மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 30

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்!

பாதுகாப்பென நினைத்து வலைக்குள் சென்று புகுந்துகொள்ளும் மீன்கள், வலையிலிருக்கும் ஆபத்தை அறிவதில்லை. ஜெகதி மனிதர்களை நம்பினாள்.

எல்லா முயற்சிகளும் வெற்றிகளில் முடிவதில்லை. தோல்வியடையும் முயற்சிகள், சில சமயங்களில் பெரும் இழப்புகளில்தான் முடிகின்றன. குருவிகள் மூலமாக சுரேஷ் கஸ்டம்ஸில் மாட்டிக்கொண்ட செய்தி கிடைத்தபோது ஜெகதி நொறுங்கிப்போனாள்.

“செகதி, நாங்கதான் மொதல்லயே சொன்னம்ல... இது லேசான காரியமில்லன்னு. செயினு மோதிரம்னு எடுத்துக்கிட்டு வாரதெல்லாம் கஸ்டம்ஸ்காரனுக்கு மேட்டரே இல்ல. ஆனா கிலோகணக்குல பிஸ்கட்டோட மாட்டினா முழுசா சாப்ட்ருவானுங்க. பொருளும் வராது. பெண்டிங்ல இருக்கிற பழைய கேஸுலயெல்லாம் பேர சேத்துருவானுங்க. அவய்ங்க சுரேஷ டார்கெட் பண்ணி சோலிய முடிக்கிறதுக்குள்ள யாரையாச்சும் புடிச்சு சரிக்கட்டப் பாரு...”

இத்தனை காலம் அவர்கள் விளையாடிய விளையாட்டு ஆபத்தில்லாதது. இந்த விளையாட்டின் முதல் நாளிலேயே தன் தம்பியை இழந்துவிடுவோமோ எனப் பதறிப்போய்த் தனக்குத் தெரிந்த எல்லோரிடமும் உதவி கேட்டுச் சென்றாள். பிரச்னை வராதவரைதான் இந்தத் தொழிலில் சக முதலாளிகள் உதவ முடியும். பிரச்னைகளைத் தனியாகத்தான் சமாளிக்க வேண்டும். இரண்டு மூன்று வருடங்கள் உயிரைக் கொடுத்து சம்பாதித்ததையெல்லாம் ஒரே நாளில் இழந்து நின்றவர்கள் அநேகம். ஜெகதிக்கு, தான் சம்பாதித்ததை இழப்பதில் வருத்தமில்லை. ஆனால், தம்பியைப் பாதுகாக்க வேண்டும். தெரிந்த காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லோரையும் அணுகிப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. அவளிடம் குருவியாக இருக்கும் சேது அண்ணன்தான் “கோட்டச்சாமின்னு ஒரு ஆளு இருக்காரும்மா. இந்தப் பிரச்னைல உனக்கு உதவி பண்ணக்கூடிய சக்தி அந்தாளுக்கு மட்டுந்தான் இருக்கு” என ஒரு வழிகாட்டினார்.

“யாருண்ணே அவரு போலீஸா... கஸ்டம்ஸா?”

“ம்ஹூம்… மதுரைல பெரிய கை. அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, அரசியல் போக்குவரத்துன்னு தமிழ்நாட்ல இருக்குற எல்லாப் பெரிய ஆளுங்களோடயும் நெருக்கம். அவரு நெனச்சா உடனே உன் தம்பிய மீட்ற முடியும்.”

“அப்போ உடனே அவர்ட்ட கூட்டிப்போங்கண்ணே.”

சேது யோசித்தார்.

“செல்வம்னு எனக்குத் தெரிஞ்ச பையன் இருக்கான். அவன்தான் அவருக்கு எல்லாம். தம்பி மாதிரின்னு வெச்சுக்கயேன். அவன் கிட்டப் போவோம். அவன் உதவி பண்ணுவான்.”

