மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 65

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

“கண்ண மூடிக்கிட்டு அந்தப் பிள்ளைய நம்பினது தப்பா போச்சேடா… உசுரக் குடுத்து நீ ஒழச்சு உருவாக்கினத அவ நேக்கா எடுத்துக்கப் பாக்கறா…”

ஒவ்வொரு மனிதனும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வாழ்க்கை அவனுக்கொரு சந்தர்ப்பம் தருகிறது. வெகுசிலர் மட்டுமே அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கோட்டைச்சாமியின் அழிவு, ஒரே நேரத்தில் ஜெகதிக்கும் செல்வத்துக்குமாக அப்படியானதொரு சந்தர்ப்பத்தைப் பரிசளித்திருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நம்பிய செல்வம், அவனது தலைக்கு மேலிருந்து ஆட்டுவிக்கும் ஜெகதியின் விளையாட்டுகளை அறிந்திருக்கவில்லை.

கட்சி அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி தனக்குச் சாதகமாக முடிந்தபோது, ஆண்டிச்சாமி குடும்பத்து ஆட்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி ஜெகதிக்கு இருந்தது. எதிரிகளே இல்லாததொரு சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்கும் முனைப்பில் எல்லாவற்றுக்கும் தயார்ப்படுத்திக்கொண்டாள். தன்னைச் சுற்றி விழும் வெளிச்சம் மறைந்துபோவதற்குள் தனக்கானதொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது அவளது விருப்பம். செல்வம் சம்பாதித்த பகை தன்னை வீழ்த்திவிடக் கூடாதென்கிற எச்சரிக்கையில்தான் ஆண்டிச்சாமியின் குடும்பத்தை நட்பாக்கிக்கொண்டாள்.

நீண்டகாலமாக அடைத்துக்கிடந்த ஆண்டிச்சாமியின் மரக்கடையைத் தன் ஆட்களைவைத்து ஒரே நாளில் சீரமைத்தவள், ஆண்டிச்சாமியின் வீட்டுக்கு ஆள் அனுப்பி, கடைக்கு அழைத்துவரச் சொன்னாள். வேண்டா வெறுப்பாக வீட்டிலிருந்து கிளம்பிய ஆண்டிச்சாமியின் மகனுக்கும், அம்சவல்லியின் கணவனுக்கும் மரக்கடை புத்தம் புதிதாகப் பொலிவோடு இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் தாங்கவில்லை.

“உங்களுக்குச் சேர வேண்டிய கடை. கோட்டச்சாமியோட தம்பிங்க இருக்கற வரைக்கும் இத நெருங்கவிட மாட்டாய்ங்கன்னு தெரியும். அதான் நம்ம பசங்களவெச்சு கையோட ரெடி பண்ணிட்டேன்…”

வந்திருந்த இரண்டு பேரும் பழைய கம்பீரத்தோடு எழுந்து நிற்கும் கடையைப் பார்த்த மலைப்பிலிருந்து மீள முடியாதவர்களாக ஸ்தம்பித்துப் போயிருந்தனர்.

ரெண்டாம் ஆட்டம்! - 65

“ஏத்தா, நாங்க உன்னய லேசா நெனச்சிருந்தோம். ஆனா கெட்டிக்காரின்னு காட்டிட்ட” ராகவன் மனநிறைவோடு சொன்னான்.

“மெஷினையெல்லாம்கூட தயார்பண்ணி வெச்சாச்சு. நீங்க ஆளுகள வரவெச்சு அப்பிடியே வேலைய ஆரம்பிக்கலாம். இங்க ஜெய்ஹிந்துபுரத்துலயே உங்க வீடு ஒண்ணு அடைச்சே கெடக்குல்ல... அதையும் இப்ப ரெடி பண்ண பயகள அனுப்பிட்டேன். நீங்க தாராளமா அங்கயே வந்துரலாம். நம்மள மீறி இனி எவனும் உங்கள நெருங்க முடியாது…”

ஜெகதி ஒரே நேரத்தில் அவர்களோடு சினேகத்துடனும், தனக்கான அதிகாரத்தை நிரூபிக்கும் விதமாகவும் பேசிக்கொண்டிருந்தாள். செல்வத்தின் ஆட்கள், ஜெகதிக்காக வேலை செய்கிறோம் என்பது தெரியாமலேயே எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருந்தனர். அவளது ஒவ்வொரு கண்ணசைவையும் கட்டளையாக நினைத்துச் செய்யும் ஆட்களை கவனித்த ராகவனுக்கும், அவன் மச்சானுக்கும் இயல்பாகவே அவளின் மீதான மரியாதை அதிகரித்தது.

