மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 61

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்!

“அருளு, ரொம்ப சந்தோசம்டா… ஆனா இந்தத் தொழில ரொம்ப நாளைக்கி செய்யணும்னு நெனச்சா நம்பிக்கையான பயகள கூடவெச்சுக்க. அதுதான் முக்கியம்”

கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் முழுமையாக ஆறுவதற்கு முன்பாகவே காளி வீடு திரும்பியிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த பரபரப்புகள் எல்லாம் அடங்கிப்போயிருந்ததால், சூனியம் நிரம்பியதொரு அமைதி வீட்டை ஆக்ரமித்திருந்தது. இத்தனை வன்முறைகளுக்கும் அப்பால் இந்த உயிரைக் காத்து நிற்பது எதுவென்கிற கேள்வி, காளிக்குள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

சின்னஞ்சிறிய கிராமத்தில் யாரும் பொருட்படுத்த விரும்பாத ஒரு கூலிக்காரருக்கு மகனாகப் பிறந்து, எந்த ஆதரவுகளும் இல்லாமல் வளர்ந்து ஏதோவொரு தருணத்தில் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பற்றிக்கொண்டு, இத்தனை தூரம் ஓடிவந்த பின்னாலும் வாழ்க்கை சீரற்றதாக இருப்பதேன்? சில காலம் ராஜாவாக வைத்திருக்கும் இதே ஊர்தான் இன்னொரு காலத்தில் சீந்துவாரின்றி மாற்றிவிடுகிறது. “நெதம் மூணு வேளக் கஞ்சி இருந்தா போதும்னு மார்க்கெட்லயே கெடந்திருந்தா வாழ்க்க நிம்மதியா இருந்திருக்கும்ல சுப்பு…” எனத் தன் மனைவியிடம் புலம்பினான். “ந்தா எல்லா நல்லது கெட்டதும் ஏத்த எறக்கமும் இருந்தாதான் அவென் மனுசன். எதுமே மாறாம அப்பிடியே கெடந்தா மரம். உழைக்கிறதுக்கும் திங்கறதுக்குந்தான் இந்தப் பொறப்புன்னா, மாட்டுக்கும் நம்மளுக்கும் என்ன வித்தியாசம்? நீ உன் வாழ்க்கைய முழுசா வாழ்ந்திருக்க, இனியும் வாழப் போற… கண்டதையும் யோசிக்காம செவனேனு இரு…” முதுமை கூடும்போது பக்குவம் இயல்பாகிவிடும்போல, சுப்புத்தாயி வாழ்வை நன்றாகப் புரிந்துகொண்டிருந்தாள்.

ரெண்டாம் ஆட்டம்! - 61

இழப்புகளையும் தோல்விகளையும் கடந்துவருகிற மனிதனைச் சூழும் தனிமை கொடூரமானது. சாராயக் கடைகளும், லாரி செட்டுகளும், மார்க்கெட்டில் பவுசுமாக காளிக்கு வருமானத்துக்குக் குறையொன்றுமில்லை. இந்த நிலையிலிருந்து எத்தனை மேலான நிலைக்கும் தன்னை உயர்த்திக்கொள்வதற்கான திராணி இப்போதும் அவனுக்குண்டு. ஆனால், இத்தனை காலம் அவனோடிருந்த ஏதோவொன்று தன்னிடம் இல்லையெனத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தான். துணிச்சலும், நம்பிக்கையும் தன்னோடு இருக்கிறவர்களின் பலமறியும்போதுதான் பன்மடங்காகும். எதிரிகளுக்கு முன்னால் வாலிக்கு மட்டும் வேண்டுமானால் பலம் இரு மடங்காகலாம், மனிதர்களுக்கு நண்பர்கள் மட்டுந்தான் எப்போதும் பலம். காளி தன்னை பலமற்றவனாக உணரக் காரணம், அவன் நண்பர்கள் யாரும் இப்போதில்லை. வேலைக்கு ஆயிரம் பேர் உடனிருந்தாலும், நம்பிக்கையான ஒரு நண்பனின் பலத்துக்கு அது ஈடாகாது என்பதை இத்தனை காலத்துக்குப் பின் நண்பர்களே இல்லாதபோதுதான் காளியால் புரிந்துகொள்ள முடிந்தது.

பகல் வேளைகளிலும் இருளடர்ந்த தனது அறைக்குள் காளி முடங்கிக் கிடந்தான். “எப்பா... நீ எதுக்கு இப்பிடி கெடந்து மருகிட்டு இருக்க? உனக்கென்ன கொற? சொத்து சொகம் இருக்கு. சீக்கில்லாம தெம்பா இருக்க. உன் பாட்டுக்கு எப்பயும்போல பொழப்பு தழப்புகளப் பாக்க வேண்டிதான?” சுணங்கிக் கிடந்தவனை மகன் அருளின் குரல் உசுப்பியது. சோர்வோடு எழுந்தமர்ந்த காளி “சொத்து சொகம்ங்கறது வெறும் காசு பணம் மட்டுமில்லடா அருளு, மனுச மக்களும் இருக்கணும். உசுருக்கு உசுரா இருந்த நண்பனுங்க ஒருத்தனும் இல்ல, சொந்தக்காரய்ங்களும் இல்ல. நல்லது கெட்டத பகிந்துக்கறதுக்கு யாருமே இல்லாம அனாதையாப் போயிட்டமேன்னு வேதனையா இருக்குடா” என எதிலும் பிடிப்பின்றிச் சொன்னான்.

