மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 63

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

செல்லூர் பாலத்துக்குக் கீழ மூணு பேரோட கைய எரிச்சுப் பொசுக்கி விட்ருக்காய்ங்க. அதும் எப்பிடி? ஊரே நின்னு வேடிக்க பாக்கவெச்சு…

செல்லூர் கண்மாய்க் கரையை ஒட்டியிருந்த வீதியில், சோமுவின் ஆட்கள் கனஜோராகத் திருட்டு சரக்கு ஓட்டிக்கொண்டிருந்தார்கள். ஐந்து லிட்டர் கேன்களிலும், பத்து லிட்டர் கேன்களிலும் பாண்டியன் நிறைய பேரை அந்தப் பகுதியில் உலவவிட்டான். “ரொம்ப நேரம் ஒரே எடத்துல இருக்காதியடா… அப்பப்ப நோட்டம் பார்த்துக்கிட்டே இருந்து எடத்த மாத்திக்கங்க…” என எச்சரித்தும் அனுப்பியிருந்தான். காளியின் சாராயக் கடையில் விற்பதைவிடவும் ஒரு கிளாஸுக்கு நாலணா குறைவாக விற்றதால், கேன்களில் சாராயம் விற்கிறவர்களைத் தேடிவரும் கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது.

அருள், தன் நண்பர்களின் மூலமாக இரண்டு மூன்று நாள்கள் நிதானமாக எல்லாவற்றையும் கண்காணித்தான். தாக்குதலில் அவசரம் காட்டக் கூடாதென்பது அவனது எண்ணம். “அருளு… இந்தப் பக்கத்துல எங்கெல்லாம் நம்ம கடை இருக்குதோ, அங்கெல்லாம் அவய்ங்க ஆளுகள எறக்கி விட்ருக்காய்ங்க. ஒவ்வொரு கடையச் சுத்தியும் நாலு பேராச்சும் இருக்கான். இப்பயே பேருவாதி யாவாரம் போச்சு, இவய்ங்களை எதும் செய்யாம விட்டம்னா... நாம சீக்கிரத்துலயே கடைய மூட வேண்டியதுதான்.” திருட்டுச் சரக்கு ஓட்டியவர்களைக் கண்காணித்த அவனது நண்பர்கள் கவலையோடு சொன்னார்கள். அருள் எல்லாத் தகவல்களையும் கேட்டுக்கொண்டு என்ன செய்ய வேண்டுமெனத் தெளிவானதொரு திட்டம் தீட்டினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 63

செல்லூர் பாலத்திலிருந்து முத்து மாரியம்மன் கோயில் செல்லும் சாலையிலிருந்த சாராயக்கடைதான் அந்தப் பகுதியில் பிரபலமான ஒன்று. வேலை முடிந்து அந்தப் பகுதியைக் கடந்து சைக்கிளில் செல்கிறவர்கள்கூட, போகிற வழியிலிருப்பதால் இந்தக் கடையில் நின்று குடித்துவிட்டுச் செல்வார்கள். சோமு ஆட்களின் கண்களை அதிகம் உறுத்தியதும் இந்தக் கடைதான். காளியின் சாராயக்கடைகளில் மீன் வறுவலும், மொச்சைப்பயறும் தனித்துவமான சுவையில் கிடைக்கும் என்பது பேச்சுவாக்கில் குடிகாரர்களிடம் சுற்றும் செய்தி. அந்தத் தீனியோடு சேர்த்துக் குடிப்பதற்காகத்தான் காளியின் கடைகளுக்குத் தனித்ததொரு கூட்டம் தவறாமல் வந்துகொண்டிருந்தது. இந்தக் கடையைச் சுற்றி, கேன்களில் கள்ளச்சரக்கு ஓட்டியுமேகூட வியாபாரம் பெரிய அளவில் பாதிப்பில்லாமலிருந்தது. அருள் தங்களை அடக்கிவைக்க நினைக்கிறவர்களை அச்சுறுத்த விரும்பினான். “காளியே ஓஞ்சு போயிட்டான். இவென் யார்றா சுண்டக்கா பய…” என யாரும் தன்னைத் தொக்காக நினைத்துவிடக் கூடாதென்கிற நினைப்பு.

