முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலர். அவர் பாசமாக வளர்த்த கொம்பன் காளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தென்னலூர் ஜல்லிக்கட்டில் இறந்துபோக, அதன் நினைவாகவே, கொம்பன் 2, வெள்ளைக் கொம்பன், கருப்பு கொம்பன் என பெயரிட்டு காளைகளை வளர்த்துவந்தார். இவரது கொம்பன் காளைகள், ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கிவிட்டால், வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பிடிபடாத காளைகளாகவும் வலம் வரும். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம், வடசேரிப்பட்டியில் நடந்த போட்டியில், விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை களமிறங்கியது.

வாடிவாசலிலிருந்து விஜயபாஸ்கரின் காளை அவிழ்த்துவிடப்பட்டபோது சீறிப்பாய்ந்த காளை, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தடுப்புக்கட்டையில் மோதி, சுருண்டு விழுந்தது. பார்வையாளர் மாடத்தில் இருந்த விஜயபாஸ்கர் இதைக் கண்டு பதறிப்போய், கீழே வந்து கருப்பு கொம்பனைத் தடவிக் கொடுத்தார். இதற்கிடையே, மயங்கிய நிலையிலேயே இருந்த கருப்புக் கொம்பனை, உயர் சிகிச்சைக்காக, ஓரத்தாடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில்தான், சிகிச்சை பலனளிக்காமல் கருப்பு கொம்பன் காளை உயிரிழந்திருக்கிறது. பிறகு விஜயபாஸ்கரின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரியில் திருவப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், காணாமல்போன கருப்புக் கொம்பன் மூன்று நாள்களுக்குப் பிறகுதான் கிடைத்தது. காணாமல்போய் கிடைத்த கருப்புக் கொம்பனின் உயிரிழப்பு விஜயபாஸ்கரின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.