ரெண்டாம் ஆட்டம்! - 30

பாதுகாப்பென நினைத்து வலைக்குள் சென்று புகுந்துகொள்ளும் மீன்கள், வலையிலிருக்கும் ஆபத்தை அறிவதில்லை. ஜெகதி மனிதர்களை நம்பினாள். ஆபத்துகளின்போது மனிதன், சக மனிதனுக்கு உதவுவதுதான் மனித இயல்பு என்பது அவளது நம்பிக்கை. சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வதுதான் மனிதனின் ஆதி குணமென்பதை யோசிக்குமளவுக்கு அவளுக்கு அவகாசம் இருந்திருக்கவில்லை. சேதுவும் ஜெகதியுமாகச் சேர்ந்து பழங்காநத்தத்திலிருந்த கோட்டைச்சாமியின் அலுவலகத்தில் செல்வத்தைப் பார்த்தார்கள். பிரச்னையின் வீர்யம் புரிந்ததால், செல்வம் உடனடியாக உதவ ஒப்புக்கொண்டான்.

“ஒரு காதுகுத்துக்காக திருமங்கலம் வரைக்கும் போயிருக்காப்ள. நீங்க போயிட்டு பொழுசாயமா வாங்க. நானும் அதுக்குள்ள அவர்கிட்ட மேட்டரச் சொல்லிவெக்கிறேன்.”

ஜெகதி, அவசரமாக அவனை மறித்து, “அதுவரைக்கும் பொறுக்க முடியாதுண்ணே… எங்களுக்குப் பெருசா யார் சப்போர்ட்டும் இல்ல. கஸ்டம்ஸ்ல ஒண்ணுக்கு ரெண்டா இருக்க எல்லா கேஸையும் என் தம்பி மேல போட்டுட்டா, அவன் வாழ்க்கை நாசமாப்போயிரும். நாமளே திருமங்கலம் கெளம்புவோம்” என அவசரப்படுத்தினாள். அழுதுவடிந்து துயரம் அப்பியிருந்த ஜெகதியின் முகத்தைப் பார்த்து, மறுக்க முடியாமல் அவர்களை அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டான். வழி முழுக்க அவள் எதுவும் பேசவில்லை. அழுகையை அடக்க முடியாத வலியை அவளது கண்களில் செல்வம் கண்டுகொண்டான்.

“சொந்த ஊரு எதும்மா?”

“ராம்நாட் பக்கத்துல பாண்டியூருண்ணே...”

“நல்லதாப் போச்சு. அண்ணனுக்கும் கமுதிதான் பூர்வீகம். ஒரே ஏரியாக்காரப் பிள்ளைன்னா உறுத்தா செய்வாப்ள.”

அவள் எதுவும் பேசவில்லை.

“ஒரு பொம்பளப் புள்ள... கெத்தா இவ்ளோ பெரிய வேல பாக்கறன்னா கெட்டிக்காரிதாம்மா நீ...” என செல்வம் பெருமிதமாகச் சொன்னபோது மட்டும் லேசாகச் சிரித்துக்கொண்டாள்.

