மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 68

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்!

‘‘எப்பிடி பேரும் புகழுமா வாழ்ந்துட்டு இருந்தேன்... இன்னிக்கி சீரழிஞ்சு சின்னப்பட்டுப்போன மாதிரி ஆயிருச்சே… மாரியாத்தா… எதுக்கு இந்த உசுர இன்னும் விட்டுவெச்சிருக்க. எல்லாருக்கும் மொதல்ல… என்னயக் கொன்னுடு…’’

அடுத்தடுத்த சாவுகள் கோட்டைச்சாமியின் குடும்பத்தைச் சிதறடித்துவிட்டிருந்தன. அவர்களுக்கு ஆதரவாக நிற்க மதுரைக்குள்ளிருந்த பழைய ஆட்கள்கூட அச்சப்பட்டார்கள். ‘‘அவய்ங்களுக்கு சப்போர்ட்டா நிக்கிறது எங்களுக்கு எதிரா நிக்கிறதுக்குச் சமம். எதுவா இருந்தாலும் யோசிச்சு செய்ங்க’’ என்றொரு ரகசியத் தகவல், மதுரைக்குள் ஜெகதி சொன்னதாக உலவத் தொடங்கியிருந்தது. ‘‘யாருய்யா இவ, நேத்து இன்னியாரம் கோட்டச்சாமிக்கு வெப்பாட்டியா இருக்கற எடம் தெரியாம இருந்தவ, இன்னிக்கி என்னவோ மதுரையவே கட்டி ஆளப் பொறந்தவ மாதிரி எல்லாரையும் கைக்குள்ள போட்டுக்கிட்டு இருக்கா...’’ என்கிற சலசலப்பு மதுரைக்குள்ளிருந்த அத்தனை பெரிய தலைக்கட்டுகளிடமும் எழத் தொடங்கியது.

கோட்டைச்சாமியின் மனைவி சங்கரி சூழல் தங்களுக்கு எதிராக மாறிப்போகுமென ஒருநாளும் நினைத்திருக்கவில்லை. ஜெகதியின் அதிகாரம் பூதாகரமாக அதிகரிக்கத் தொடங்கிய ஒவ்வொரு நாளும் அவளின் மீதான வெறுப்பும் பகையும் இவளுக்குள் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. வீட்டில் மூன்று பேரை சாகக் கொடுத்ததில், உறவினர்களுக்குள்ளேயே சண்டையும் சச்சரவுகளும் அதிகரித்து, சொத்துகளைப் பிரித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

உடலிலும் மனதிலும் காயங்களைச் சுமந்தபடி கருப்பு, முனுசு, ராஜேந்திரன் மூவரும் மதுரைக்கு ரகசியமாகத் திரும்பியபோது, அத்தனை காலமும் ஒற்றுமையாக இருந்த குடும்பமும் சிதறிப்போய்க் கிடந்தது. ‘‘நாம மூணு பேரும் தனித்தனியா இருக்கறது ஆபத்து... என்னவானாலும் ஒண்ணாத்தான் இருக்கணும்” என கருப்பு எச்சரித்திருந்ததால், முனுசும் ராஜேந்திரனும் அவர்களது வீட்டுக்குச் சென்றிருக்கவில்லை. சப்பாணி கோயிலுக்குப் பின்னாலிருந்த அப்பள கம்பெனியில் பாதுகாப்பாகப் பதுங்கி இருந்தவர்களுக்கு சங்கரி உணவு எடுத்து வந்தாள். சரியான உணவும் ஓய்வுமின்றி களைத்துப்போயிருந்தவர்களுக்குக் காரசாரமான அவளது சாப்பாடு ஆறுதலாக இருந்தது. தங்களைச் சூழ்ந்திருந்த அத்தனை பகையையும் மறந்து சாப்பிடத் தொடங்கினார்கள். பஞ்சப் பராரிகளைப்போல் மாறிப்போன தன் கொழுந்தன்களைக் கண்கொண்டு பார்க்க முடியாமல் சங்கரிக்குக் கண்கலங்கியது.

