கிழிக்கப்பட்டுள்ளது. சாக்ஷியை காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இத்தனை கொடுமைகளைச் செய்த காவல்துறை, இரவு ஒன்றரை மணிக்கு சாக்ஷியை தனியாக சாலையில் தவிக்கவிட்டு காவல்துறை அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு சென்றுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையே, இவ்வாறு நடந்துகொண்டதைக் கண்டித்து எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.