ரெண்டாம் ஆட்டம்! - 30

திருமங்கலத்துக்கு வெளியே முத்தையா கோயிலில், காதுகுத்து முடிந்து ஆட்கள் பாதிக்கும் மேல் கிளம்பிவிட்டிருந்தனர். கோயிலிலிருந்து சற்று தூரத்திலிருந்த குண்டாற்றை ஒட்டிய தென்னந்தோப்பில், கோட்டைச்சாமி விசேஷ வீட்டு ஆட்களுடன் மதுவருந்திக் கொண்டிருந்தான். போதையில் சிவப்பேறிய கண்களோடு எதிர்பாராதவிதமாக செல்வத்தைப் பார்த்தவன், “என்னடா சொல்லாம கொள்ளாம வந்துட்ட... எதும் பிரச்னையா?” என எழுந்தான். “ஆமாண்ணே. நம்மளுக்கு வேண்டிய பிள்ள... ராம்நாட்தான். ஒரு பிரச்னைன்னு வந்திருக்கு. நீதாண்ணே உடனே என்னன்னு பாக்கணும்.” தோப்புக்கு வெளியில் சேதுவோடு நின்றுகொண்டிருந்த ஜெகதியைக் காட்டினான். வெயில் அப்போதுதான் உச்சிக்கு ஏறத் தொடங்கியிருந்தது. குடித்த மதுவின் வீர்யம் ஜெகதியைப் பார்த்த நொடியிலேயே கோட்டைக்குப் பல மடங்கு அதிகமானது. செல்வத்தோடு அவளை நோக்கி நடந்தான். அருகில் சென்றதும் அவள் வணக்கம் சொன்னாள். அருகிலிருந்த சேதுவைப் பார்த்து “நீங்க இந்தப் பிள்ளைக்கு என்ன வேணும்?” எனக் கேட்டான். “சொந்தக்காரப் பிள்ளதாண்ணே...” சேது பணிவாகச் சொன்னார். ஜெகதிக்குப் பொறுமையில்லை. தன் தம்பியின் இக்கட்டான நிலையை அவனிடம் மடமடவெனச் சொல்லி முடித்தாள். கோட்டை அவள் மீதிருந்து கண்களை எடுக்க முடியாமல் உறைந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தான்.

“நீங்கதாங்க உதவி செய்யணும். காலத்துக்கும் நன்றியா இருப்போம்” ஜெகதி கையெடுத்துக் கும்பிட்டாள். கோட்டை சிரித்தான்.

“சும்மா நன்றியா இருக்கறதுல யாருக்கு என்னம்மா லாபம்?”

“அய்யோ காசு பிரச்னை இல்லங்க. என் சொத்த வித்துண்டாலும் நீங்க கேக்கற காச குடுத்துடறேன்.”

கோட்டைக்கு வியர்த்துக் கொட்டியது. எரிச்சலோடு சட்டையை அவிழ்த்துத் தூக்கிப்போட்டான். சேதுவைப் பார்த்து ‘‘நீ கொஞ்சம் தூரமாப் போயி நில்லு” என்றதும், சேது தயங்கியபடியே நகர்ந்தார். கோட்டை அவளை நெருங்கினான். “காசு பணத்துக்கு விழுகற ஆளுனு நெனச்சிட்டியா என்ன... உன்ன மாதிரி ஒருத்திக்கு முன்ன எத்தன கோடி குடுத்தாலும் தூசுக்குச் சமானம். நீ எங்கூட இருக்கறேன்னு சொல்லு. நாளைக்கிக் காலைல உன் தம்பி வீட்ல இருப்பான்” அவன் சொன்னதைக் கேட்டு செல்வம் அதிர்ந்துபோனான். ஜெகதிக்கு உடல் எரிந்தது. “த்தூ... என்ன ஆம்பளய்யா நீ... உதவி கேட்டு வந்தவள படுக்கக் கூப்புடற?” கோட்டை அவசரமாக அவளை மறித்து, “ச்சீ... ச்சீ... என்னத்தா கேவலமா பேசற? பாக்கறவளோடல்லாம் படுக்கறவன்னு நெனச்சியா என்னய? எவளையும் கண்ணெடுத்துப் பாக்க மாட்டேன். அப்பிடி இருந்ததெல்லாம் உன் ஒருத்திக்காகத்தானோ என்னவோ... உன்னயெல்லாம் சாகற வரைக்கும் என் பக்கத்துல வெச்சு அனுபவிக்கணும்” அவன் சிரிக்க, ஜெகதி ஆத்திரத்தோடு, “உன் உதவியே எனக்குத் தேவையில்ல” என விலகி நடந்தாள். கோட்டை உடலில் இருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே “அவசரப்படாத... நான் சொன்னதக் கேட்டா உன் தம்பி காலைல உயிரோட வருவான். இல்ல... பொணமாத்தான் வருவான்” எனச் சத்தமாகச் சொல்ல, அவள் அப்படியே உறைந்துபோனாள். தன்னை மீறி கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

(ஆட்டம் தொடரும்)