“இந்த உதவிய மறக்க மாட்டோம்க்கா…”

அம்சவல்லியின் தம்பி நெகிழ்ச்சியோடு சொல்ல, “ரெண்டு நாள் பொறுங்க தம்பி, உங்களுக்கு இதவிட பெரிய பரிசே தர்றேன்...” என ஜெகதி மர்மமாகச் சிரித்தாள்.

“என்னாதுத்தா?” ராகவன் ஆர்வமாகக் கேட்டான்.

“கோட்டச்சாமி தம்பிங்களோட உசுரு” அவள் நம்பிக்கையோடு சொன்னதை நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டிருந்த ராகவன், ஏதோ சொல்லப்போக, ஜெகதி அவசரமாக இடைமறித்தாள்.

“கருப்பும் அவன் பங்காளிகளும் திரும்ப மதுரக்குள்ள வந்தா, நம்மளுக்குக் கொடச்சல் குடுத்துட்டுத்தான் இருப்பாய்ங்க. அதனால ஊருக்கு வெளியவெச்சே முடிச்சிரலாம்.”

“அவெய்ங்க எங்க ஒளிஞ்சிருக்காய்ங்கன்னுதான் நம்மளுக்குத் தெரியாதே…”

“நாம தேடவே வேணாம்ணே... அவய்ங்களே நம்மளத் தேடி வருவாய்ங்க...” மேற்கொண்டு எதையும் சொல்லாமல், அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றுவிட்டாள். நிழலைப்போல அவளோடிருந்த சோணைக்கு அவளின் நடவடிக்கை ஒவ்வொன்றும் அச்சுறுத்தக் கூடியதாயிருந்தது.

அரசியல் அடையாளத்தின் வழியாக ஜெகதி, முற்றிலும் புதிய பெண்ணாக மாறிவிட்டிருந்தாள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வில் தன்னையறியாமலேயே நிறைய பேரிடம் பகையை வளர்த்துக்கொண்டவள், சொந்த ஊரிலிருந்து தன் தம்பி, சித்தப்பா, சித்தி, அண்ணன் என நெருக்கமான உறவினர்களைத் துணையாக இருக்கட்டுமென மதுரைக்கு இடம் மாற்றிக் குடிவைத்தாள். அவர்களின் வருகையை சோணையும் அவனது நண்பர்களும் இயல்பாக எடுத்துக்கொண்டபோது, தன்னைச் சந்தேகிக்கும் வாய்ப்பை ஜெகதி அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தாள்.

“சோண... போட்ல சரக்கு எடுத்துட்டுப் போறத இனிமே என் தம்பி பாத்துக்குவான். நீயும் உன் பயகளும் இங்க நம்ம ஏரியாவப் பாத்துக்கங்க” சோணைக்குக் கெதக்கென்றிருந்தது. செல்வம் ஒருநாளும் இதற்கு அனுமதிக்க மாட்டான்.

“யாவாரத்துல வேற யாரும் தலையிடக் கூடாதுன்னு செல்வம் சொல்லி இருக்காப்ளையே... நீயென்ன புதுசா உன் தம்பியக்கொண்டு வரணுங்கற..?” சோணை ஆத்திரத்தைக் காட்டிக்கொள்ளாமல் கேட்க,

“உள்ளூருக்குள்ள நம்மள அவய்ங்க அழிக்கணும்னு நெனச்சுட்டு இருக்காய்ங்க. இப்ப அவய்ங்கள விட்டுட்டம்னா மதுர திரும்ப நம்மளுக்குக் கெடைக்காது. உனக்கும் உன் பயகளுக்கும்தான் இங்க எல்லா நேக்குபோக்கும் தெரியும். அதுக்குத்தான் சொல்றேன்…” என ஜெகதி பட்டும்படாமலும் சொன்னாள். அவளது உள்நோக்கம் என்னவென்பது புரிந்தபோதும், மறுப்பு சொல்ல முடியாத நெருக்கடியில் சோணை அரைமனதோடு சம்மதித்தான். ஜெகதியின் ஒவ்வொரு செயலிலும் தங்களை அவளது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியபடியே இருந்ததைத் தெளிவாகப் புரிந்துகொண்ட சோணை, அவளைப் பார்க்கப் பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

