மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம் - 47

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

சோமு, மூர்த்தி, அறிவு என இன்னும் யார் யாரோ அவன் ரத்தம் குடிக்கும் வெறியோடு அலைவதாக அவனது மனதுக்குள் காட்சிகள் ஓடின.

மதுரையில் போலீஸ்காரர்களும் காளியின் ஆட்களும், சந்திரனின் ஆட்களை வலைவீசித் தேடிக்கொண்டிருக்க, அவர்கள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டனர். காளி, செய்தித்தாளில்தான் அந்த நான்கு இளைஞர்களின் முகங்களையும் முதலில் பார்த்தான். மீசை அரும்பத் தொடங்கியிருக்கும் வாலிபர்கள், இவர்களுக்குள் மலைச்சாமியை வீழ்த்துமளவுக்குத் துணிச்சலும் வீரமும் எங்கிருந்து வந்ததென்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தன்னைச் சுற்றித் தனக்கு நெருக்கமாக இருப்பவர்களின்மீது நிகழும் தாக்குதல்கள் மறைமுகமாகத் தனக்கான எச்சரிக்கைகள் என்பதைப் புரிந்துகொண்டான். அதிகாரம், பணம் எல்லாமிருந்தும் ஏதோவொன்று தன்னிடமிருந்து விலகிக்கொண்டிருப்பதாக, காளிக்குத் தோன்றியது. வெளியில் போக்குவரத்தைக் குறைத்துக்கொண்டு வீட்டிலேயே அடைந்துகிடந்தவனை அவன் மனைவி சுப்புத்தாயி கவலையோடு பார்த்தாள். அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி வேறு எதற்காகவும் அவளோடு காளி பேசுவதில்லை. என்றாலும், அவளுக்கு அவன் மீதான நேசமும் அக்கறையும் ஒருபோதும் குறைந்ததில்லை. ஊரே வியந்து பார்க்கும் ஒருவன் வீட்டுக்குள் இப்படி அச்சத்தோடு முடங்கிக்கிடப்பதைப் பார்த்து மனம் ஒப்பாமல், பேசலாமென நெருங்கிச் செல்லும்போதெல்லாம் காளி அவளைத் தவிர்த்தான். முத்தையாவையும் மருதுவையும் பார்த்துப் பேசுவதோடு சரி, மற்றவர்களைச் சந்தேகத்தோடு பார்க்கச் சொல்லி மனம் எச்சரிக்கை படுத்தியபடியே இருந்ததால், அவன் உறங்கும் நேரம் குறைந்தது. இரவுகளில் எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு நடுவீட்டில் தனியாக அமர்ந்திருப்பான். அவன் முதுகுக்குப் பின்னால் யாரோ அவன் கழுத்தறுக்கத் தயாராக இருப்பதுபோல் நிழல்களின் நடமாட்ட மிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டான். முதலில் அந்த நிழல்களுக்கு உருவமில்லாமலிருந்தது. பின்பு தனக்கு விரோதமான எல்லோரின் முகங்களும் அந்த நிழலில் தெரியத் தொடங்கின. சோமு, மூர்த்தி, அறிவு என இன்னும் யார் யாரோ அவன் ரத்தம் குடிக்கும் வெறியோடு அலைவதாக அவனது மனதுக்குள் காட்சிகள் ஓடின. கண்களைச் சுற்றி நிரந்தரமாகக் கருவளையம் விழுந்து முகம் ஒடுங்கிப்போனது.

ரெண்டாம் ஆட்டம் - 47

ஊர் அடங்கிவிட்ட நள்ளிரவு. அந்த வீதியில் மனித நடமாட்டமே இல்லை. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைத்துக்கொண்டிருக்க, சத்தம் சன்னமாக எதிரொலித்துக்கொண்டிருக்க, காளியின் வீட்டில் ரேடியோவில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சாய்வு நாற்காலியில் சரிந்து உட்கார்ந்திருந்த காளியின் முகம் விட்டத்தைப் பார்த்தபடியிருந்தது.

“இந்தா... உனக்கு என்னதான் பிரச்னை... சொத்துக்குக் குறையா? சொகத்துக்குக் குறையா... எதுக்கு இப்பிடியே கெடக்க?”

சுப்புத்தாயின் குரல் அவனை உலுக்கியபோது, சலனமேயில்லாமல் அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ஏன் உனக்கென்ன புதுசா அக்கற? போயி பொத்திக்கிட்டுத் தூங்கு...” என்றான்.

“நான் ரொம்ப வருசமாவே பொத்திக்கிட்டுத் தாண்டா இருக்கேன். உனக்கு என்னிக்கு அதிகாரமும் பணமும்தான் முக்கியம்னு என்னயத் தூக்கி எறிஞ்சியோ, அன்னியிலருந்தே ஆம்பளத் துணை இல்லாமப் பொத்திக்கிட்டுத்தான இருக்கேன்.”

காளிக்குச் சுருக்கென்றிருந்தது.

“ஓ… ஆம்பளத் துணை வேணும்னா போயி எங்கியாச்சும் தேவிடியாத்தனம் பண்ண வேண்டியதுதான?”

