விழுப்புரம் அருகேயுள்ள கிராமம் மேல்பாதி. அங்கு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில், பட்டியல் சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு, ஆதிக்க சமூகத்தினர் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது, சகோதரி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காகக் கோயிலுக்குள் சென்ற கதிரவன் என்ற பட்டியலின இளைஞர் ஆதிக்க சமூகத்தினரால் தாக்கப்பட்டார். உடனே, அந்த இளைஞரை மீட்கச் சென்ற அவரின் பெற்றோரும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்று இரவே, பாதிக்கப்பட்ட தரப்பு மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இரு தரப்பிலும் வழக்கு பதிவுசெய்த போலீஸார், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க மேல்பாதி கிராமத்தில் காவல்துறையினரைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர். அதைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் அழைத்த மாவட்ட நிர்வாகம், ஆர்.டி.ஓ., எஸ்.பி தலைமையில், மூன்று முறை சமரசப் பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால், சுமுகமான முடிவு எட்டப்படாமல் இருந்துவந்த நிலையில்... அரசியல் கட்சியினருடன், பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டனர். இந்த நிலையில், கடந்த 20, 24-ம் தேதிகளில் இரு தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி.
24-ம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது, "இரு தரப்பினரும் சமாதானமாகப்போவதாக ஒப்புக்கொண்டார்கள். அவர்கள், அதற்கான தேதியை தங்களுக்குள்ளாகப் பேசி, முடிவுசெய்துவிட்டுச் சொல்வதாக தெரிவித்திருக்கின்றனர். தேதி முடிவு செய்து சொன்னதும் கோயிலுக்குள் ஒன்றாகச் செல்வார்கள்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார் மாவட்ட ஆட்சியர் பழனி. இதன் மூலம் 'சமத்துவத்துக்கான பதில் கிடைத்ததே' என மேல்பாதி கிராமத்துப் பட்டியலின மக்கள் சற்று ஆறுதல் அடைவதற்குள், மீண்டும் முதலிலிருந்து எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன.

பட்டியலின மக்கள் ஆலயப் பிரவேசம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதிக்க சமூகத்தினர், பள்ளிச் சிறுவர்கள், இளம் தலைமுறையினர் மற்றும் ஊர்மக்களைக் கோயில் பகுதியில் திரட்டி நேற்றைய தினம் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
"இந்து சமய அறநிலையத்துறையே உள்ளே வராதே, காவல்துறையே வெளியே போ, உரிமை காக்கப் போராடுவோம், பண்பாடு, கலாசாரம் காக்கப் போராடுவோம்" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, ஆர்.டி.ஓ தலைமையில் மீண்டும் சமரசப் பேச்சுவார்த்தை என்ற முடிவை எடுத்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்.
'தீண்டாமை ஒரு பாவச்செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம். தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்' எனும் வாசகங்களை பாடப் புத்தகங்களில் இடம்பெற செய்திருக்கும் அரசு... சக மனிதர்களைக் கோயிலுக்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான போராட்டத்தில் பள்ளி மாணவர்களை முன்னிறுத்துவதை வேடிக்கை பார்ப்பதோடு, சமத்துவத்தை நிலைநாட்ட இன்னும் எத்தனை சமரசப் பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வுகாணப்போகிறது..?