ரெண்டாம் ஆட்டம்! - 68

சாப்பிடும் அவசரத்திலும் கவனித்துவிட்ட முனுசு, ‘‘எதுக்கு அத்தாச்சி அழுகுற..?’’ எனக் கேட்க, சங்கரி சேலையால் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘‘எல்லாம் என்னாலதானடா?’’ துயர் நிரம்பிய அவளது குரல் சாப்பிட்டுக்கொண்டிருந்த மூவரையும் உலுக்கியது. ‘‘என்ன பேசற அத்தாச்சி.. உன்னால என்னாலன்னு... நீ யாருக்கு என்ன கெடுதல் செஞ்ச... ஒரு ஈ எறும்ப கொன்னுருப்பியா... யார் யாரோ செய்ற பாவத்துக்கு நீ ஏன் கெடந்து மருகிட்டு இருக்க...’’ சாப்பாட்டிலிருந்து கவனத்தைத் திருப்பி கருப்பு அவளிடம் பேசினான்.

‘‘இல்லடா கருப்பு, அந்த அவுசாரிகூட உங்கண்ணன் போறத கண்டிக்காம விட்ருந்து, அவளையும் நம்ம வீட்டுல ஒருத்தியா ஏத்துக்கிட்டு இருந்தா எதுவுமே நடந்திருக்காதுல்ல…’’ சங்கரி தான் என்ன சொல்கிறோமென்பதை உணராமலேயே சொல்ல, எதிரிலிருந்த மூவரது முகங்களும் மாறிப்போயின. ‘‘நீ நினைக்கிற மாதிரி இல்ல அத்தாச்சி... ஜெகதி வெஷச் செடி. எந்த எடத்துல இருந்தாலும் அந்த எடத்த முழுசா அழிச்சு, தான் மட்டுமே உயிரோட இருக்கணும்னு நெனப்பா… நல்லவேள அவள நீ வீட்டுக்குள்ள விடல…. கண்டதையும் கெடந்து யோசிச்சுக்கிட்டு இருக்காத...’’

‘‘பயமா இருக்குடா கருப்பு… ஒத்துமையா இருந்த குடும்பம் இன்னிக்கி சில்லு சில்லா உடைஞ்சு போச்சு… இத எப்பிடி, யாரு ஒண்ணு சேக்கறதுன்னு தெரியல.’’

‘‘என்னவாம் இவய்ங்களுக்கு... சொத்த பிரிக்கணும் சொந்தத்தப் பிரிக்கணும்னு எதுக்கு துள்ளிட்டு இருக்காய்ங்க?’’ ராஜேந்திரன் அதற்கும் மேல் சாப்பிடப் பொறுமையில்லாமல் எழுந்துகொள்ள, சங்கரி அவசரமாக அவனை உட்காரச் சொன்னாள். ‘‘எலேய் கிறுக்குப் பயலே, மொதல்ல உக்காந்து சோத்தத் தின்னுடா... ஆன கஞ்சியில்லாம மூணு பேரும் வத்திப்போனீங்க. மொதல்ல சாப்பிட்டு முடிங்க… மிச்சத்த அப்பறம் பேசிக்கலாம்’’ அவள் தீர்மானமாகச் சொல்ல, மூன்று பேரும் மறுபேச்சில்லாமல் சாப்பிடத் தொடங்கினார்கள்.

மதிய வெயிலின் வெக்கை குறைந்து மெல்லிய ஈரத்தோடு காற்று வீசத் தொடங்கியது. அப்பள கம்பெனியைச் சுற்றியிருந்த வேப்ப மரங்கள் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. அடுத்து என்ன செய்வதென பங்காளிகள் மூவரும் தீவீரமாக யோசித்துக்கொண்டிருந்தார்கள். ‘‘கருப்பு, வீட்ல இருக்க பெருசுகள இப்பிடியே விட்டம்னா நம்மளுக்கு முன்னயே அடிச்சுக்கிட்டு செத்துருவாய்ங்க… அத்தாச்சிகிட்ட சொல்லி எல்லாரையும் இங்க வரச் சொல்லுவோம். நாமளே உக்காந்து பேசி ஒரு முடிவெடுப்போம்’’ ராஜேந்திரன் அழுத்தமாகச் சொல்ல, முனுசும் அவன் சொன்னதை ஆதரித்தான். ‘‘நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனா, இத்தன பேரு ஒரு இடத்துல ஒண்ணு கூடினா எவனாச்சும் நாம இங்க இருக்கற தகவல சொல்லிருவாய்ங்க. அத நெனச்சாதான் பயமா இருக்கு.’’

