Published:Updated:

புதுச்சேரி: 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை - 111 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை!
News
பாலியல் வன்கொடுமை!

3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 111 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம்.

Published:Updated:

புதுச்சேரி: 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை - 111 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 111 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம்.

பாலியல் வன்கொடுமை!
News
பாலியல் வன்கொடுமை!

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் குழந்தைகளை, புதுச்சேரி கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் தனது வாத்துப் பண்ணையில் கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார் என்று கடந்த 2020-ம் ஆண்டு புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவுக்கு ரகசியத் தகவல் சென்றது. அதனடிப்படையில் அங்கு சென்று ஆய்வு நடத்திய குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுவினர், 2020, அக்டோபர் 21-ம் தேதி இரண்டு சிறுமிகளை மீட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மறுநாள் 22-ம் தேதி கன்னியப்பனின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மற்ற மூன்று சிறுமிகளும் மீட்கப்பட்டனர். அதையடுத்து காப்பகங்களில் தங்கவைக்கப்பட்ட அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டது.

குற்றவாளி பசுபதி
குற்றவாளி பசுபதி

அதன் பிறகு அவர்கள் இயல்புநிலைக்குத் திரும்பியதும்,  கொத்தடிமைகள் என்றரீதியில் சிறுமிகளிடம் விசாரணையைத் தொடங்கிய குழந்தைகள் பாதுகாப்புக்குழுவினரும், காவல்துறையினைரும் அவர்கள் பேசப் பேச அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். வாத்துகளை மேய்க்கும் வேலைக்காக சிறுமிகளை விலைகொடுத்து வாங்கும் கன்னியப்பன், இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்து விலைக்குக் கேட்டிகிறார். ஒரு குழந்தைக்கு ரூ.3,000 எனப் பேசி, ரூ.500 மட்டும் முதலில் தருவதாகவும், மீதித் தொகையை தவணை முறையில் தருவதாகவும் கூற, 4 முதல் 10 வயது வரை உள்ள ஐந்து சிறுமிகளை அப்போதே அவருடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள். மீதித்தொகையைக் கேட்டுவரும் பெற்றோர்களுக்கு அவ்வப்போது ரூ.50, ரூ.100 என்று மட்டும் கொடுத்துவந்த கன்னியப்பன், அந்தச் சிறுமிகளை திண்டிவனம், விழுப்புரம், திருச்சிற்றம்பலம் எனப் பல பகுதிகளுக்கு வாத்து கிடை போடுவதற்கு அனுப்பிவந்திருக்கிறார்.

அப்போது அந்தச் சிறுமிகளில் இருவருக்கு 6 வயது, மற்றவர்களுக்கு 8 முதல் 13 வயது இருக்கும். அந்தச் சிறுமிகள் அனைவரையுமே கன்னியப்பன், அவர் மகன் ராஜ்குமார், அவர்களது உறவினர்கள், பண்ணையில் வேலைசெய்யும் பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவருமே இரண்டு வருடங்களாக, குடிபோதையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வலி தாங்க முடியாமல் அழுத சிறுமிகளுக்கு, வலிக்காமல் இருக்க ஹான்ஸ், பீர் உள்ளிட்ட போதை வஸ்துகளைப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். 13 வயது சிறுமியை இரவில் தனியே அழைத்துச் செல்வதற்காக, கொசு கடிக்கும் என்று கூறி மற்ற சிறுமிகளை சாக்கு பைகளுக்குள் சென்று படுத்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டு சாக்கு பைகளுக்குள் செல்லும் சிறுமிகளை அப்படியே மூட்டையாகக் கட்டி மறுநாள் காலையில் அவிழ்த்துவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தீர்ப்பு
தீர்ப்பு

அவர்களுடன் செல்ல மறுத்த சிறுமிகளின் கை கால்களை கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதன் பிறகு பிறப்புறுப்பில் மிளகாய்பொடியைத் தூவி சித்ரவதை செய்திருக்கிறார்கள். அதேபோல பாட்டில்களில் சிறுநீரைக் கழித்து அதைக் குடிநீருக்கு பதிலாகக் குடிக்கவைத்திருக்கிறார்கள். இரு சிறுமிகளின் வளர்ப்புத் தந்தையான ஆறுமுகம் என்பவரே சிறுமிகளைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், பெண் குழந்தைகள் என்று மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக ஆண்களுக்கான உடையைக் கொடுத்து, அவர்களைப்போலவே முடியையும் வெட்டிவிட்டு சாதுர்யமாகச் செயல்பட்டிருந்தார் கன்னியப்பன். சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின்போது 13 வயதுள்ள சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

அதையடுத்து வாத்துப் பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவர் மனைவி சுபா, மகன் ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, அய்யனார், ஒரு சிறுவன் உள்ளிட்ட 11 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அதையடுத்து கடந்த 2022, டிசம்பர் மாதம் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வாத்துப் பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், பசுபதி, சிவா, மூர்த்தி ஆகிய ஆறு பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காத்தவராயன், சுபா ஆகிய இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆறுமுகத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதையடுத்து இதே வழக்கில் அங்கு பணிபுரிந்த மூன்று சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அந்தச் சிறுவர்களிடம் குழந்தைகள் நலக்குழுவினர் நடத்திய விசாரணையில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, மூன்று சிறுவர்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் வாத்துப் பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், வேலு, மூர்த்தி, பசுபதி உள்ளிட்ட ஆறு பேர் மீது மேலும் தனியாக ஒரு வழக்கு பதிவுசெய்யப்படடிருந்த நிலையில், அந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று மாலை தீர்ப்பளிக்கப்பட்டது. பசுபதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மூன்று 20 ஆண்டுகள், மூன்று 10 ஆண்டுகள், மூன்று 5 ஆண்டுகள், மூன்று 2 ஆண்டுகள் என மொத்தம் 111 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.14,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஏற்கெனவே சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இந்த பசுபதிக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தலா ரூ.4,00,000/- லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்படாததால் கன்னியப்பன் உள்ளிட்ட ஐந்து பேரை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.