மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 31

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

நடிகரின் கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல், மதுரைக்குள் பெரும்பாலான சாராயக் கடைகள் காளியின் கட்டுப்பாட்டில் வந்தன

மதுரை - 1980

விளக்குத்தூணிலிருந்து நியூசினிமா தியேட்டர் செல்லும் சாலை முனையில் சிதறிக்கிடந்த அந்த உடலை, மாநகராட்சி ஊழியர்கள் வழித்து அள்ளி ஓலைப்பாயில் சுற்றிக்கொண்டிருந்தனர். ரத்தக்கவுச்சி காற்றில் அடர்த்தியாகக் கலந்திருக்க, விடிந்தும் விடியாமல் ஆட்கள் மூக்கைப் பொத்தியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பிணத்தைத் தள்ளுவண்டியில் போடுவதற்காகத் தூக்கிச் செல்கையில், சதைகள் சிதறிச் சாலையில் விழுந்தன. தள்ளுவண்டியில் ஓலைப்பாயில் சுற்றப்பட்ட உடலைப் போடு வதற்குள் தூக்கியிருந்த இருவருக்கும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. கொல்லப்பட்டவன் ஓங்கு தாங்கான ஆளென்பதால், அவனுடல் வண்டிக்குள் அடங்காமல் கால்கள் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தன. களைத்துப்போன மாநகராட்சி ஊழியர்கள் இருவரும் ஆளுக்கொரு பீடியைப் பற்றவைத்து இழுத்தனர். இரண்டு பேரில் இளையவனாயிருந்த ஆள் புகையை ஆழமாக உள்ளிழுத்துவிட்டு அருகிலிருந்த வனிடம் கேட்டான், “ஏண்ணே, எம்புட்டுத் தாட்டியக்காரனா இருந்தாலும் கடைசீல தெருநாய் மாதிரி ரோட்லதான் செத்துக் கிடக்கறாய்ங்க. போற காலத்துல இவய்ங் களுக்கு நம்ம ஓலப்பாயி மட்டுந்தான் சொத்தா இருக்கு. அப்பிடி இருந்தும் ஏண்ணே மாறி மாறி வெட்டிக்கிட்டு அலையிறாய்ங்க?”

ரெண்டாம் ஆட்டம்! - 31

“பொச்சுக் கொழுப்புடா... சுத்தி இருக்க நாலு பேர் `ஐயா... சாமி’ன்னு சொல்லிட்டா போதும்... இவய்ங்களுக்கு அப்பவே உச்சில ஏறிக்கிரும். அப்பறம் ஓலப்பாயில போகற காலம் வரைக்கும் எறங்காது” இளையவன் பீடியைக் கடைசியாக ஒருமுறை இழுத்து விட்டு வண்டியைப் பிடித்துத் தள்ள, இன்னொரு ஆளும் சேர்ந்து பிடித்தான். வண்டி மெதுவாக அந்தச் சாலையில் சூழ்ந்திருந் தவர்களைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

மருதுவின் கணக்கில் இது ஐந்தாவது கொலை. மணியைக் கொன்ற ஒவ்வொருவரையும் தேடித் தேடி கொலைசெய்துகொண்டிருந்த அவனுக்குள், இப்படியொரு வன்மமும் கொலைவெறியும் ஊறிப்போயிருக்கும் என ஒருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மணியின் சாவுக்குப் பிறகு மதுரையில் இருக்கப் பிடிக்காமல், சொந்த ஊருக்குப் போயிருந்தவனைத் தேடி அழைத்து வந்தவன் காளி. “மனுச மக்க யாரும் வேணாம்னு இப்பிடி ஒதுங்கிவந்துட்டா எல்லாம் சரியாப் போயிருமாய்யா. மணி உனக்கு எம்புட்டோ செஞ்சிருக்கான், நீ பதிலுக்கு என்ன செஞ்ச? அவன் சாவுக்கு அர்த்தமில்லாமப் போயிரக் கூடாது மருது. கெளம்பி மதுரைக்கி வா. நடக்கறது நம்ம ஆட்சி, கோர்ட்டு போலீஸு ஒருத்தனும் ஒன்னயத் தொட முடியாது. உன் இஷ்டத்துக்கு விளையாடு. உனக்குப் பக்கபலமா நான் இருக்கேன்” மருதுவுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தன அவனது சொற்கள். மதுரைக்குத் திரும்பி வந்தவனுக்கு காளி, கரிமேட்டில் தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டை எடுத்துக் கொடுத்தான். “எதுக்குண்ணே தனி வீடெல்லாம்... அங்கன செல்லூர்ல எங்க வீட்டு ஆளுக கூடயே இருந்துக்குவன்ல...” என மருது தயங்கினான். “ஏய்... நீ என்னய்யா வெவரங் கெட்டவனா இருக்க. முத்தையா அப்பிராணி... அவனையே கேஸுல கோத்துவிட்டு சோலிய முடிக்கப் பாத்தாய்ங்க. உன்னய சும்மா விடுவாய்ங்கன்னா நெனைக்கிற? நல்லதோ, கெட்டதோ தனியா இருந்து சமாளிக்கலாம். வீட்டு ஆளுகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்றது?”