‘‘வாஸ்தவந்தாண்டா… ஆனா வரப்போறது நம்ம வீட்டாளுக. ஒருவேள எவனுக்காச்சும் தெரிஞ்சு பிரச்னையானாக்கூட நம்ம ஆளுக நம்மளுக்குக் காவலா நிப்பாய்ங்க… யோசிக்காத, எது வந்தாலும் பாத்துக்கலாம்’’ முனுசு நம்பிக்கையாகச் சொன்னான். சம்மதித்த கருப்பு ‘‘அத்தாச்சி, நீயே எல்லாரையும் இங்க வரச் சொல்லு. நாங்க இருக்கறத சொல்லாத. சொத்து வெவகாரத்தப் பேசித் தீத்துக்கலாம்னு மட்டும் சொல்லிக் கூப்புடு…’’ என சங்கரியிடம் சொல்ல, அவள் சரியெனத் தலையசைத்தாள். கொண்டு வந்த பாத்திரங்களோடு கிளம்பியவள் தயங்கி நின்றாள். ‘‘என்ன யோசிக்கிற அத்தாச்சி?’’ கருப்பு நெருங்கி வந்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 68

‘‘எலேய் கருப்பு, நான் ஒண்ணு கேட்டா கோச்சுக்க மாட்டியே?’’

‘‘அதெல்லாம் கோச்சுக்க மாட்டேன். கேளு.’’

‘‘என் புள்ளைக அப்பா இல்லாமயும், நான் புருஷன் இல்லாமயும் இந்த ஊர்ல பொழைக்க முடியும்னு தோணலடா… நீ என்னய ரெண்டாந்தாரமா கட்டிக்கிறியா?’’

அவள் அப்படிக் கேட்டதும், அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘‘என்ன அத்தாச்சி வரமுற இல்லாம பேசிட்டு இருக்க? நீ என் அண்ணன் பொண்டாட்டி. நான் சிறு வயசுப் பயலா இருந்து `அத்தாச்சி அத்தாச்சி...’ன்னு கூப்டுக்கிட்டு இருக்கேன்… அதையெல்லாம் மாத்திக்கிற முடியும்னா நெனைக்கிற?’’

‘‘இந்தாரு… எனக்கு நல்லது கெட்டதெல்லாம் யோசிக்கத் தெரியல. என் பிள்ளைக முக்கியம், அதுக உசுரு முக்கியம். இப்பயே யாருக்கு, எந்த நேரத்துல என்ன கேடு வரும்னு தெரியாம சுத்திட்டு இருக்கோம். நீ மட்டும்தான் எனக்கும் அதுகளுக்கும் பாதுகாப்பா இருக்க முடியும்.’’

‘‘அதுக்காக உன்னயக் கட்டிக்கிட்டு உங்கூட படுக்கச் சொல்றியா?’’

அவன் ஆத்திரமாகக் கத்தினான். சங்கரி அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.

‘‘அண்ணனோட வெப்பாட்டி மூக்கும் முழியுமா இருந்தா, ஒரு நாளாச்சும் அவகூடப் படுத்துறணும்னு வெறியேறி அண்ணன்கிட்டயே கேப்பீங்க... அண்ணன் பொண்டாட்டி, புருஷன் இல்லாம கைம்பொண்டாட்டியா இருக்கறப்போ ஆதரிக்க ஒருத்தரும் இல்ல... ஆதரவு குடுடான்னு முறையா கட்டிக்கச் சொன்னா அது குத்தமா போயிருது…’’

அவள் இப்படிச் சொன்னபோது கருப்பு மட்டுமல்லாமல், முனுசும் ராஜேந்திரனும்கூட வெலவெலத்துப் போனார்கள்.