“யாருமே இல்லயா? அம்மா, அக்கா நான்னு மூணு பேரு உனக்காகத்தானப்பா இருக்கோம். ஒரு வயசுக்கு அப்றம் ஆம்பளைக்கு வீட்டுக்கு வெளியதான் உலகம்னு நெனப்பு வந்துருச்சுன்னா குடும்பம் குட்டிங்கள மறந்திடறதா? இத்தன வருசத்துல எப்பயாச்சும் அம்மா உன்னய விட்டு விலகிப்போயிருக்குமா? இல்ல நாங்கதான் உனக்குப் புடிக்காத ஒண்ண செஞ்சிருப்பமா?”

“ச்ச… ச்ச… அப்பிடி இல்லடா அருளு... என் சம்பந்தப்பட்ட எந்தத் தகராறுக்குள்ளயும் உங்கள ஏன் இழுத்துவிடல தெரியுமா? எல்லா ரெண்டா நம்பர் வேலயும் என்னோட போயிரணும். நீங்க யாரும் அதுல மாட்டிக்கிடக் கூடாதுன்னுதான். அதனாலேயேதான் எம்புட்டு சிக்கல் வந்து சீப்பட்டுப் போனாலும் உங்கக்கிட்ட எதையுமே சொல்லாம இருந்தேன்.”

“நீ எதையும் சொல்லாட்டியும் எங்களுக்கு எல்லாம் தெரியும்ப்பா. உனக்கு உன்னோட உலகம் பெருசு, எங்களுக்கு நீ மட்டுந்தான் உலகம். நீ எப்ப சிரிக்கிற, எதுக்காகச் சிரிக்கிற? எப்ப கோவப்படறன்னு எல்லாத்தையும் நாங்க பாத்துருக்கோம். கண்டத நெனச்சு மனச ஒலப்பாத. உனக்கு அப்பறம் இதையெல்லாம் யார் பாத்துக்கப் போறாங்கங்கனுதான கவலப்படற… நான் பாத்துக்கறேன்…”

“டேய்… நீ சின்னப்பையண்டா... உனக்கு நெளிவு சுழிவுல்லாம் தெரியாது.”

“நான் உன் மகென்ப்பா… மார்க்கெட்ல மூட்ட தூக்கிட்டுருந்த ஆளு, ஒருநாள் மார்க்கெட்டையே ஆள ஆரம்பிச்சப்ப... எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா போன?”

காளி, ‘இல்லை’ எனத் தலையாட்டினான்.

“நான் உன்னயப் பாத்து வளந்திருக்கேன். எது சரி எது தப்புன்னு நீ சொல்லிக் கொடுக்காமயே எல்லாத்தையும் பாடமா படிச்சிருக்கேன். கவலப்படாதப்பா நான் நல்லவிதமா கவனிச்சுக்கறேன்.”

அருள் நம்பிக்கையாகப் பேசியபடி, அப்பாவின் தோள்களை இறுக அணைத்துக்கொண்டான். நேற்று வரையிலும் அவனை உலகம் தெரியாத இளைஞனாகப் பார்த்துக்கொண்டிருந்த காளிக்கு, சடாரென வளர்ந்து நிற்கும் முழு மனிதனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த முடிவும் சொல்லாமல் அமைதியாக மகனின் அரவணைப்பில் யோசனையில் ஆழ்ந்தான்.

அருள், வாய் வார்த்தையாகவெல்லாம் சொல்லியிருக்கவில்லை. அடுத்த நாள் காலையிலேயே கிளம்பி, காளியின் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டான். அப்பாவின் உடை, அப்பாவின் வாகனம், அப்பாவைப் போலவே திருத்தமாய் நறுக்கிய மீசை. அலுவலகத்திலிருந்த எல்லோரும் ஒரு நொடி அசந்துபோனார்கள். “ஏய் என்னப்பா இந்தப்பெய ஆளே மாறி வந்திருக்கான்” எனத் தங்களுக்குள்ளாக வியப்போடு பேசிக்கொண்டார்கள். ஒரு மாத காலமாகச் சரிபார்க்கப்படாத கணக்கு வழக்குகளையும், சரக்குகள் கொள்முதல்களையும் மாலைக்குள்ளாகவே சரிசெய்துவிட்டான். செல்லூர் பகுதியிலிருந்த ஒரு சாராயக் கடையில் சமீபமாகச் சில பிரச்னைகளிருந்தன. கடைக்குப் பொறுப்பாயிருந்து பார்த்துக்கொண்டவன் “தம்பி... அப்பாகிட்ட ஒரு சமாச்சாரம் சொல்லணும். நாளைக்காச்சும் வருவாரா?’’ எனத் தயங்கியபடியே அருளிடம் கேட்டான்.