கட்சி அலுவலகத்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் நிகழ்வால் செல்வம் மனம்கசந்து போயிருந்தான். அவன் மன்னிப்புக் கேட்கையில், ஆண்டிச்சாமியின் குடும்பத்தினரின் முகத்திலிருந்த ஏளனமும், ரவி அண்ணனின் முகத்திலிருந்த ஆச்சர்யமும் அவனைத் தூங்கவிடாமல் அலைக்கழித்தன. சமாதானத்துக்காக செல்வத்தை மன்னிப்புக் கேட்கவைப்பதைக் காட்டிலும், தனது சொல்லுக்கு அவன் கட்டுப்படுவான் என்பதை எல்லோருக்கும் உணர்த்தவே ஜெகதி அப்படிச் செய்ததாகச் சந்தேகப்பட்டான். ஓரிரு நாள்கள் அவளைச் சந்திக்காமல் தவிர்த்தவன், அம்மா வீட்டிலேயே கிடந்தான். ஜெகதி எல்லா முடிவுகளையும் தன்னிச்சையாக எடுப்பதில் எரிச்சலாகியிருந்த சோணையும் அவன் நண்பர்களும் செல்வத்தைத் தேடி வந்தார்கள்.

“ஏய் என்னய்யா செல்வம்? எங்கள அம்போன்னு விட்டுப்புட்டு நீ இங்க வந்து உக்காந்துக்கிட்ட…”

“எலேய் அதெல்லாம் ஒண்ணுமில்லடா... சும்மா ரெண்டு மூணு நாளைக்கி இங்க இருக்கலாம்னு வந்தேன்…”

“அந்தப் பிள்ள போக்கு ஒண்ணும் சரியா இல்ல. இம்புட்டு நாளும் மூஞ்சியப் பாத்து பேசாத ஆளு, இப்ப நான் சொல்றத மட்டும் கேளுன்னு நெஞ்ச நிமித்திட்டு நிக்கிது… அதும் பத்தாதுன்னு ஊர்ல இருக்க சொந்தக்காரனுங்கள எல்லாம் இங்க கூட்டியாந்து வெச்சிருக்கு.”

செல்வம் அதிர்ந்தான். “என்னடா சொல்ற?”

“ஆமாய்யா… ஸ்ரீலங்காவுக்கு இனிமே ஜெகதி தம்பி சரக்கு எடுத்துட்டுப் போவானாம். நாம உள்ளூர்க்குள்ள பாத்துக்கிட்டா போதுமாம்.”

“இந்தக் கண்டாரோலி யார்றா நம்மளுக்கு ஆர்டர் போட்றதுக்கு?”

சினங்கொண்ட செல்வம் வெகுண்டு எழுந்தான். “ஏய் ஆத்திரப்படாம முழுசாக் கேளுய்யா… அரசியலையும், நம்ம யாவாரத்தையும் தாண்டி இப்ப மார்க்கெட் மேலயும் கண்ணவெச்சிருக்கு. எங்களுக்குன்னு நீ வாங்கிக் குடுத்த மார்க்கெட்ட அந்தப் பிள்ள எடுத்துக்கப் பாக்குது. அதுக்குத்தான் ஊர்ல வேல வெட்டி இல்லாம கெடந்த சித்தப்பங்காரன் குடும்பத்த வரவெச்சிருக்கு…”

ரெண்டாம் ஆட்டம்! - 65

“நாம வருஷக் கணக்கா போராடி, நம்மளுக்குன்னு ஒரு வாழ்க்கைய அமைச்சுக்கிட்டா இவ நேத்து வந்துட்டு நோகாம நம்மள நொட்டிட்டுப் போவாளோ? அல்லைலயே மிதிச்சாதான் வழிக்கு வருவா… நீங்க சரக்கு எடுக்கறது, பிரிச்சுக் குடுக்கறதுன்னு பழைய மாதிரியே செய்ங்க. அவகிட்ட காசக் குடுக்க வேணாம். நான் இன்னிக்கி நைட்டு வீட்டுக்குப் போறேன்.”

