சென்னை, வடபழனி கனகப்பா தெருவில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் சந்தேகப்படும்படி பலரும் வந்துபோவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவலையடுத்து, அந்த விடுதியின் செயல்பாடுகளைப் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கண்காணிப்பு செய்தனர்.

தொடர் கண்காணிப்பில் அந்த விடுதியில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. தகவல் உறுதியானதும், பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவலர்கள் அந்த விடுதியில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த விடுதியில் ஏழு பெண்களை அடைத்துவைத்து பாலியல் தொழில் நடைபெற்றது தெரியவந்தது. அதையடுத்து, அந்த ஏழு பெண்களையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
அதோடு, பெண்களைச் சட்டவிரோதமாக அடைத்துவைத்து பாலியல் தொழில் நடத்திவந்த அந்த விடுதியின் மேலாளர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரையும். திரிபுராவைச் சேர்ந்த விடுதியின் உதவி மேலாளர் கணைதாஸையும் போலீஸார் கைதுசெய்தனர்.

மேலும், தலைமறைவாக இருக்கும் நபர் ஒருவரையும் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர். மேலும், விடுதியிலிருந்து மீட்கப்பட்ட ஏழு பெண்களும் நீதிமன்ற உத்தரவுப்படி மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.