இருட்டாகத் தொடங்கியிருந்தது. மில்களில் வேலை முடிந்தவர்களும், பட்டறைகளில் வேலை முடிந்தவர்களும் சாரி சாரியாக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். பாலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்துகொண்டிருந்த ட்யூப் லைட்டுகளைத் தவிர்த்து பெரிய வெளிச்சமில்லை. அருளும் அவன் நண்பர்கள் மூன்று பேரும் பழைய லுங்கி, பனியனோடு சைக்கிளில் யாரோபோல் திருட்டுச் சரக்கு விற்கிறவர்களைத் தேடிச் சென்றனர். பாலத்தின் இன்னொரு பக்கத்தில் நிறைய சைக்கிள்களும், ஆட்கள் கூட்டமும் இருப்பதை கவனித்த அருளின் நண்பனொருவன், “பங்காளி பாலத்துக்கு அங்கிட்டு பாரு…” எனச் சுட்டிக்காட்ட, அருள் கூட்டமிருந்த திசை நோக்கி சைக்கிளைத் திருப்பினான். கூட்டத்தைவிட்டு சற்று தூரத்திலேயே சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றவர்கள், சாராயம் விற்கிறவர்களையும், சுற்றியிருந்த கூட்டத்தையும் நிதானமாக ஆழம்பார்த்தார்கள். இரண்டு மூன்று பேரைத் தவிர்த்து எல்லோருமே குடிக்க வந்தவர்கள்தான். கூலி வேலைக்குச் சென்றுவரும் சாதாரண ஆட்கள். அருளின் நண்பனொருவன் நெருங்கி வந்து அவன் காதுகளில் முணுமுணுத்தான். “பங்கு, நேரம் செண்டுச்சுன்னா கூட்டம் அதிகமாயிரும். எத செய்யணும்னாலும் சட்டுனு செஞ்சுட்டு எஸ் ஆயிரணும்…’’ அருள், அவன் சொன்னதை ஆமோதிப்பதுபோல் தலையசைத்துக்கொண்டான்.

அருளின் நண்பர்கள் இரண்டிரண்டு பேராகப் பிரிந்து, மூன்று குழுக்களாக அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்தனர். முதல் இரண்டு பேர் பிளாஸ்டிக் கிளாஸில் சாராயத்தை வாங்கிக் குடிக்க, அடுத்த இரண்டு பேர் சாராயம் விற்றவனுக்கு இன்னொரு புறத்தில் உட்கார்ந்து சாராயம் கேட்டனர். கூட்ட நெரிசலில் யாருடைய முகத்தையும் பார்க்கப் பொறுமையில்லாமல் வியாபாரி “சில்றையக் குடுய்யா மொதல்ல...” எனச் சத்தம் போட்டான். வியாபாரியோடு இருந்த ஒருவன் சில்லறையை வாங்கிக்கொள்ள, வியாபாரி கிளாஸில் சாராயத்தை ஊற்றிக்கொடுத்தான். அருளும் இன்னொரு நண்பனும் இப்போது வியாபாரிக்கு எதிரில் உட்கார்ந்தனர். மூன்று குழுக்களும் முக்கோண வடிவில் சாராயம் விற்றவர்களைச் சூழ்ந்து உட்கார்ந்தார்கள். அருள் தலையில் உருமா கட்டியிருந்ததால், அவனை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. சில்லறைக் காசுகளாக நீண்டுகொண்டிருந்த கைகளுக்கு நடுவில் ஒரு கையில் மட்டும் பத்து ரூபாய் நோட்டுகள் நிறைந்திருக்க, சாராயம் விற்றவன் வேகத்தைக் குறைத்து நிதானித்தான். ரூபாய் நோட்டுகளிருந்த கையையும், ஆளையும் பார்க்க, அருள் தலையிலிருந்த உருமாக்கட்டை அவிழ்த்தான்.

