Published:Updated:

`அரிசி மூட்டைக்கு இரும்புக் கடை ரசீது!’- 312 கிலோ கடத்தல் குட்காவை மடக்கிய போலீஸ்

போலீஸ் கைபற்றிய குட்கா பெட்டிகள்
News
போலீஸ் கைபற்றிய குட்கா பெட்டிகள் ( உ.பாண்டி )

அந்த வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகளுக்கு இடையே அட்டைப்பெட்டிகள் தென்பட்டன. அவற்றை உடைத்துப் பார்த்தபோது, தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தன.

Published:Updated:

`அரிசி மூட்டைக்கு இரும்புக் கடை ரசீது!’- 312 கிலோ கடத்தல் குட்காவை மடக்கிய போலீஸ்

அந்த வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகளுக்கு இடையே அட்டைப்பெட்டிகள் தென்பட்டன. அவற்றை உடைத்துப் பார்த்தபோது, தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தன.

போலீஸ் கைபற்றிய குட்கா பெட்டிகள்
News
போலீஸ் கைபற்றிய குட்கா பெட்டிகள் ( உ.பாண்டி )

அரிசி மூட்டைகளுக்கிடையே மறைத்துக் கடத்தி வரப்பட்ட 312 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை முதுகுளத்தூர் போலீஸார் பறிமுதல் செய்தனர். வாகனச் சோதனையின் போது சிக்கிய இதன் மதிப்பு ரூ.5.5 லட்சம் ஆகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் கைப்பற்றிய குட்கா
போலீஸ் கைப்பற்றிய குட்கா
உ.பாண்டி

பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்யத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழகத்தில் பரவலாக இது போன்ற குட்கா பொருள்கள் தடையின்றி விற்பனை ஆகிவருகின்றன. இதனால் பெயரளவிற்கே தமிழகத்தில் குட்கா விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.

போலி பில்
போலி பில்
உ.பாண்டி

இந்நிலையில் பரமக்குடி - முதுகுளத்தூர் சாலையில் உள்ள காக்கூர் பகுதியில் முதுகுளத்தூர் போலீஸார் கஜேந்திரன், மணிகண்டன், அருள்தாஸ், ஜஸ்டின் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியே வந்த தனியார் வாகனம் ஒன்றை நிறுத்தி சரக்கு ஏற்றி வந்ததற்கான ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், இரும்பு வியாபாரம் செய்யும் கடையின் பெயரில் அரிசி மூட்டைகளுக்கான போலியான இன்வாய்ஸ் பில் சிக்கியது. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் அந்த வாகனத்தைச் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகளுக்கு இடையே அட்டைப் பெட்டிகள் தென்பட்டன. அவற்றை உடைத்துப் பார்த்தபோது தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தன.

இதையடுத்து வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், அந்த வாகனத்தில் 20 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணேஷ் புகையிலை பாக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 312 கிலோ எடை கொண்ட இவற்றின் மதிப்பு ரூ.5.5 லட்சம் ஆகும். இவை சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையிலிருந்து முக்கிய ஏஜண்டான ஜியாவுல் ஹக் என்பவரிடமிருந்து ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் உள்ள சர்புதீன் என்பவருக்குக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தின் ஓட்டுநரான ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த அதன் உரிமையாளரான அய்யனார் என்ற அய்யாத்துரை, உதவியாளர் நடராஜன் ஆகியோரை முதுகுளத்தூர் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து குட்கா விற்பனைப் பணம் ரூ.27,500-யும் பறிமுதல் செய்த போலீஸார் சிக்கலைச் சேர்ந்த சர்புதீன் மற்றும் அவரது சகோதரர் சகுபர்சாதிக் ஆகியோரையும் கைது செய்தனர்.

குட்கா கடத்தியவர்கள்
குட்கா கடத்தியவர்கள்
உ.பாண்டி

ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் பெங்களூரிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குத் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கடத்தி வந்தவர்களை சமயோசிதமாகச் செயல்பட்டு மடக்கி பிடித்த முதுகுளத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கஜேந்திரன், காவலர்கள் மணிகண்டன், அருள்தாஸ், ஜஸ்டின் ஆகியோரைப் பாராட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரொக்கப்பரிசு வழங்கினார்.