Published:Updated:

``வீட்டிலிருந்தே பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்!" - ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்த இளைஞர்

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
News
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

`வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்' என ஆசைவார்தைகளைக் கூறி, ஸ்டூடியோ உரிமையாளரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published:Updated:

``வீட்டிலிருந்தே பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்!" - ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்த இளைஞர்

`வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்' என ஆசைவார்தைகளைக் கூறி, ஸ்டூடியோ உரிமையாளரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
News
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகேயுள்ள செங்கற்படைப் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் அதே பகுதியில் ஸ்டூடியோ வைத்து நடத்திவருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் இவருடைய டெலிகிராம் செயலி எண்ணுக்கு 'வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்' என்று குறுஞ்செய்தி வந்திருக்கிறது. குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டிருக்கிறார் தினேஷ் குமார். எதிர்முனையில் பேசிய நபர், `ஆன்லைன் மூலம் நாங்கள் கொடுக்கும் பணிகளைச் செய்து முடித்தால், உங்கள் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பிவைக்கப்படும். இது பகுதி நேர வேலைதான்' எனக் கூறியிருக்கிறார். அதன்படி அவர்கள் ஆன்லைன் மூலம் கொடுத்தப் பணிகளைச் செய்து முடித்திருக்கிறார் தினேஷ் குமார். அதற்குச் சொற்ப அளவிலான பணத்தை அவருடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இதனால் ஆனந்தமடைந்த தினேஷ் குமார், தொடர்ந்து அந்த ஆன்லைன் பணியில் முழுக் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அவர்கள் அடுத்தடுத்து கொடுத்த பணிகளைச் செய்து முடித்ததால், அவரது வங்கிக் கணக்குக்கு தொடர்ந்து சிறிய அளவில் பணம் அனுப்பியபடி அவரது ஆசையைத் தூண்டியிருக்கின்றனர்.

இந்த நிலையில், `முன்பணம் செலுத்தி சில ஆன்லைன் பணிகளைச் செய்து கொடுத்தால், இன்னும் அதிக வருமானம் கிடைக்கும்' எனக் கூறியிருக்கின்றனர். அதை நம்பிய தினேஷ் குமார், முதற்கட்டமாக சில ஆயிரங்களைக் கட்டியிருக்கிறார். அவர் கட்டிய பணத்தைவிட இரு மடங்காகத் திருப்பிக் கொடுத்ததால், அவர்களை முழுவதுமாக நம்பத் தொடங்கியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பணத்தை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தவர்கள், அதிக பணியைச் செய்து முடித்தும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் காலதாமதம் செய்திருக்கின்றனர். ஏற்கெனவே 3.18 லட்சம் ரூபாயைக் கட்டி, அதைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், மேலும் பணம் கட்ட வேண்டும் என தினேஷ் குமாரை நிர்பந்தித்திருக்கின்றனர்.

சைபர் க்ரைம் காவல் நிலையம்
சைபர் க்ரைம் காவல் நிலையம்

பணத்தை வாங்குவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருந்ததால் சந்தேகமடைந்த தினேஷ் குமார், இணையதளத்தில் தேடிப் பார்த்தபோது... அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பதும், தான் மோசடி நபர்களிடம் பணத்தை ஏமாந்திருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

ஆன்லைன் வேலை என ஆசைக்காட்டி, 3.18 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபர்கள்மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் தினேஷ் குமார் புகாரளித்தார்.

புகார் குறித்து சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் ராஜன் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகிறார்.