“விக்கிறதுக்குத்தான வந்து உக்காந்திருக்க... காச வாங்கிக்க...” அருள் சிரித்தபடியே சொல்ல, வியாபாரி கேனை மூடியால் மூடப்போனான். அவனுக்கு இடது பக்கமாக உட்கார்ந்திருந்தவன் மூட முடியாதபடி கையைப் பிடித்துக்கொள்ள, அருள் மறுபடியும் அதே சிரிப்போடு “காச வாங்கச் சொன்னா கேன மூடுற… இந்தாய்யா…’’ எனச் சத்தமாகச் சொல்ல, “தம்பி... பாண்டியன் சொல்லித்தான் விக்கிறோம்…’’ எனத் தடுமாறியபடி வியாபாரி சொன்னார். அருளின் முகத்தில் சிரிப்பு மறைந்து ஆத்திரம் பீறிட்டது. “அவென் பீ திங்கச் சொன்னா நீ திம்பியா?’’ என அமட்டலாகக் கேட்டான். வியாபாரியும், அவனோடு இருந்த இரண்டு பேரும் நடுக்கத்தோடு கையெடுத்துக் கும்பிட்டார்கள். அவர்களுக்கு இரண்டு பக்கத்திலும் உட்கார்ந்திருந்தவர்கள் இடுப்பிலிருந்து கத்தியை உருவ, பயத்தில் ‘‘தம்பி, தம்பி எங்கள விட்ரு தம்பி... நாங்க ஓடிப்போயிர்றோம்… இனிமே இந்தப் பக்கமே வர மாட்டோம்’’ என அலற, அருளும் அவன் நண்பர்களும் எழுந்து அவர்களைச் சூழ்ந்து நின்றனர். விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்த குடிமகன்கள் மெல்ல இடத்தைக் காலி செய்து ஓடிவிட முயல, அருளோடு வந்த ஒருவன் ‘‘ஒரு பயலும் நகரக் கூடாது… எவென் எங்க நிக்கிறியோ அப்பிடியே நில்லு…” எனச் சத்தம் போட்டான். குடிமகன்கள் பதற்றத்தோடு நிற்க, அலறிக்கொண்டிருந்த வியாபாரிக்கு பயத்தில் லுங்கி அவிழ்ந்துகொண்டது. அருள், வியாபாரியின் லுங்கியை உருவி, பாண்டியனின் ஆட்கள் மூன்று பேரின் கைகளையும் ஒன்றாக வைத்துக் கட்டினான். அவர்கள் பயத்தோடு அலறத் தொடங்கியபோது, மூன்று பேரில் ஒருவன் நின்ற இடத்திலேயே சிறுநீர் கழித்துவிட்டான். அருளின் நண்பனொருவன் கேனிலிருந்த சாராயத்தைக் கட்டப்பட்ட கைகளின் மேல் ஊற்ற, மூன்று பேரின் அலறலும் முன்னைவிட அதிகமானது. “என் ஏரியால சாராயம் விக்கணும்னு இனி எவனுக்கும் துணிச்சல் வரக் கூடாது…” என்றபடியே ஊற்றப்பட்ட சாராயத்தின் மேல் நெருப்பைப் பற்றவைத்தான். லுங்கியால் கட்டப்பட்டிருந்த மூன்று பேரின் கைகளும் பற்றியெரிய, சூழ்ந்திருந்த குடிமகன்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். எரியும் கைகளைப் பிரிக்க முடியாமல் அவர்கள் மூன்று பேரும் அங்குமிங்குமாக ஓட, பாலத்தில் சென்றவர்கள் சத்தம் கேட்டு நின்று எல்லாவற்றையும் மிரட்சியோடு பார்த்தார்கள். மூன்று பேரும் வலி தாளாமல் மயங்கி விழுந்த பின்னும்கூட கையில் நெருப்பின் தீவிரம் குறைவதாயில்லை. தீவிரம் குறையக் குறைய மிச்சமிருந்த சாராயத்தை அருளின் நண்பர்கள் அந்தக் கைகளில் ஊற்றியபடியே இருந்தார்கள். மூன்று பேரின் சதையும் நெருப்பில் பொசுங்கி வெறும் எலும்பு மட்டுமே மிஞ்சும் நிலையில், கேனிலிருந்த சாராயம் தீர்ந்துபோனது. எரிந்த சதையின் கவுச்சியைப் பொறுக்காமல், அருளின் நண்பர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு நகர்ந்து செல்ல, அருள் நிதானமாக நடந்து சென்று மயங்கிக் கிடந்தவர்களின் சட்டைப்பையில் சில பத்து ரூபாய்த் தாள்களை வைத்துவிட்டு வந்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 63

