சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 6:40 மணிக்கு, வேலைக்குச் செல்ல ரயில் நிலைய பிளாட்பாரத்தில் காத்திருந்தார் இன்ஜினீயர் சுவாதி. அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் சுவாதியை வெட்டிக் கொலை செய்துவிட்டு அரிவாளோடு தப்பிச் சென்றார். இந்தக் கொலைச் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் ராம்குமார்தான் சுவாதியைக் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராம்குமாரை போலீஸார் கைதுசெய்தது காவல்துறை. அப்போது ராம்குமார், கழுத்தை அறுத்துக் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி சிறையில் மின்சார வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து சுவாதி கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததாக போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி ராம்குமார் இல்லை என்றும், அவர் சிறையில் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கோழை இல்லை எனவும் அவரின் குடும்பத்தினரும், ராம்குமாருக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம்ராஜும் தெரிவித்ததோடு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பினர்.
இந்தநிலையில், ராம்குமாரின் மரணம் தொடர்பான விசாரணை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்துவந்தது. அப்போது ராம்குமாரின் பிரேத பரிசோதனை ரிப்போரட் சமர்ப்பிக்கப்பட்டது. மருத்துவர் வேணு ஆனந்த்தும், மருத்துவர் ஆண்டாளும் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதோடு ராம்குமாரின் மூளை, இதயம், நுரையீரல், நாக்கு, கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் திசுக்களை ஹிஸ்டோபேத்தாலஜி (Histopathology) நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என ஹிஸ்டோபேத்தாலஜி நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். அந்த ரிப்போர்ட்தான் ராம்குமாரின் மரணத்தில் மறைந்திருந்த மர்ம முடிச்சுகளை அவிழவைத்திருக்கிறது.

பொதுவாக ஒருவர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார் என்றால், அவரின் மூளை, இதயம் உள்ளிட்ட உறுப்புகளின் திசுக்களில் அந்த பாதிப்புகள் தெரியும். ஆனால், ராம்குமாரின் உடல் உறுப்புகளிலுள்ள திசுக்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அப்படி எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் ராம்குமாரின் உடலில் 12 காயங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின்சாரம் தாக்கிய ஒருவர் உயிரிழந்தால், அவருக்கு 12 காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு தகவல்களும் ராம்குமாரின் மரணத்தில் அவரின் பெற்றோரும், வழக்கறிஞரும் முன்வைத்த சந்தேகங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட சுவாதிக்கும் ராம்குமாருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஒருதலைக் காதலால் சுவாதியை ராம்குமார் கொலை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையில் இருந்தபோதே ராம்குமார் சிறையில் உயிரிழந்துவிட்டதால், கொலை வழக்கு முழுமையாக விசாரிக்கப்படாமல் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது சிறையில் ராம்குமார் மரணம் தொடர்பாக நடந்த விசாரணையின்தான் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழக்கவில்லை என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். அதனால் ராம்குமார் மரணம் எப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சிறையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக ராம்குமாரின் பெற்றோரும் வழக்கறிஞரும் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர்.
Also Read
அதனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராம்குமார் மரணம், சுவாதி கொலை வழக்கை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரின் பெற்றோரும் வழக்கறிஞரும் முன்வைத்திருக்கிறார்கள். இதற்கு தமிழக காவல்துறையினர் என்ன பதில் சொல்லபோகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.