அவன் சொன்னதைக் கேட்டதும் சுப்புத்தாயிக்குச் சுள்ளென உடம்பில் ஆத்திரமேறியது. சாய்வு நாற்காலியோடு அவனைக் கீழே தள்ளிவிட்டாள். எதிர்பாராமல் நிகழ்ந்ததால், காளியும் சுதாரிக்க முடியாமல் சரிந்து விழுந்தான்.

“யாரப் பாத்துத் தேவிடியாத்தனம் பண்ணச் சொல்ற.. இத்தன வருசத்துல உன்னையத் தவிர இன்னொருத்தன் நிழலயாச்சும் நெருங்கியிருப்பனா... எதுக்குடா உனக்கு என்மேல இம்புட்டுக் கடுப்பு? சும்மா இருந்தவள அரசியலுக்கு நீதான இழுத்துட்டுப்போன… எல்லாத்தையும் உனக்காகத்தான செஞ்சேன். அதுல நல்லது கெட்டது வரத்தான் செய்யும். அதைப் பொறுத்துக்க முடியாம என்னைய விரோதி மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டல்ல… இங்காரு, ஒண்ணு மட்டும் நல்லாத் தெரிஞ்சுக்க. நானும் உங்கூட இல்லாமப் போயிட்டா உனக்குன்னு இந்த உலகத்துல எவனும் கெடையாது. உன்னயச் சுத்தி இருக்கவனுங்கல்லாம் உனக்கு விசுவாசமானவங்கதான், உன் நண்பனுங்க இல்ல. யாருக்கும் உன்னால நண்பனா இருக்க முடியாது. அதனாலதான் உனக்கும் எவனும் நண்பனா இருக்க மாட்றானுங்க. இப்பிடி ஒத்தக் கொரங்காவே இருந்து செத்துராத…”

அவள் பேசப் பேச காளிக்கு அவள் மீதிருந்த ஆத்திரமெல்லாம் காணாமல்போய், தன்மீதான இயலாமையில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. குத்தவைத்து அமர்ந்திருந்தவனின் கண்களிலிருந்து பொங்கிய கண்ணீர், அவன் வேஷ்டியை நனைக்க, குரலெடுத்து அழத் துடித்த மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு கண்ணீர் சிந்தினான்.

“அழு... நல்லா அழு… எத்தன ராத்திரி என்னையக் கண்ணீர் சிந்த விட்ருப்ப. நீ செஞ்ச கொடுமைக்கி ரெண்டு அரளிக்காய அரைச்சு உனக்குக் கொடுக்கற சோத்துலவெக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? பெத்த புள்ளைக தோளுக்கு மேல வளந்துருச்சுன்னு அதுககிட்டக்கூட நான் எதையும் காட்டிக்கிறதில்ல. இப்ப என்னடான்னா என்னையத் தேவிடியாத்தனம் பண்ணச் சொல்றல்ல…”

சுப்புவுக்கு வார்த்தைகள் ஒடுங்கி, குரல் தடுமாறியது. இரவின் அசாத்திய நிசப்தத்தில் தன் அழுகுரல் உறங்குகிறவர்களை எழுப்பிவிடக் கூடாதென்கிற கவனத்தில் சிரமத்தோடு கட்டுப்படுத்திக்கொண்டாள். காளியும் குலுங்கி அழத் தொடங்க, அவள் நெருங்கிச் சென்று தன்னோடு பிணைத்துக்கொண்டாள். அவள் முன்னால் மண்டியிட்டிருந்தவனின் தலையைத் தன்னோடு இறுக்கிக்கொள்ள, காளி அவள் கால்களை இறுகக் கட்டிக்கொண்டான். சுப்புவுக்குப் பேச்சு நின்றுபோனது. அழுகிறவனின் இதயம் துயர் நீங்கி அமைதியாகும்வரை பொறுமையாகக் காத்திருந்தவளுக்கு மனதிலிருந்த பாரம் ஓய்ந்துவிட்டதில் ஓர் நிம்மதி. அவனின் தலையை வருடிக் கொடுத்தாள்.

ரெண்டாம் ஆட்டம் - 47

“எவன் உதவியும் இல்லாம கைய ஊண்டி, கால ஊண்டி மேல வந்தவன் நீயி. எதுக்கு இப்பிடி எல்லாத்துக்கும் பயப்படற?”

காளி அவளிடமிருந்து விலகினான். கண்களைத் துடைத்தபடியே எழுந்தவன், “நான் யாரோட பகைக்கும் பயப்படல சுப்பு. எதிரி நேருக்கு நேரா வந்தா எம்புட்டு பெரியத் தாட்டியக்காரன்னாலும் என்னைய ஜெயிக்க முடியாது. ஆனா, எல்லாருமே முதுகுக்குப் பின்னாலதான் வர்றானுங்க. எனக்குன்னு இருக்கற நான் நம்பற ஆளுகள அழிக்கப் பாக்கறானுங்க. அன்னிக்கி கொஞ்சம் அசந்திருந்தா மருது செத்துப்போயிருப்பான். இந்தா இன்னிக்கி மலச்சாமிய முடிச்சுவிட்டுட்டாய்ங்க. அடுத்து என்ன... முத்தையாவும் நானுந்தான…” என்றபோது அவன் கண்களில் வெளிப்பட்ட அச்சத்தைக் கண்ட சுப்பு, அவன் கையை இறுகப் பற்றினாள்.

