விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வழியே தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு, தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் மூவேந்தன் தலைமையிலான போலீஸார் நடத்திய வாகன சோதனையில் ஒரு டன் எடையுள்ள குட்காவைக் கடத்திவந்த லாரி பிடிப்பட்டது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ``அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி வாகன சோதனைச்சாவடி வழியே வந்த வாகனங்களைச் சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக வந்த லாரியை நிறுத்தி, அதன் டிரைவரிடம் விசாரணை நடத்தினோம். இதில் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகப்பட்டு லாரியின் பின்புறத்தைச் சோதனையிட்டோம். இதில் லாரியின் பின்புறம் தரைத்தளம் புதிதாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்துகையில், குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில், லாரியின் பின்புற தரைத்தளத்துக்கு கீழே, ரகசிய இடத்தில் சுமார் 102 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் எடையுள்ள பான் மசாலா மற்றும் குட்கா பொருள்களை மறைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடத்தல் பொருள்களுடன் சேர்த்து லாரியும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக வாகன மேற்பார்வையாளர் சேலம் மாவட்டம் பண்ணப்பட்டியைச் சேர்ந்த சரவணன், லாரி ஓட்டுநர், உதவியாளர் ஆகிய மூன்று பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் பிடிபட்ட இருவரைக் கைதுசெய்து விசாரணை நடத்துகையில், லாரி ஓட்டுநர் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டியூரைச் சேர்ந்த ராஜா (21), என்பதும், மற்றொருவர் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள தெத்திகிரிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (23) என்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சத்து 22 ஆயிரத்து 900 இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.