ரெண்டாம் ஆட்டம்! - 61

“ஏண்ணே என்ன விஷயம்?”

‘`சோமு குடும்பத்து ஆளுங்களோட தொல்ல இந்த ஏரியால அதிகமாகிடுச்சு. சோமு இருந்த வரைக்கும் அவுக கடைக இருக்கற பக்கம் நம்மாளுகத் திருட்டு சரக்கு ஓட்றதுல்ல, நம்ம கடைக பக்கம் அவுகளும் ஓட்றதுல்ல… சோமு செத்ததுக்கு அப்றம் அவரு தம்பி பாண்டியன் நம்ம ஏரியால அடிக்கடி திருட்டு சரக்கு ஓட்டிட்டு இருக்காப்ள…”

“விக்கிறவய்ங்கள கண்டா அடிச்சுத் தொவைக்க வேண்டிதானண்ணே... இல்லன்னா அறிவு அண்ணன்கிட்ட புகார் பண்லாம்ல…”

“நாங்களும் சிக்கிறவய்ங்கள புடிச்சு அடிக்கிறோம் தம்பி. ஆனா, அவய்ங்க எங்களுக்கும் பாண்டியனுக்கும் சம்பந்தமே இல்லன்னு சாதிச்சிடறாய்ங்க. உங்க அப்பா அடிக்கடி வந்தா அவய்ங்களுக்குக் கொஞ்சம் பயம் இருக்கும்.”

அருள் சிரித்தான். “இந்தப் பிரச்சனைய நாம் பாத்துக்கறண்ணே... நீங்க கவலப்படாம இருங்க” நம்பிக்கையாய்ச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அருள் வீடு வந்து சேர்வதற்கு முன்பாகவே, அவன் வியாபார விவகாரங்களை எத்தனை லாகவமாகக் கையாண்டான் என்ற தகவல்கள் காளிக்கு வந்துசேர்ந்திருந்தன. “ஏத்தா, ஆளு இம்புட்டுக்கானா இருந்துக்கிட்டு இந்தப் பயல பாத்தியா... எம்புட்டுக் காரியக்காரனா இருக்கான்னு? எல்லாக் கடைக்கும் எவ்வளவு சரக்கு தேவப்படும்னு மொதக்கொண்டு சரியா பாத்து ஒரே நாள்ல வரவெச்சிருக்கான். இம்புட்டு வெவரமா இருப்பான்னு நெனைக்கவே இல்ல?” சுப்புவிடம் காளி ஆச்சர்யமாகச் சொல்ல, “நீ செயில்ல இருந்த காலத்துல கரிமேடு மார்க்கெட்ட தெறமையா பாத்துக்கிட்டேன்னா அதுக்கு அவந்தான் காரணம். யார அனுசரிச்சுப் போகணும், யார மொறச்சுக்கணும்னு அப்பவே கணிச்சு சொல்லுவான்...” எனச் சுப்பு சிரித்தாள். சுப்பு அவனைக் கெட்டிக்காரனாகத்தான் வளர்த்திருக்கிறாள் என காளிக்குப் பெருமிதமாக இருந்தது.

வீடு திரும்பிய அருள், ஒரு மாத காலம் சாராயக்கடைகளில் விற்பனைக் கணக்குகளையும், மார்க்கெட் வரவுசெலவுகளையும் விலாவாரியாய் காளியிடம் சொன்னான். காளி எல்லாவற்றையும் பொறுமையாய்க் கேட்டுக்கொண்டு “அருளு, ரொம்ப சந்தோசம்டா… ஆனா இந்தத் தொழில ரொம்ப நாளைக்கி செய்யணும்னு நெனச்சா நம்பிக்கையான பயகள கூடவெச்சுக்க. அதுதான் முக்கியம்” என அக்கறையோடு சொன்னான். “எங்கூட பயக இருக்காய்ங்கப்பா... நீ ஒண்ணும் பயப்படாத…” என்ற அருள், “நம்ம செல்லூர் கடைல பிரச்சனைன்னு சொன்னாய்ங்க, பாண்டியன் ஆளுகள வெச்சு திருட்டு சரக்கு ஓட்றாப்லையாம்… அறிவு அண்ணேன்கிட்ட ஒரு வார்த்த பேசறியா?” என காளியிடம் விஷயத்தைச் சொன்னான். குழப்பத்தோடும் யோசனைகளோடும் அவனைப் பார்த்த காளி “தம்பி, அறிவு நம்மகூட இப்ப நல்லவிதமா இல்லய்யா... நாம சொன்னாலும் அவய்ங்கள கண்டிக்க மாட்டான்” என்று சொல்ல, ஒரு நிமிடம் தந்தையை அமைதியாகக் கவனித்த அருள் “சரிப்பா... நான் சொன்னதையே நீ மறந்திரு. என் பயகள வெச்சு இத நான் பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

(ஆட்டம் தொடரும்)