“வயசு கூடக் கூட பகையும் கூடத்தான் செய்யும் மாமா… மனுசப்பய விதி அது. உனக்குன்னு இல்ல. சும்மா தான் உண்டு தன் வேல உண்டுன்னு இருக்கவனுக்குக்கூட எவனோ ரெண்டு பேரு வேண்டாதவன் இருக்கத்தான் செய்வான். அதுக்காக எல்லாரும் எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டு இருந்தா சரியாப் போகுமா? உனக்கு மருது இருக்கான், முத்தையா இருக்கான். ஏன்... வேற எவனுமே இல்லாமப்போனாலும் நான் இருக்கேன். என் உசுரு இருக்கற வரைக்கும் எவனும் உன்னய எதுவும் செய்ய முடியாது. நீ எப்பவும்போல தைரியமா இரு…”

காளி அவள் கண்களில் பொங்கிய காதலை நீண்ட காலத்துக்குப் பிறகு புரிந்துகொண்டவனாக அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவன் நெற்றியிலும் முகத்திலும் முத்தமிட்டவள், “மலச்சாமி சாவுக்கு அவனேதான் காரணம். நம்ம வீட்டுப் பொம்பளப் புள்ளகிட்ட ஒருத்தன் அத்துமீறுனா நாம சும்மா இருப்பமா? புழுவக்கூட ரொம்பக் குத்தினம்னா அது எதுத்து நிக்கத்தான் செய்யும். அந்தப் பயகலும் அதத்தான் செஞ்சிருக்காய்ங்க. அத மறந்துடு.”

காளி சரியெனத் தலையசைத்தான். மனதிலிருந்த பாரமெல்லாம் கண்ணீரில் கரைந்துவிட்ட ஆறுதலில், உடலுக்கு ஆழ்ந்த உறக்கம் தேவைப்பட்டது. அவனை அப்படியே விட்டுவிட்டு சுப்பு சென்றுவிட, காளி சாய்வு நாற்காலியில் சாய்ந்து உறங்கத் தொடங்கினான்.

தனது வளர்ச்சிக்குத் தடையாயிருந்த ஒருவன் அழிந்துவிட்ட மகிழ்ச்சி மனம் முழுக்க நிறைந்திருந்தாலும், முத்தையா அதை முகத்தில் காட்டிக்கொள்வதில்லை. காளியும் மருதுவும் சாராயக்கடைகளின் பக்கமாக வராத இந்த நாள்களில், காளியின் அத்தனை சாராயக் கடைகளையும் முத்தையாவே நிர்வகிக்கத் தொடங்கி யிருந்தான். தன்னைக் கட்டுப்படுத்த ஒருவருமில்லை என்ற எண்ணம் அவனுக்குள் இனம் புரியாத கிளர்ச்சியை உருவாக்கியிருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, காளி பழைய காளியாகத் திரும்பியபோது, முத்தையாவிடம் வெளிப்பட்ட மாற்றங்களை உடனடியாகக் கண்டுகொண்டான். “எலேய் முத்து... என்னடா சடார்னு பெரிய மனுஷனாட்டம் ஆயிட்ட?” என காளி கேட்டதிலிருந்த உள்ளர்த்தத்தைப் புரிந்து சுதாரித்துவிட்ட முத்தையா, “என்னண்ணே செய்யச் சொல்ற? நீயும் வீட்லயே முடங்கிட்ட, மருதுவும் வெளிய வர மாட்டேங்குது… ஒத்த ஆளா நான்தான் எல்லாத்தையும் பாத்துக்கிருக்கேன். பழைய ஆளா எல்லாருகிட்டயும் சிரிச்சுக்கிட்டே இருந்தா இளிச்சாப்பயன்னு நெனச்சு ஏச்சுப்புடறாய்ங்க” என வருத்தத்தோடு சொன்னான். காளி அவன் தோள்களைத் தட்டிக்கொடுத்தான். “நீயும் இல்லாமப் போயிருந்தா நான் என்ன ஆயிருப்பனோ தெரியலடா… ரெண்டு வாரமா இத்தன கடையவும் ஒரு சின்ன சண்டைச் சச்சரவுகூட இல்லாமப் பாத்துக்கிட்டு இருக்க. தெறமக்காரன்தாண்டா நீ…” என காளி சொன்னதைக் கேட்டபோது, இத்தனை காலம் காத்துக் கிடந்ததற்குப் பலனாகத் தனக்கான கதவுகள் திறக்கப்படப் போகிறதென்கிற நம்பிக்கையில் முத்தையாவின் மனம் பூரித்தது.

(ஆட்டம் தொடரும்)