‘‘அந்த அவுசாரி மாதிரி நானும் மினுக்கிட்டுத் திரிஞ்சிருந்தா இப்ப நான் கேட்டதும் சம்மதம் சொல்லி இருப்பல்லடா கருப்பு…’’

‘‘அத்தாச்சி கண்டதையும் பேசிட்டு இருக்காத… அண்ணனுக்குக் குடுத்த மரியாதைய உனக்குக் குடுத்துட்டு இருக்கேன். அத கெடுத்துக்கிறாத...’’

‘‘மயிரு… உன் மரியாதை யாருக்குடா வேணும்… நான் என்ன ஆம்பள சொகம் வேணும்னாடா என்னயக் கட்டிக்கச் சொல்லிக் கேட்டேன்…. உசுருக்கு பாதுகாப்பு வேணும்னு கேட்டண்டா… நாளைக்கி எல்லாரும் கல்யாணம் காட்சின்னு பாத்து, அவனவன் குடும்பத்தோட போயிருவீங்க. நானும் என் பிள்ளைகளும் நடுத்தெருவுல நிக்கணும்...’’

அடக்கியிருந்த துயரமெல்லாம் பெருக்கெடுத்து அழுத் தொடங்கியவளை ஆறுதல்படுத்த முடியாமல் கருப்பு விலகி நின்றான். கையிலிருந்த சாப்பாட்டுப் பாத்திரங்களடங்கிய பையைத் தூக்கி சுவரில் எறிந்த சங்கரி, ‘‘எப்பிடி பேரும் புகழுமா வாழ்ந்துட்டு இருந்தேன்... இன்னிக்கி சீரழிஞ்சு சின்னப்பட்டுப்போன மாதிரி ஆயிருச்சே… மாரியாத்தா… எதுக்கு இந்த உசுர இன்னும் விட்டுவெச்சிருக்க. எல்லாருக்கும் மொதல்ல… என்னயக் கொன்னுடு…’’ மாரிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழத் தொடங்கினாள். கருப்பும் ராஜேந்திரனும் பேச்சற்றுப்போய் விக்கித்து நிற்க, முனுசு மெல்ல நெருங்கி அவளைத் தோள்களோடு அணைத்துக்கொண்டான். ‘‘அத்தாச்சி… நான் உன்னயக் கட்டிக்கிறேன். நான் கோட்டச்சாமிகூட பொறக்காம வேணும்னா இருந்திருக்கலாம். ஆனா அவனுக்கு எல்லா நல்லது கெட்டதுகள்லயும் சின்னதுல இருந்து கூட இருந்திருக்கேன். உனக்கும் என்னயக் கட்டிக்கிறச் சம்மதம்னா சொல்லு. நாளைக்கி நம்ம வீட்டு ஆளுக எல்லார் முன்னயும்வெச்சு உனக்குத் தாலியக் கட்றேன்.’’

சங்கரி மட்டுமில்லாமல் கருப்புமே அதிர்ந்து போனான். ‘‘ஏய் முனுசு என்ன பேசறம்னு யோசிச்சுதான் பேசுறியா?’’ ராஜேந்திரன் கோபமாகக் கேட்க, ‘‘ஆமாடா. அத்தாச்சி கேட்டதுலயும் தப்பில்ல. நான் சொன்னதுலயும் தப்பில்ல. உங்க யாருக்கும் இதுல விருப்பமில்லாட்டியும் நான் கவலப்படப் போறதில்ல. அத்தாச்சி நீ சொல்லு உனக்கு சம்மதமா?’’

முனுசு அவள் கண்களைப் பார்க்க, சில நொடி தயக்கத்துக்குப் பின் சம்மதமெனத் தலையசைத்தாள்.

(ஆட்டம் தொடரும்)