மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 32

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

நிப்பாட்டுங்கய்யா உங்க கதைய. காசு வாங்கிட்டு நீங்களே புடிக்காம விட்ருவீங்க. யாராச்சும் கேட்டா ஊர்ல இருக்க பெரிய மனுசங்க மேல பழியத் தூக்கிப் போட்றது

மருதுவை போலீஸ்காரர்கள் வெவ்வேறு ஊர்களில் தேடிக்கொண்டிருந்தனர். மாயாவியைப்போல அவன் எப்போது ஊருக்குள் வருகிறான், எப்படிக் கொலை செய்கிறான் என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே தொடர்ந்துகொண்டிருந்தது. இரவுகளில் எப்போதும்போல் உறங்க முடியாத அச்சத்தைத் தன் எதிரிகளிடம் உருவாக்கியிருந்தான் மருது. மதுரையின் ரகசியப் பாதைகளெல்லாம் இரவுகளில் மருதுவுக்காக மட்டுமே விலகி, வழி விட்டன. அவன் எந்த வழக்கிலும் பிடிபடாமல் சுற்றிக் கொண்டிருந்ததால், போலீஸ்காரர்கள் முடிக்கப்படாத வழக்குகளையும் அவன் கணக்கில் எழுதத் தொடங்கினார்கள். வழிப்பறிகள், கொலை மிரட்டல், திருட்டு என முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் அவன் பெயரில் பதியப்பட்டிருந்தன. மதுரையின் முக்கியமான எல்லாக் காவல் நிலையங்களிலும் ஏதாவதொரு வழக்கைப் பதிந்து, காவல்துறையே அவனை அச்சத்துக்குரியவனாக மாற்றியிருந்தது. “எல்லா ஸ்டேஷன்லயும் கேஸப் போட்டு வெச்சிருக்கீங்க... ஒருத்தருக்கும் அவனப் பிடிக்கத் துப்பில்லையா?” என நீதிமன்றத்தில் நீதிபதி எரிச்சலோடு கேட்க, ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் அவசரமாக,

“ஐயா ஆள் பெரிய கேடிய்யா. உள்ளூர் பெரிய ஆளுகள கைல போட்டுக்கிட்டு அவுக உதவியோட திடீர் திடீர்னு வந்துட்டுப் போயிடறான்யா...’’ எனச் சமாளித்தார்.

“நிப்பாட்டுங்கய்யா உங்க கதைய. காசு வாங்கிட்டு நீங்களே புடிக்காம விட்ருவீங்க. யாராச்சும் கேட்டா ஊர்ல இருக்க பெரிய மனுசங்க மேல பழியத் தூக்கிப் போட்றது. ஆளத் தேட்றம்னு கவர்மென்ட் காசுல நல்லா ஊர் சுத்துங்க, போங்க...”

மெட்ராஸ், கோயமுத்தூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி எனத் தமிழ்நாட்டின் எல்லா மூலைகளிலும் போலீஸ்காரர்கள் மருதுவைத் தேடிக்கொண்டிருக்க, அவன் தன்னால் அவ்வளவு தூரமெல்லாம் அலைய முடியாது என சோழவந்தானுக்கு அருகில் தேனூரில் பதுங்கியிருந்தான். தனது எதிரிகளின் முதுகுக்குப் பின்னால் நின்று கண்காணித்துக் கொள்வதுதான் பாதுகாப்பு என்பது அவனது நம்பிக்கை. காளி, முத்தையா இருவரைத் தவிர வேறு யாருக்கும் அவன் தேனூரில் இருப்பது தெரியாது. வாரத்தில் ஒருநாள் பணத்தோடும் அவனுக்குத் தேவையான பொருள்களோடும் முத்தையா சென்று பார்த்துவருவான். மருது, யாரும் கற்றுத் தராமலேயே சில ஒழுங்குகளைக் கற்றுக்கொண்டிருந்தான். முத்தையா இல்லாத மற்ற நாள்களில் விழிப்போடு இருக்க வேண்டி ஒரு சொட்டு சாராயத்தைக்கூட அவன் குடிப்பதில்லை. அவன் பார்க்க வரும்போது மட்டும் மூக்கு முட்டக் குடித்தான். மற்ற நாள்களில் ஒருவேளை உணவு, நான்கு மணி நேரத் தூக்கம் என எல்லாமே கட்டுப்பாடுதான். தன்னோடு இருக்கும்போது மட்டும்தான் பழைய மருதுவாக இருக்கிறான் என்பது முத்தையாவுக்கும் தெரிந்திருந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 32

“ஏண்ணே... பொழுதுசாஞ்சா சாராயத்தத் தொடாம இருக்க முடியாது உன்னால. எப்பிடிண்ணே அப்பிடியே மாறிப்போயிட்ட?”

“எப்ப ஒருத்தன் உயிர எடுக்க உனக்கு துணிச்சல் வந்துருச்சோ... அப்பவே உன் உயிரக் காப்பாத்திக்கிறதுக்கான கட்டுப்பாடும் ஒழுக்கமும் வந்துரணும்டா. கொல செய்றது வேணா லேசான காரியமா இருக்கலாம்... ஆனா, மத்தவனுககிட்ட உசுரக் காப்பாத்திக்கிறது ரொம்ப செரமம். உன் பழக்கவழக்கம்தான் உசுரக் காப்பாத்தும்.”

சாவைத் தள்ளிப்போட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யுக்தி. காளி தனது நரித்தனத்தை நம்புவதுபோல், முத்தையா தனது கோழைத் தனத்தை நம்புவதுபோல், மருது புத்திசாலித்தனத்தை நம்பினான். அவன் கணக்கில் மிச்சமிருப்பது சோமுவின் தம்பியும் கிருஷ்ணவேணியும் மட்டும்தான். அவர்களின் ரத்தம் பார்ப்ப தற்கான நாளையே ஒவ்வொரு நிமிடமும் திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

காவல்துறையை நம்பி பிரயோஜனமில்லை என்பதைப் புரிந்துகொண்ட மூர்த்தியின் குடும்பத்தினரும், சோமுவின் குடும்பத்தினரும் தங்கள் ஆட்களின் மூலமாக மருதுவைத் தேடத் தொடங்கினார்கள். தனிப்பட்ட பகையை மூர்த்தி அரசியல் பகையாகச் சித்திரித்து தனது உயிருக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் காவல்துறையில் பாதுகாப்பை வாங்கிக்கொண்டார். ஆனாலும், தன் மகனுக்கோ மகளுக்கோ ஏதாவது ஆகிவிடக்கூடும் என்கிற அச்சம் அவரை விடாமல் துரத்தியது. “அறிவு இன்னும் ஆறேழு மாசந்தான் உனக்குப் பதவிக்காலம். பதவி போச்சுன்னா பாதுகாப்பும் போயிரும். நீ சத்தமில்லாம சிங்கப்பூருக்கே போயிரு.”

“எப்பா... மருதுவுக்கு பயந்து நாட்டவிட்டே போகச் சொல்றியா?”

“இல்லய்யா, இன்னிக்கி மருது, நாளைக்கி வேற ஒருத்தன்... இந்தப் பகைக்கு முடிவே இல்ல. காளியும் சோமுவும் சண்டியருங்க. அவங்ககூட இருக்கவய்ங்க, இருந்தவய்ங்க எல்லாருக்குமே தெரிஞ்சதெல்லாம் அடிதடி வெட்டுக்குத்து இவ்ளோதான். ஆனா நீ படிச்சவென். அவய்ங்கள மாதிரி சல்லித்தனமா உன் வாழ்க்க முடிஞ்சிரக் கூடாது. இவய்ங்களோட இருந்த சகவாசம்லாம் என் காலத்தோட போகட்டும். நீ சிங்கப்பூர்லயே செட்டில் ஆயிரு.”

“ஏதோ கொஞ்ச நா போயி தங்கியிருந்து ஒரு வேலையப் பாத்தேன். ஆனா, காலம் முழுக்கல்லாம் என்னால அங்கயே இருக்க முடியாதுப்பா.”

“அறிவு... ஒரு தடவைக்குப் பத்து தடவ நல்லா யோசி. நான் ஏன் சொல்றேன்னு புரியும். உன்னால இந்தக் கூட்டத்தோட சண்டியத்தனம் பண்ணி ஜெயிக்க முடியாது. உன்னய உயிரக் காப்பாத்திக்க ஓடச் சொல்லல... இதவிட நல்ல வாழ்க்கக்கி நீ தகுதியானவன். அதத்தான் சொல்றேன்.”

மூர்த்தி சொன்னதிலிருந்த யதார்த்தத்தையும் அர்த்தங்களையும் புரிந்துகொள்ள அறிவழகனுக்கு நீண்ட நாள்கள் தேவைப்படவில்லை. இருபது நாள்களுக்குள் கட்சித் தலைமை யிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டான்.

அறிவழகன் சிங்கப்பூர் சென்றுவிட்ட செய்தி, ஒரு வாரத்துக்குப் பிறகுதான் மதுரைக்குள்ளிருந்தவர்களுக்குத் தெரியவந்தது. இனி மூர்த்தியை நம்பி பிரயோஜனமில்லை என்பதைப் புரிந்துகொண்ட சோமுவின் தம்பி, சொந்த ஊரான கமுதிக்கே சென்றுவிட்டான். கஞ்சா வியாபாரம் மறுபடியும் ஒரு சின்ன எல்லைக்குள் சுருங்கிவிட, எதிரிகளே இல்லாத மதுரையைத் தனிக்காட்டு ராஜாவாக காளி ஆண்டுகொண்டிருந்தான். அரசியல் மட்டத்திலிருந்தவர்கள் தங்கள் செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டிருந்த இதே காலகட்டத்தில்தான், மதுரையில் குட்டி குட்டி ராஜ்ஜியங்கள் உருவாகத் தொடங்கின. “ஒக்காலி... மணிய மாதிரி பெரிய தாட்டியக்காரனா ஆகணும்டா” என்றும் “மணியவிட காளிதாண்டா பெரிய ஆளு, பத்து வருசம் முந்தி மார்க்கெட்ல மூட்ட தூக்கிட்டு இருந்தவென் இன்னிக்கி பெரிய அரசியல்வாதி. ஒருத்தனாலயும் அவன அசைக்க முடியல பாத்தியா?” என்றும், “போங்கடா டேய் எல்லா பெருசுங்களையும் இன்னிக்கி ஓடவிட்டுட்டு இருக்கறது யாரு? மருதுதான். தாட்டியக்காரன்னா அவந்தான்” என்றும் டீக்கடைகளில் ஒழுங்காகக் கைலி கட்டத் தெரியாத இளைஞர்களெல்லாம் பேசத் தொடங்கியிருந்தார்கள். தாட்டியக்காரர்களாக ஆவதற்குப் பின்னாலிருந்த ஆபத்துகளை உணர்ந்துகொள்ள முடியாத ஒவ்வொருவருக்கும் தங்கள் வீரத்தின்மீது மட்டுமே குருட்டுத்தனமான நம்பிக்கையிருந்தது. ஒரு ஏரியாவிலிருக்கும் இளைஞர்கள் இன்னொரு ஏரியா இளைஞர்களோடு கைகலப்புகளில் ஈடுபடுவது அன்றாட வாடிக்கையாகத் தொடங்கியது. இப்படியான சண்டைகளில், முன்னால் நின்றால் நாமும் பெரிய ஆளாகிவிடலாம் என்கிற ஆசையிலேயே சிலர் இல்லாத காரணங்களுக் கெல்லாம் சண்டைக்குச் செல்லக்கூடியவர்களாக மாறினார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 32

மேலூரிலிருந்த கிருஷ்ணவேணியை வாரத்துக்கு ஒருமுறை மூர்த்தியும் அவர் மனைவியும் போய்ப் பார்த்துவந்தார்கள். நல்லது கெட்டதுக்குக்கூட ஊருக்குப் போக முடியாமல் இருப்பதில் அவளுக்குச் சங்கடமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அறிவழகனைச் சொல்லாமல் கொள்ளாமல் சிங்கப்பூருக்கு அனுப்பியதில் அவ்வளவு நாள்கள் தேக்கியிருந்த எரிச்சலையும் கோபமாக வெளிப்படுத்தினாள்.

“யப்பா... அவென் ஒரு ஆளுன்னு அவனுக்குப் பயந்துக்கிட்டு என்னய ஊருக்கு வர வேண்டாம்ண்ட்ற… தம்பிய கண்காணாத ஊருக்குத் தொரத்திவுட்டுட்ட...”

“என் காலம் முடியப் போகுதுத்தா... என் முடிவு எப்பிடி வேணாலும் இருந்துட்டுப் போகுது. ஆனா என் மக்கமாருக நல்லபடியா இருக்கணும்.”

“பொம்பள உடம்புல எது எங்க இருக்கும்கறதுகூட அவனுக்குத் தெரியாது. அவெந்தானா என்னயக் கொல்லப்போறான்?” என கிருஷ்ணவேணி கேலியாகச் சொன்னாள்.

பல மாதங்கள் ஊர்ப் பக்கம் போகாமலிருந்தவளுக்கு, மதுரைக்குச் செல்ல வேண்டிய அவசியம் உருவானது. குழந்தையோடு தனியாக அவதிப்பட்ட நாள்களில் அவளைக் கண்ணுங்கருத்துமாகப் பார்த்துக்கொண்ட மாமன் மகளுக்குக் கல்யாணம். மூர்த்தியிடம் சொல்லிக்கொள்ளாமலேயே தன் கணவனை அழைத்துக்கொண்டு மேலூரிலிருந்து கிளம்பிவிட்டாள். கல்யாண வீடு அனுப்பானடி என்பதால், அவர்கள் கருப்பாயூரணி வழியாக ஊருக்குள் நுழைந்து அனுப்பானடிக்கு வந்தார்கள். வெயில் நிரம்பிய ஞாயிற்றுக்கிழமையின் காலையில், அவர்களின் கார் கல்யாண வீட்டுக்கு வந்தபோது சொந்தக்காரர்களுக்குச் சந்தோஷத்தைவிட அச்சமே அதிகமாயிருந்தது. மூர்த்தி எல்லோருக்கும் முன்னால் அவளைத் திட்ட விருப்பமில்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அம்மா மட்டும் நெருங்கி வந்து “என்னடி இதெல்லாம்?” எனக் கேட்க, “எம்மா... என்னய இவதான் அப்பிடிப் பாத்துக்கிட்டா. அவ கல்யாணத்துக்கு வராம இருக்கச் சொல்றியா? செத்தவடம் இருந்துட்டு உடனே கிளம்பிர்றோம்” என எரிந்துவிழுந்தாள். வேணியைத் தவிர எல்லோருக்கும் அவள் திரும்பவும் பத்திரமாக ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என்கிற அச்சமிருந்தது. மூர்த்தியின் ஆட்கள் அந்த வீதிக்குள் யாரையும் அனுமதிக்காமல் காவல் காத்துக்கொண்டிருக்க, ஒரு மணி நேரத்துக்குப் பின் வேணி எல்லோரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அந்த வீதியை அவர்களின் கார் தாண்டி தெப்பக்குளத்தை அடைந்தபோதுதான் எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது. தெப்பக்குளத்திலிருந்து கருப்பாயூரணி செல்லும் சாலையில் அவர்களின் கார் திரும்புவதற்கும், சோடா பாட்டில்கள் காரில் வந்து விழுவதற்கும் சரியாக இருந்தது. கார் நிலைதடுமாறி பக்கத்திலிருந்த புளியமரத்தில் முட்டி நிற்க, அடுத்த சில நிமிடங்களில் காருக்குள்ளிருந்த வேணியின் தலையை மட்டும் வெட்டி எடுத்துக்கொண்ட மருது, நிதானமாகத் தெப்பக்குளம் நோக்கி நடந்தான்.

(ஆட்டம் தொடரும்)