அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

‘மா...மா... மா...மா...’ - சவக்குழிக்குள் முனகிய மனைவி... கொலைக்கு உதவிய க்ரைம் நாவல்...

உழந்தை ஏரிக்கரை
பிரீமியம் ஸ்டோரி
News
உழந்தை ஏரிக்கரை

9 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய ரௌடி!

பரோலில் வந்து மனைவியைக் கொலைசெய்து புதைத்துவிட்டு, மீண்டும் சிறைக்குச் சென்று விடுதலையான ரௌடி ஒருவர், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சடலத்தை மறைக்க முயன்றபோது போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்!

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில், கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் ரௌடி பாஸ்கர். இவர் பிரபல தாதா கர்ணாவின் தம்பி. முதலியார்பேட்டையைச் சேர்ந்த இவர், 1997-ம் ஆண்டு பெரியார் நகரைச் சேர்ந்த செல்வம் என்பரைக் கொலைசெய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, தன் அண்ணன் கர்ணாவுடன் 2000-ல் சிறைக்குச் சென்றார்.

பாஸ்கர்
பாஸ்கர்

இவர் 2013-ம் ஆண்டு பரோலில் வெளிவந்தபோது இவரின் மனைவி எழிலரசி மாயமானார். பின்னர் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குச் சென்ற பாஸ்கர், நன்னடத்தை அடிப்படையில் 2015-ம் ஆண்டு ‘முன் விடுதலை’யாகி தனது இரண்டு மகன்களுடன் முதலியார்பேட்டையில் வசித்துவந்தார். இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் 22-11-2022 அன்று நள்ளிரவு முதலியார்பேட்டை உழந்தை ஏரிக்கரையில், பாஸ்கர் உள்ளிட்ட சிலர் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி, மூடியதாக முதலியார்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

பாஸ்கர் பெயரைக் கேட்டதும் சுறுசுறுப்பான போலீஸ், அன்று அவருடன் இருந்த வேல்முருகன், சரவணன், மனோகர் மூவரையும் விசாரித்தது. இதில், ‘2013-ம் ஆண்டு பாஸ்கருடன் இணைந்து அவரின் மனைவி எழிலரசியைக் கொன்று அங்குதான் புதைத்தோம்’ என்று அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாஸ்கரைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

‘மா...மா... மா...மா...’ - சவக்குழிக்குள் முனகிய மனைவி... கொலைக்கு உதவிய க்ரைம் நாவல்...

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ‘‘கொலை வழக்கில், சிறைக்குச் சென்ற பாஸ்கர், அங்கிருந்தபடியே கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் போன்ற வேலைகளைத் தொடர்ந்தான். இதற்காக வெளியில் இருந்த தன்னுடைய அண்ணன் தாதா கர்ணாவின் மச்சான் ரௌடி சுருட்டை செந்திலை, பயன்படுத்திக்கொண்டான். லட்சக்கணக்கில் வசூலாகும் மாமூலைக் கொடுப்பதற்காக பாஸ்கரின் வீட்டுக்குச் சென்று வரும்போது பாஸ்கரின் மனைவி எழிலரசிக்கும், சுருட்டை செந்திலுக்கும் ஏற்பட்ட பழக்கம், திருமணம் தாண்டிய உறவாக மாறியது. அதனால் எழிலரசியும் செந்திலும் அடிக்கடி தனிமையில் சந்திக்க ஆரம்பித்தனர். அப்போது காரைக்கால் சிறையிலிருந்த பாஸ்கருக்கு அவர் கூட்டாளிகள் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்தது.

