பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டா ராணுவ நிலைய முகாமில் கடந்த 12-ம் தேதி அதிகாலை 4:35 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலேஷ், யோகேஷ் என்ற இரண்டு ராணுவ வீரர்களும், கர்நாடகாவைச் சேர்ந்த சாகர், சந்தோஷ் என்ற இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்பாக மேஜர் அசுதோஷ் சுக்லா, "பணி முடிந்து ராணுவ முகாம் அறைகளில் நான்கு ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது வெள்ளை குர்தா பைஜாமாவுடன், முகமூடி அணிந்த இருவர், துப்பாக்கி மற்றும் அதன் கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களால் நான்கு ராணுவ வீரர்களையும் தாக்கி, துப்பாக்கிச்சூடு நடத்தி கொலைசெய்துவிட்டு, முகாமுக்கு அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் நுழைந்துவிட்டர்கள்" என்று தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில், அடையாளம் தெரியாத இருவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர்களை பஞ்சாப் காவல்துறையும், ராணுவ காவல்துறையும் தேடிவந்தன.
அதைத் தொடர்ந்து, பஞ்சாப் காவல்துறை நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக நான்கு ராணுவ வீரர்களை விசாரித்திருக்கிறது. அதில் தற்போது ஒரு ராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கைதுசெய்யப்பட்ட ராணுவ வீரரின் பெயர் கின்னர் தேசாய் மோகன் (Gunner Desai Mohan).

கின்னர் தேசாய் மோகனுக்கு, அவர்களுடன் தனிப்பட்ட பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர் நான்கு சக ஊழியர்களைக் சுட்டுக் கொலைசெய்திருக்கிறார். அந்தக் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்தச் சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு இன்சாஸ் வகை துப்பாக்கியைத் திருடியதும் இவர்தான் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
அதோடு, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விளக்கத்தைப் பெற்றதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.