சோணையும், அவன் நண்பர்களும் புதிரோடு செல்வத்தைப் பார்த்தார்கள். “ஏய் இன்னைக்கு நைட் என்ன நடக்கப்போகுதுன்னு தெரியாதாய்யா உனக்கு?”

செல்வம் இல்லையெனத் தலையாட்ட, “இன்னைக்கி சரக்கு வர்ற நாளு…” என சோணை திக்கித் திணறிச் சொன்னான்.

“அதுதான் தெரியுமேடா… அதுக்கு என்ன?”

“இந்தவாட்டி சரக்கு வரல…”

“அப்பறம்?”

“கருப்புக்கும் அவென் பங்காளிக்கும் கரவெச்சு தூக்கப்போகுதுய்யா…”

அவன் சொன்னதை நம்ப முடியாமல் செல்வம் ‘எனக்குத் தெரியாம எப்பிடிடா... யார்றா செய்யப்போறது?” எனப் பரபரத்தான்.

சோணை சங்கடத்தோடு தலையைக் குனிந்துகொண்டான். “ஆண்டிச்சாமி வீட்டு ஆளுகதான் செய்யப்போறாய்ங்க…” தயங்கிப் பாதியில் நிறுத்தியவனுக்குக் குரல் கம்மியது… “செல்வம் நாம இப்பயும் உசார் ஆகாட்டி நம்ம பொழப்பு நாரப்பொழப்பா போயிரும்யா…”

தன்னை மீறிச் செல்லும் ஜெகதியின் ஒவ்வொரு செயல்பாடும் செல்வத்தை ஆத்திரமூட்டியது. வீட்டுக்குள் குழப்பத்தோடும் வெறியோடும் அல்லாடிக்கொண்டிருந்தவனை முத்தையா நிதானமாகக் கவனித்துக்கொண்டிருந்தார். மனதளவில் பலவீனமாகியிருக்கிறான் என்பது தெரிந்ததால் நெருங்கிச் சென்று பேசினார்.

“இத்தன வருசம் போராடிச் சேத்ததெல்லாம் கைவிட்டுப் போயிடற மாதிரி செஞ்சிராத செல்வம்.”

“அப்பிடில்லாம் ஆகாதுப்பா...”

“கண்ண மூடிக்கிட்டு அந்தப் பிள்ளைய நம்பினது தப்பா போச்சேடா… உசுரக் குடுத்து நீ ஒழச்சு உருவாக்கினத அவ நேக்கா எடுத்துக்கப் பாக்கறா…” செல்வம் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தான்.

“இந்த ஊர்க்காரய்ங்க ஊளப்பயன்னு சொல்லியேதாண்டா நம்மள வளரவிடாம வெச்சிருந்தாய்ங்க. நீ அதையெல்லாம் தாண்டி ஒரு ஆளா வந்துட்டன்னு சந்தோசப்பட்டேன்… ப்ச்… நம்மளுக்கு ராசி அம்புட்டுத்தான்போல…”

“எதுக்குப்பா அனத்துற? நெலம நம்ம கைமீறிப் போகல…” செல்வம் அவரை ஆற்றும்படுத்தும்விதமாகச் சொன்னான்.

“நாம கொஞ்சம் நிதானமா யோசிச்சிருக்கலாம் செல்வம். கோட்டச்சாமியக் கொன்னதுலருந்து, கட்சியில பதவி வாங்கினது வரைக்கும் அவ நம்மளுக்காக எதையும் செய்யல. அவளுக்காகச் செஞ்சுக்கிட்டா. உடனே உள்ள எறங்கி எல்லாத்தையும் சரி பண்ணு.”

முத்தையா சொன்னதிலிருந்த நிதர்சனம் அவனுக்கும் உரைத்தது. ஆனால், எதுவும் கைமீறிப் போய்விடவில்லை எனத் தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்ள முயன்றான். எல்லாவற்றையும் சரிசெய்வதற்கான தருணம் இதுவென எச்சரிக்கை மணி மனதில் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது.

(ஆட்டம் தொடரும்)