Published:Updated:

வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி அலுவலகம் முற்றுகைப் போராட்டம்! - தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு

வேங்கைவயல்
News
வேங்கைவயல்

``இந்திய அளவில் துப்புரவுப் பணி சார்ந்த விஷவாயு மரணங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக, தமிழ்நாடு இருப்பது அதிர்ச்சிரமான உண்மை. இதற்கு எதிரான தொடர் போராட்டங்களைத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திவருகிறது.”

Published:Updated:

வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி அலுவலகம் முற்றுகைப் போராட்டம்! - தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு

``இந்திய அளவில் துப்புரவுப் பணி சார்ந்த விஷவாயு மரணங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக, தமிழ்நாடு இருப்பது அதிர்ச்சிரமான உண்மை. இதற்கு எதிரான தொடர் போராட்டங்களைத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திவருகிறது.”

வேங்கைவயல்
News
வேங்கைவயல்

வேங்கைவயல் சம்பவத்தில், புகார்தாரர்களையே விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தும் சிபிசிஐடி-யின் செயலைக் கண்டித்து, திருச்சி அலுவலகத்தை முற்றுகையிடப்போவது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டங்களை அறிவித்திருக்கிறது.

தீண்டாமைக் கொடூரம்
தீண்டாமைக் கொடூரம்

சமீபத்தில் பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழுக் கூட்டத்தின் முடிவுகள் அடிப்படையில், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "வேங்கைவயல் சம்பவத்தில் நீதி கேட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் தொடர்ந்து போராடிவருகின்றன.

விசாரணையை மேற்கொண்டுவரும் சிபிசிஐடி-யோ, வேங்கைவயல் பட்டியலின மக்களையே விசாரணை என்ற பெயரால் துன்புறுத்துகிற செய்தி தினம் தினம் வந்துகொண்டிருக்கிறது. மனிதக்கழிவு கலந்த நீரைக் குடித்தவர்களையே குற்றவாளிபோல் தினசரி விசாரித்துவருவது விநோதமாக இருக்கிறது. எனவே, உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்யக் கோரி மார்ச் 3-ம் தேதி திருச்சி சிபிசிஐடி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

அடுத்து, பட்டியலின மக்கள்மீது அதிகரித்துவரும் சாதிவெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திடவும், எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்தவும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட வரையறைகளைப் பாதுகாத்திடக் கோரியும் அகில இந்திய அளவில் பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான முன்னணி சார்பில் திருச்சி, திருநெல்வேலி, கடலூர், திருப்பூர், வேலூர் மாநகராட்சிகளில் மார்ச் 14 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வேங்கைவயல் பட்டியல் சமூக மக்கள்
வேங்கைவயல் பட்டியல் சமூக மக்கள்

அடுத்ததாக, சாதியின் அடையாளங்களை ஒழிக்காமல் சாதியை, அதன் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்பதால், தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் சாதிக்கு ஒரு சுடுகாடு என்று இருப்பதை மாற்றி 'ஒரே ஊரு ஒரே சுடுகாடு' என்ற முழக்கத்துடன் அண்ணல் அம்பேத்கர் பிறந்ததினத்தில் கருத்தியல் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

அடுத்து, இந்திய அளவில் துப்புரவுப் பணி சார்ந்த விஷவாயு மரணங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது அதிர்ச்சிரமான உண்மை. இதற்கு எதிரான தொடர் போராட்டங்களை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திவருகிறது. இப்போதும் துப்புரவுப் பணிகளிலிருந்து மனிதர்களை விடுவிக்கும் புதிய கருவிகளை உருவாக்குகிற நோக்கத்துடன் ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் துப்புரவுப் பொறியியல்துறையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் நான்காவது வாரத்தில் சென்னையில் கவன ஈர்ப்பு மாநாடு நடைபெறும்.

அடுத்ததாக, இந்தியாவின் மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் சாதி மற்றும் மதரீதியான பாராபட்சங்கள் கொடூரமாகக் கடைபிடிக்கப்படுவதையும், அதனால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டுவருவதையும் நாடு கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் எந்த வரைமுறையும் இல்லாமல் இட ஒதுக்கீடு முறைமைகள் மீறப்படுவதும் தொடர்கிறது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டிய 1,000 இடங்கள் ஒவ்வோர் ஆண்டும் இட ஒதுக்கீட்டு மீறல்களால் பறிபோகின்றன. இந்த நிலையில் சென்னையில் ஐஐடி நிறுவனங்களின் அநீதிகளுக்கு எதிரான சிறப்புக் கருத்தரங்கம் ஓரிரு மாதங்களில் நடைபெறும்.

சாமுவேல்ராஜ்
சாமுவேல்ராஜ்

தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் இன்னமும் பல்வேறு கிராமங்களில் குடி ஊழியம் என்கிற கொடூரமான கொத்தடிமை முறை நீடித்துவருகிறது. சலவைத் தொழில் செய்வோர், முடி திருத்துவோர், மயானப் பணியாளர்கள் உள்ளிட்ட பணிகள் தலைமுறை தலைமுறையாகச் சில குறிப்பிட்ட குடும்பங்களின் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த தலைமுறைகள் இந்தப் பணிகளிலிருந்து விடுபட முயன்றாலும்கூட, குடி ஊழியம் செய்திட வேண்டும் என்று இந்தக் குடும்பங்களின் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுகிறது. எனவே, ` 'குடிஊழியம்’ எனும் குலத்தொழில் செய்ய மாட்டோம்; தலைமுறை இழிவை ஏற்க மாட்டோம்’ என்கிற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் ஆய்வுகளும் தலையீடுகளும் செய்யப்படும்." என்று தெரிவித்திருக்கிறார்.