2013-ம் ஆண்டு, மார்ச் முதல் வாரத்தில் ஒரு மாதம் பரோலில் வந்த பாஸ்கர், எழிலரசியிடம் இது குறித்துக் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபித்துக்கொண்ட எழிலரசி, கிருமாம்பாக்கத்தில் இருக்கும் தன் தங்கை வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதற்கடுத்த நாளே அவரைக் கொலைசெய்ய முடிவெடுத்த பாஸ்கர், உழந்தை ஏரிக்கரையில் கீற்றுக் கொட்டகையைப் போட்டு அதற்குள் மூன்று அடிக்கு குழியைத் தோண்டிவைக்கும்படி தன் நண்பர்கள் வேல்முருகன், சரவணன், மனோகரிடம் சொல்லிவிட்டு அன்று இரவு எழிலரசியிடம் சென்றிருக்கிறான். சேர்ந்து வாழலாம் என்று கூறி அவரை காரில் ஏற்றிக்கொண்டு வந்தவன், வரும் வழியில் எழிலரசியின் புடவையாலேயே அவரின் கழுத்தை நெரித்திருக்கிறான். அதன் பிறகு நள்ளிரவு வெட்டப்பட்டிருந்த குழிக்குள் எழிலரசியைத் தள்ளியபோது, ‘மா...மா... மா...மா...’ என்று மெல்ல முனகியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பாஸ்கர் குழிக்குள் இறங்கி, கைகளால், அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான். யூரியாவைக் கொட்டிப் புதைத்தால் சடலம் விரைவில் மக்கி, தடயம் மறைந்துவிடும் என்று இரண்டு மூட்டை யூரியாவை எழிலரசியின் மீது கொட்டி குழியை மூடியிருக்கிறான்.

வேல்முருகன், சரவணன், மனோகர்
வேல்முருகன், சரவணன், மனோகர்

அதன் பிறகு ‘எழிலரசி யாருடனோ ஓடிவிட்டார்’ என்று தகவலைப் பரப்பிவிட்டு மீண்டும் சிறைக்குச் சென்ற பாஸ்கர், 2015-ல் விடுதலையானான். இந்த நிலையில்தான் எழிலரசியைப் புதைத்த அந்த ஏரிக்கரையில் சமீபத்தில் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டது பொதுப்பணித்துறை. அந்த வழியில் இருக்கும் தனது கொட்டகையைத் தோண்டினால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த பாஸ்கர், அது தனது வீடு என்றும், அங்கு சுவர் அமைக்கக் கூடாது என்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். ஆனால், அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘எழிலரசியின் சடலம் கிடைத்தால் மாட்டிக் கொள்வோம்’ என்று நினைத்த பாஸ்கரும், அவனுடைய நண்பர்களும் எழிலரசியைப் புதைத்த இடத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தோண்டியிருக்கிறார்கள். ஆனால் யூரியாவைக் கொட்டிப் புதைத்ததால் உடல் முழுதாக மக்கிவிட்ட நிலையில், எழிலரசியின் எலும்புக்கூடும், அவர் கட்டியிருந்த புடவையும் மட்டுமே கிடைத்திருக்கின்றன. யூரியா புண்ணியத்தால் வேலை எளிதாகிவிட்டது என்று நினைத்த அவர்கள், புடவையைக் கொளுத்திவிட்டு எலும்புகளை உழந்தை ஏரிக்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் கொல்லப்பட்ட எழிலரசி, பாஸ்கரின் உடன் பிறந்த அக்காள் மகள். சிறையில் இருந்த பாஸ்கர் நிறைய க்ரைம் நாவல்களைப் படித்திருக்கிறான். அதில் படித்த விஷயத்தை இந்தக் கொலைக்கும், பிணத்தை மறைக்கவும் பயன்படுத்தியதுதான் இதில் ஹைலைட்” என்றனர்.

எழிலரசியின் எலும்புகள் இன்னும் முழுமையாகக் கிடைக்காத நிலையில், ஸ்கூபா டைவர்கள் மூலம் ஏரிக்குள் தேடிவருகிறது போலீஸ். இது ஒருபுறமிருக்க, ‘பரோலில் வெளிவந்து கொலை செய்யும் அளவுக்குப் பழி உணர்ச்சியுள்ள ஒருவரை, முன் விடுதலை செய்தது எப்படி?’ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது!