மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 37

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

ஆசை எல்லோரையும் பிடித்தாட்டும் சாத்தான். காளியின் வளர்ச்சியைக் கண்டு அரசியல் பக்கமாக நகர விரும்பிய நிறைய பேர், சின்னதும் பெரியதுமாக குற்றங்களைச் செய்யத் தொடங்கினார்கள்.

ஜாமீன் கிடைத்து மருது வீட்டுக்குத் திரும்பியபோது, பாதி ஆளாக ஒடுங்கிப்போயிருந்தான். மருத்துவமனையும் மருந்துகளும் அவன் தேகத்தில் சரிபாதியைத் தின்றிருந்தன. இன்னொரு வகையில், மரத்தை இழைக்க இழைக்க அது பளிச்சிடுவதைப்போல் முகத்திலும் கண்களிலும் அசாத்தியமான தேஜஸ் கூடியிருந்தது. ஆலமரத்தின் நிழலைப்போல் காளி அவனை அரவணைத்துக் கொண்டிருப்பதால், எதன்மீதும் அச்சமில்லாத ஒருவனாக இருந்தான். மூர்த்திக்கும், அவர் மகனுக்கும் முழு ஆளாகத் திரும்பி வந்திருக்கும் மருதுவைப் பார்க்க உடலெல்லாம் எரிந்தது. ஆனால், காளியை மீறி மருதுவின் நிழலைக்கூடத் தொட முடியாது என்கிற யதார்த்தம் புரிந்ததால் முடிந்தவரை தணிந்துபோனார்கள். மருதுவின் இருப்பைவிடவும் காளியின் வளர்ச்சியில்தான் மூர்த்தி அதிகம் தொந்தரவானார். “அறிவு நீ எப்ப சிங்கப்பூருக்குப் போற?” என மகனை நச்சரிக்கத் தொடங்கியவரிடம், “சும்மா சும்மா அனத்திக்கிட்டு இருக்காதப்பா... என் அக்காவ செதச்சிட்டு அவென் நெஞ்ச நிமித்தி இதே ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருப்பான். நான் எதுவும் செய்யாம என் உசுரக் காப்பாத்திக்கிட்டுப் போகணும். அப்பிடி வாழ்ற வாழ்க்க பீக்கு சமானம். என்னிக்கி அந்த மருதுப் பய சாகறானோ, அன்னிக்கித்தான் ஊரவிட்டுப் போவேன்... மார்க்கெட்ல மூட்ட தூக்கிக்கிட்டிருந்த நாயி... இன்னிக்கி மதுரையவே கட்டி ஆள்றான்… அவன எதும் செய்றதுக்குத் துப்பில்லாம நாமளும் வேடிக்க பார்த்துட்டு இருக்கோம்!”

“அவனுக்கு நேரம் நல்லாருக்கு. எப்பா, உன்னயப் பாத்துதான் அவன் அரசியலுக்கு வந்தான். ஆனா காரியக்காரன், என்ன... எல்லாரையும் நேக்கா பேசித் தன் பக்கமா இழுத்துக்கிட்டான். காத்து நம்ம பக்கம் திரும்பட்டும் அப்பறம் இருக்கு அவனுக்கு...”

தந்தையும் மகனும் தங்களது இயலாமைகளை வீட்டுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொண்டார்கள்.

ஆசை எல்லோரையும் பிடித்தாட்டும் சாத்தான். காளியின் வளர்ச்சியைக் கண்டு அரசியல் பக்கமாக நகர விரும்பிய நிறைய பேர், சின்னதும் பெரியதுமாக குற்றங்களைச் செய்யத் தொடங்கினார்கள். சிலர் அடிதடிகளில் இறங்கியபோதே, காவல்துறையாலும் அந்த ஏரியாவிலிருந்த பிற பெரிய தலைக்கட்டுகளாலும் கண்டித்து ஒடுக்கப்பட்டனர். யாராலும் கட்டுப்படுத்த முடியாத சிலர், இந்தத் தடைகளையெல்லாம் மீறி சம்பவங்களைச் செய்யத் தொடங்கினார்கள். அப்படி உருவானவர்களில் மலைச்சாமியும் ஒருவன். சென்ட்ரல் மார்க்கெட் அரிசி மண்டியில் ஒரு தகராறின் வழியாக அவன் பெயர் முதன்முறையாக அடிபட்டது. அதன் பிறகு நிறைய வியாபாரிகளுக்குப் பிரச்னை ஏற்படும்போது அவன் தேவைப்பட்டான். குள்ளமான உருவம், ஆனால் ரெண்டு பனைமர அகலத்துக்கு உடல்வாகு. கைவிரல்களெல்லாம் உருண்டை உருண்டையாக ஒவ்வொரு விரலும் சுத்தியலில் இருக்கும் இரும்பு உருண்டையைப் போலிருக்கும். எத்தனை பெரிய தாட்டியக்காரனுக்கும் அவனிடம் ஓர் அறை வாங்கினால் சர்வமும் அடங்கிவிடும். அப்படியொரு இரும்புக்கை மாயாவி. மார்க்கெட்டிலிருந்து வெளியிலும் அவன் பெயர் பரவலாக... முத்தையா அவனைப் பற்றி காளியிடம் சொன்னான்.

ரெண்டாம் ஆட்டம்! - 37

“ஆள் உருளக்கட்ட மாதிரி இருக்காண்ணே. நம்மகூட வெச்சுக்கலாம்.”

“முத்து, ஒருத்தன் பலசாலியா இருக்கறது முக்கியமில்ல... வெவரம் தெரிஞ்சவனா இருக்கணும். கொஞ்சநாள் போகட்டும்... ஆள் எப்பிடி என்னன்னு பாத்துட்டு வரச் சொல்லுவோம்.”

மனிதர்களை எளிதில் நம்பிவிடும் ஆளில்லை காளி. “என்கூட இருக்கவன் எல்லாரும் என் தேவைக்காகத்தான் இருக்கணும், அவய்ங்க தேவைக்காகன்னு யாரையும் என் பக்கத்துல வெச்சுக்கக் கூடாது” என்று அடிக்கடி முத்தையாவிடம் சொல்வதுண்டு. மலைச்சாமியின் நடவடிக்கைகளைக் கவனித்தபோது, அவன் தன்னைப்போலவே நடந்துகொள்ள முயல்கிறான் என்பதை காளியால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அதற்கு முழுத் தகுதியானவனா என்கிற சந்தேகம் இருந்ததால் விலக்கியே வைத்திருந்தான்.

காளி, தான் செல்லும் எல்லா இடங்களுக்கும் மருதுவை அழைத்துச் செல்லத் தொடங்கினான். திருத்தமான சிகையலங்காரம், கழுத்தில் உருளும் ருத்ராட்ச மாலைகள், பெரிய காலர் வைத்த சட்டைகள் என மருதுவைப் புது மனிதனாக காளி மாற்றினான்.

“என்னண்ணே ஏதோ வேஷம் போட்ட மாதிரி என்னன்னவோ செஞ்சிவிட்டுக்கிருக்க?” என மருது கூச்சத்தோடு முதலில் கேட்டபோது, “மருது, நம்மள மாதிரி ஆளுகளுக்குத் தோரணதாண்டா முக்கியம். அதுலயும் நீ செத்துப் பொழச்சி வந்திருக்க. சாமி மாதிரி. இனிமே நீ பேசற ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பு இருக்கும். நான் சொல்றது இப்பப் புரியாம இருக்கலாம். போகப் போகப் புரியும்” என காளி சிரித்தான். அவன் சொன்ன வார்த்தைகள் எத்தனை உண்மையானவை என்பதை மருது மிக விரைவிலேயே தெரிந்துகொண்டான். கட்டப் பஞ்சாயத்துகள், வியாபாரப் பேச்சுகளின்போது காளி எல்லோர் பேச்சையும் கட்டுக்குள் கொண்டுவர “எப்பா நாம மாறி மாறிப் பேசிக்கிட்டே இருந்தா ஒரு முடிவுக்கு வராது. மருதுகிட்ட ஒரு வார்த்த கேப்போம்” எனச் சொல்லும்போது எல்லோரும் பேச்சை நிறுத்தி, மருதுவின் வார்த்தைகளுக்குக் காதுகொடுக்கத் தொடங்கினார்கள். அவனொரு சல்லிப்பயல் என்பது மருதுவுக்குத் தெரிந்ததைப்போலவே ஊர்க்காரர்களுக்கும் தெரியும்தான். ஆனால் எதற்காகத் தன்னை இத்தனை பொருட்படுத்துகிறார்கள்... சாவைக் கடந்து வந்ததன் மரியாதையை மருது முழுமையாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினான். காளி தனக்குப் பரிசளித்த வேஷத்தில், சில நாள்களிலேயே ஒன்றிப்போய் நடிக்கத் தொடங்கிவிட்டான் மருது. ஒருபுறம் அந்த வேஷம் பிடித்துப்போனாலும் இன்னொரு புறம் தன்னை வெட்டியவர்களைப் பழிதீர்க்க வேண்டும் என்கிற வெறியும் கனன்று கொண்டிருந்தது. அவனை உள்ளும் புறமும் நன்றாகத் தெரிந்துவைத்திருந்த காளி, அவ்வப்போது சோலை அழகுபுரத்தில் மூர்த்தியின் வீதிக்கு அழைத்துச் செல்வான். காரைத் தெருமுனையில் நிறுத்திவிட்டு, இருவரும் தெருவின் இன்னொரு எல்லைவரை பேசியபடியே நடந்து சென்றுவருவார்கள். மூர்த்தியின் குடும்பத்திலிருப்பவர்களுக்கு அடிவயிறு கலங்கும். “ஆத்தி... என்ன செய்யக் காத்திருக்காய்ங்களோ?’’ எனக் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு நடுங்கியபடி இருப்பார்கள். காளியும் மருதுவும் நிதானமாக நடந்துவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். “அவய்ங்க சாகும் காலம் வரைக்கும் பயத்துலயே வெச்சிருப்பம்டா மருது…” என்று காளி சிரிக்கையில், மருதுவும் இந்த விளையாட்டு தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னான்.

ரெண்டாம் ஆட்டம்! - 37

காளியும் மருதுவும் தங்கள் வீதிக்குள் வந்துபோகும் நாள்களில், அறிவு தூக்கத்தை இழந்தான். அவர்களைப் பற்றிய எண்ணங்கள் அச்சமாக உருமாறி வயிற்றுக்குள் சுழலும்போது, வியர்த்து மயக்கம் வருவதுபோலிருக்கும். பயத்திலிருந்து தன்னால் விடுபடவே முடியாதோ என அச்சமுற்ற அறிவு, மூர்த்தியின் சொல்படி சிங்கப்பூருக்கே திரும்பிவிடுவதுதான் சரியென முடிவு செய்தான். பதவி, பணமெல்லாம் இருந்த நாள்களில் வணக்கம் வைத்தவர்களெல்லாம் இப்போது அவனை எதிரில் கண்டாலும் சாதாரணமாகக் கடந்துபோகிறார்கள். “இத்தன காலமும் இவய்ங்க நம்மள மதிக்கிறாய்ங்கன்னு முட்டாத்தனமா நம்பியிருக்கோம்... நம்ம காசையும் பதவியையும்தான் மதிச்சிருக்காய்ங்கபோல...’’ எனச் சலிப்போடு நினைத்துக்கொள்வான். வேணியின் மறைவுக்குப் பின், அவளது குழந்தையை வேணியின் புருஷனே வளர்த்துவந்தான். “அத்தான்... என்னயிருந்தாலும் புள்ள... அக்காவுக்கும் அவ மொத புருஷனுக்கும் பொறந்த புள்ள... நீங்க எதுக்கு அதத் தோள்ல தூக்கிப் போட்டுக்கிட்டு இருக்கீங்க? இன்னொரு கல்யாணம் பண்ணிக்கங்க. பிள்ளைய நம்ம வீட்ல பாத்துக்கிருவாங்க” என அறிவு சொன்னதற்கு, “உங்கக்காகூட கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் சந்தோஷமா வாழ்ந்துட்டேன் மாப்ள. அவ நெனப்பும், இந்தக் குழந்தையும் போதும். எனக்கு எதுக்கு இன்னொரு பொண்டாட்டி?” என அவர் மறுத்துவிட்டார். அறிவுக்குச் சங்கடமாக இருந்தது. மனம் ஆறுதல்படும்படியாக, ஊரைவிட்டுச் செல்வதற்கு முன்னால் ஒரேயொரு முறை மருதுவைக் கொலை செய்ய முயன்று பார்க்கலாமே என, ராமநாதபுரத்திலிருந்து ஆள் இறக்க முடிவுசெய்தான். ஆனால், அவன் ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்குத் திரும்புவதற்கு முன்பாகவே அவனது திட்டங்கள் காளிக்கும் மருதுவுக்கும் தெரிந்துபோய்விட்டன. “பயம் விட்டுப்போச்சுண்ணே அவய்ங்களுக்கு. அவன இந்தவாட்டி முடிச்சுவிட்டாத்தான் சரியா வரும்...” என மருது ஆத்திரப்பட, காளியும் சம்மதம் சொல்லிவிட்டான்.

அறிவு, மூர்த்தியை அழைத்துக்கொண்டு பூசை போடுவதற்காக பாண்டிகோயில் வந்திருந்தான். சுற்றிலும் கருவேலங்காடு, காட்டின் நடுவே பாண்டிமுனியின் கோயில். ஒவ்வொரு நாளும் பாண்டிமுனியைக் காண வரும் பக்தர் கூட்டம் குறைவதில்லை. கோயிலுக்குச் செல்லும் மண்சாலையில் இடைவெளி இல்லாத மனிதக் கூட்டம். கையிலிருந்த தாம்பாளத் தட்டை அறிவு, தலைக்கு மேலாகத் தூக்கிக்கொண்டான். வியர்வையில் உடல் கசகசத்தாலும் பாண்டிமுனியின் மீதிருந்த பக்தி பொறுத்துப்போகச் செய்தது. கூட்டத்தைக் கடந்து சாமி பார்க்க வந்து நிற்கும்போது, வியர்வையில் உடல் தொப்பலாக நனைந்துபோயிருந்தது. இந்தமுறை தனது வேட்டையிலிருந்து மருது தப்பிவிடக் கூடாது என அறிவு பயபக்தியோடு வேண்டிக்கொண்டான். ஆக்ரோஷமாக நிற்கும் பாண்டியைப் பார்க்க துணிவில்லாமல் கண்ணை மூடி வேண்டிக்கொண்டான். பூசை முடிந்து, மக்கள் கூட்டத்தைத் தாண்டி கார் நிற்கும் இடத்துக்கு வந்தபோது, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என மனதில் தோன்றியது. காரின் ஒரு கதவைத் திறந்து மூர்த்தி ஏற, டிரைவர் சீட்டை நோக்கிச் சென்ற அறிவை ஒருவன் பிடித்து இழுத்துப் போட்டான். அறிவு சுதாரிப்பதற்குள், வந்தவன் இவனது வலது கையைத் துண்டாக வெட்டி எடுத்தான். “ஐய்யய்யோ…” என அலறும் அறிவின் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் வெட்டிய கையை எடுத்துக்கொண்டு மலைச்சாமி நடக்க, தூரத்தில் காளி அனுப்பிய ஆட்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் தயங்கி நின்றிருந்தார்கள்.

(ஆட்டம் தொடரும்)