காளி சொன்னதிலிருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட மருது, அந்த வீட்டில் தங்குவதற்குச் சம்மதிக்க, முத்தையாவும் அவனோடு வந்து தங்கத்தொடங்கினான்.

நடிகரின் கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல், மதுரைக்குள் பெரும்பாலான சாராயக் கடைகள் காளியின் கட்டுப்பாட்டில் வந்தன. கடந்தகாலத்தில் செய்த தவறுகளிலிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருந்த காளி, மூர்த்தியின் பாணியிலேயே தனக்குக் கீழ் விசுவாசமான ஆட்களை உருவாக்குவதில் கவனமாயிருந்தான். ஒவ்வொரு வீதிக்கும் ஒரு சண்டியர் முளைத்தபோது, அவர்களில் பெரும்பாலானவர்களைத் தனக்காக வேலை செய்பவர்களாக மாற்றிக்கொண்டான். சாராயக் கடைகளின் வருமானத்தில் சிறு பகுதியே இவர்கள் அத்தனை பேரையும் பராமரிக்கப் போதுமானதாக இருந்தது. காளி கூடுதலாக அவர்களோடு நட்பு பாராட்டவும் செய்ததால், மூர்த்தியிடம் வேலை செய்த சிலரும் காளியின் பக்கமாக வந்துவிட்டிருந்தனர். பாக்கெட் சாராயத்தின் வாடை, ஊரின் எல்லா வீதிகளிலும் நீக்கமறக் கலந்துபோகத் தொடங்கிய பிறகு, போதையில் நடந்த சண்டைகளும், அந்தச் சண்டையால் விழுந்த சாவுகளும் கணக்குவழக்கில்லாமல் போயின.

கெளரவத்துக்காகக் குடும்பம் வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, சுப்புத்தாயுடன் குடும்பம் நடத்தியவன் வீட்டிலிருந்த வேலைக்காரர்களில் ஒருத்தியாகவே அவளை நினைத்தான். `என்ன மயிரு வாழ்க்க இது... பேசாம ரெண்டு அரளிக்காயத் தின்னுட்டு செத்துரலாமா?’ என சுப்புவுக்கு மனம் பேதலிக்கும் போதெல்லாம் தன் பிள்ளை களின் நினைப்பு வந்து தடுத்துவிடும். காளியின் உதாசீனங்களை, சீண்டல் களையெல்லாம் சகித்துக் கொள்வதன் வழி, அவள் தன்னைத் தானே தண்டித்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்குள் நடக்கும் இந்த யுத்தத்தை முத்தையா கண்டும் காணாமல் கடந்துபோக முயன்றான். புத்தி, விலகிப்போகச் சொன்னாலும் மனது சுப்புத்தாயிக்காக இரங்கியது.

“எண்ணே... மத்த ஆளுககிட்ட கடுசா நடந்துக்கற சரி, மதினிகிட்டயுமா அப்பிடி இருக்கணும்... கொஞ்சம் அன்பா இருக்கலாம்ணே” என காளியிடம் பக்குவமாகக் கேட்டான். “உனக்குத் தெரியாதுடா முத்து. அவ மேல எனக்கு எம்புட்டு பிரியம் தெரியுமா? எனக்கு எதாச்சும் ஆகிட்டாகூட அவ நல்லாயிருக்கணும்னுதான் மூர்த்திகிட்ட கெஞ்சி அவள கவுன்சிலரா ஆக்கினேன். ஆனா ஜெயிச்சதுக்கு அப்பறம் அவ என்னயக் குண்டியத் தொடைக்கிற குச்சி மாதிரி பாத்தாடா. ஊர்க்காரனெல்லாம் என்னய அசிங்கப்படுத்தலாம், ஆனா இவளுமான்னு எத்தன நாள் நொந்துபோயிருக்கேன் தெரியுமா?”