செல்லூர் காவல் நிலையத்துக்கு காளி வந்தபோது, ஸ்டேஷனிலிருந்த காவலர்கள் பரபரப்போடு காணப்பட்டனர். சில மாதங்களுக்கு முன்புவரை எழுந்து நின்று மரியாதை கொடுத்த போலீஸ்காரர்களில் ஒருவர்கூட இப்போது அவனைப் பொருட்படுத்துவதாயில்லை. காளி பதற்றத்தோடு அருளைத் தேட, அவனும் அவனது நண்பர்களும் ஒரு செல்லில் அடைக்கப்பட்டிருந்தனர். காளி செல்லை நோக்கி நடக்க “அங்க எங்க போறிய, இப்பிடி வாங்க…” என ஹெட் கான்ஸ்டபிள் கடுமையோடு சத்தம் போட்டார். அது தனக்கான எச்சரிக்கை என்பதைப் புரிந்துகொண்டு காளி பழைய வேகத்தையெல்லாம் விட்டுவிட்டு சாதாரண மனிதனாக அவரின் முன்னால் போய் நின்றான். ஹெட் கான்ஸ்டபிளின் முகத்தில் காளியின் மீதான வெறுப்பு கொப்பளித்துக்கொண்டிருந்தது.

“ஐயா என்னாச்சு... எதுக்குப் பயகளைப் புடிச்சு அடைச்சுவெச்சிருக்கீங்க?”

“என்னாச்சா... இந்தப் பயக என்ன செஞ்சிருக்காய்ங்கன்னு தெரியுமா?”

காளி தெரியாதெனத் தலையாட்டினான்.

“செல்லூர் பாலத்துக்குக் கீழ மூணு பேரோட கைய எரிச்சுப் பொசுக்கிவிட்ருக்காய்ங்க. அதும் எப்பிடி? ஊரே நின்னு வேடிக்க பாக்கவெச்சு…”

காளி அதிர்ந்துபோய் தன் மகனைப் பார்க்க, அருள் பதற்றமே இல்லாதவனாக நின்று கொண்டிருந்தான். கான்ஸ்டபிள், காளியின் மீது அடக்கிவைத்திருந்த பல நாள் வெறுப்பையெல்லாம் அவன் மகனை வைத்துத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்கிற முடிவோடு இருந்திருக்க வேண்டும்.

“ஒரு பயலுக்குக்கூட இன்னும் முழுசா மீச மொளைக்கலை. அதுக்குள்ள சண்டியர்த்தனம். உங்களுக்குப் பொறந்தவென் உங்கள மாதிரிதான வருவான்…”

காளி அவசரமாக இடைமறித்து “ஐயா... என் பய ரொம்ப அப்பிராணிப் பய… இது ஏதோ வேற வெவகாரமாத் தெரியுது… எதுக்கும் ஒருக்கா நல்லா விசாரியுங்க…” என்று சொல்ல, கான்ஸ்டபிள் எரிச்சலில் ஓங்கி மேஜையில் அடித்தார். “என்னய்யா கேணத் தாயோலி மாதிரி பேசிக்கிட்டு இருக்க... இவென் செஞ்ச அக்குரும்ப ஊரே நின்னு வேடிக்க பாத்திருக்கு, நீ இவன அப்பிராணி சொப்புராணின்னு சொல்லிக்கிருக்க. உன்னயும், உங்கூட இருந்தவய்ங்களையும் தட்டிக் கேக்க ஆளில்லாம இருந்ததாலதான ஆட்டமா ஆடினீங்க. இப்ப அப்பிடி இல்லடி மாப்ளே… போலீஸ்காரய்ங்க பவர்னா என்னன்னு இனிமே தெரியும்… நாந்தான் எரிச்சேன்னு அவனே வாக்குமூலமும் குடுத்துட்டான். உன் மொக தாச்சணைக்காக இவய்ங்கள அடிக்காம வெச்சிருக்கோம். உனக்கு தெறமிருந்தா போயி நல்ல வக்கீலப் பாரு…”

காளியின் முகத்தைப் பார்க்கவே விரும்பாதவராக கான்ஸ்டபிள் சத்தம் போட்டுவிட்டுச் செல்ல, அவன் குழப்பத்தோடும் அச்சத்தோடும் மெதுவாக வாசலை நோக்கி நடந்தான். “எப்பா, எப்பயும்போல கெத்தா இருப்பா… இந்தக் கேஸ்லாம் ஒண்ணுமில்ல…” செல்லுக்குள்ளிருந்து அருள் சத்தமாகச் சொல்ல, காளி ஒரு நொடி நின்று திரும்பிப் பார்த்தான். எந்த அச்சமும் இல்லாத அருளின் முகத்தைப் பார்க்க இவனுக்கே அச்சமாயிருந்தது.

(ஆட்டம் தொடரும்)