காளி பொங்கியெழுந்த கண்ணீரை வெளியேற்றிவிடாமல் தழுதழுத்தான். அப்போதைக்கு முத்தையா பதிலுக்கு எதுவும் பேசாதபோதும், போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை அவனுக்கிருந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 31

காளி மற்றவர்களைப்போல் மருதுவை நடத்தாமல், அவன் போக்கில் இருக்கவிட்டான். வேட்டைக்குக் காத்திருக்கும் மிருகம்போல மருதுவுக்குள் மணியின் சாவுக்குப் பழி தீர்ப்பதற்கான வெறி, ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டிருந்தது. ஆயுதங்களால் மணியை வெட்டிக் கொன்றவர்களைவிடவும் அந்தக் கொலைக்காகக் கொஞ்சமும் வருத்தப்படாத கிருஷ்ணவேணியின் மீதுதான் வேறு எல்லோரையும்விட அவனுக்கு ஆத்திரம். மணி கொல்லப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அவள் இன்னொரு கல்யாணம் முடித்துக்கொண்டு மேலுருக்குச் சென்றுவிட்டாள். எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அவளால் சிரித்து, சந்தோஷமாகக் குடும்பம் நடத்த முடிவதை மருதுவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நாள் மாலையும் முத்தையா கொண்டுவரும் சாராயத்தைக் குடித்ததும், “ஒருத்தனையும் விடக் கூடாதுரா முத்து. முக்கியமா அந்தக் கண்டாரோலிய விடவே கூடாது. அவளைக் கண்டந்துண்டமா வெட்டி எறிஞ்சாத்தாண்டா என் மனசாறும்” எனச் சத்தமாக அரற்றுவான். “நேரம் வரட்டும்ணே மொத்தமா கருவருப்போம்” என முத்தையாவும் ஆத்திரத்தோடு சொன்னாலும், மணியின் சாவுக்குப் பழி தீர்ப்பது அத்தனை சீக்கிரத்தில் நடந்துவிடவில்லை.

காளி கைப்பற்றியது போக மிச்சம் மீதியிருந்த சாராயக் கடைகள் மட்டுமே மூர்த்திக்குக் கிடைத்திருந்ததால், சோமுவின் குடும்பத்தினருக்கு மார்க்கெட் மட்டுமே பிழைப்பாகச் சுருங்கியது. மூர்த்தியை நம்பி பிரயோஜனமில்லை என்றானதால், அவர்கள் கஞ்சா வியாபாரத்தை மதுரை நகர் முழுக்க விஸ்தரித்துக்கொண்டார்கள். சாராய போதைக்குப் பழகிச் சலித்துவிட்டவர்களுக்குக் கூடுதல் போதை தேவைப்பட்டதால் கஞ்சாவைத் தேடிவந்தனர். சாராயத்தைவிடவும் கஞ்சாவின் போதை வீர்யமாக இருந்ததால், இதைத் தேடி வருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. பெரிய முதலீடுகள் இல்லாமல் சோமுவின் குடும்பத்தினர் கொழுத்த லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறனர் என்கிற யதார்த்தம் பிடிபட, காளி சுதாரித்துக்கொண்டான். எப்போதும்போல் ஒருநாள் சாயந்தரம் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த முத்தையாவிடம் “என்னடா முத்து... மணியோட கேஸ முடிக்கப் போறாய்ங்களாம். அப்பிடியா? ஊரே வேடிக்க பாத்த கொல. ஆனா ஒரு பய சாட்சி சொல்ல வரல... இம்புட்டுத்தாண்டா சட்டம் கோர்ட்டு எல்லாம்” என வருத்தத்தோடு சொன்னான். பழிக்கணக்குகளைத் தீர்ப்பதற்கு இந்த வார்த்தைகள் போதுமென்பது காளிக்குத் தெரியும். வீடு திரும்பிய முத்தையா, சாராய பாக்கெட்டை மருதுவிடம் கொடுத்தபோதே “சாச்சியே இல்லாம கேஸ முடிக்கப் போறாய்ங்கண்ணே. அம்புட்டுத்தான்ல மணியண்ணன் உசுருக்கு மரியாத...” என அழுதபடி நிற்க, அந்தச் சாராயத்தைத் தொடாமலேயே மருது ஆத்திரத்தோடு வெளியேறினான். அன்று பொழுது விடிவதற்கு முன்பாகவே மணியின் சாவுக்குக் காரணமானவர்களில் ஒருவனின் ரத்தத்தைக் குடித்து, மருதுவின் சூரிக்கத்தி தன் கணக்கைத் தொடங்கியது.

(ஆட்டம் தொடரும்)