
மணியிடம் முத்தையா கைவாகனமாகச் சேர்ந்து சில நாள்கள்தான் ஆகியிருந்தன. என்ன வேலை சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்யும் வயது..
மழை வலுத்துப் பெய்துகொண்டிருந்தது. இடியும் மின்னலும் கூடியிருந்ததால், ஊர் வெகு சீக்கிரமே உறக்கத்தில் ஆழ்ந்துபோய் பெரும் அமைதி சூழ்ந்திருந்தது. மழையின் சத்தம் மட்டுமே எதிரொலித்துக்கொண்டிருந்த மர்மமான அந்த இரவிலும், மணி தன் நண்பர்களோடு சென்ட்ரல் டாக்கீஸில் ரெண்டாம் ஆட்டம் பார்க்கப் போயிருந்தான். படம் முடிந்து, திரையரங்கிலிருந்து வீட்டுக்கு வரும் வழியெங்கும் போதைக் கிராக்கிகள் சத்தமாகச் சலம்பிக்கொண்டிருந்தனர். முத்தையா சைக்கிளை ஓட்ட, மணி பின்னால் அமர்ந்து வந்தான். இரண்டு சைக்கிள்களில் மணியின் நண்பர்கள் பின்னால் வந்தனர்.
மணியிடம் முத்தையா கைவாகனமாகச் சேர்ந்து சில நாள்கள்தான் ஆகியிருந்தன. என்ன வேலை சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்யும் வயது... மீசை அரும்பத் தொடங்கிய வயதில், ஏதோ நம்பிக்கையில் மணியிடம் வந்து அண்டிக்கொண்டான். ‘இப்பிடி அப்பிராணியா இருந்தா ஏய்ச்சுப்புடுவாய்ங்க முத்தையா. சுதாரிப்பா இருக்க பழகிக்க’ என மணி சொல்லும்போதெல்லாம், ‘அதெல்லாம் வெரசா பழகிக்கிவண்ணே’ என்று சிரிப்பான். குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கியிருந்த நீருக்குள் சைக்கிளை ஓட்டிவர முத்தையாவுக்கு அலுப்பாயிருந்தது. மழையும் ஓய்வதாக இல்லை. ‘எலேய்... நீ விட்றா. நான் வண்டிய ஓட்றேன்...” கேரியலிருந்து இறங்கிக்கொண்ட மணி, சைக்கிளை வாங்கிக்கொண்டான். யானைக்கல் பாலத்தை நெருங்கி ஏறியபோது, அந்த மழையில் சென்ட்ரல் மார்க்கெட்டுக்குப் பொருள்கள் ஏற்றி வர வேண்டிய லாரிகள் வந்துகொண்டிருந்தன.

ஆழ்ந்த இருளைக் குடித்த யானைக்கல் பாலம் ஆளரவமில்லாமல் கிடந்தது. பாலத்தின் மையமாக மணியின் சைக்கிள் வந்தபோது எதிர்பாராததொரு நொடியில் சோடா பாட்டில் அவன்மீது வந்து விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்தென வரிசையாக பாட்டில்கள் அவன் மீதும் முத்தையாவின் மீதும் விழ, மணி சைக்கிளை விட்டுவிட்டு பாட்டில் வந்த திசையைப் பார்த்தான். பாலத்தின் சுவரை ஒட்டி நின்றிருந்த நான்கு பேரையும் நொடிப்பொழுதில் அடையாளம் கண்டுகொண்டவன், “முத்தையா நீ ஓடிரு...” எனக் கத்த, அங்கு நிற்பதா ஓடுவதா என்ற குழப்பத்தில் முத்தையா நடுங்கிக்கொண்டிருந்தான். ‘‘மயிரு... போடான்னு சொல்றன்ல...” என மீண்டும் கத்தும்போதே இரண்டு பேர் வேகமாகக் கையில் கத்தியோடு ஓடி வந்தனர்.
எளிதாகப் பிடித்துக்கொள்ளும்படியான சூரிக்கத்தி. வளைந்து நெளிந்து ரத்தம் குடிக்கும் மூர்க்கத்தோடு வந்த கத்திகளில் ஒன்று, மணியின் இடது தோள்பட்டையில் இறங்கியது. குத்தியவன் கத்தியை உருவும் முன்னரே, மணி இடுப்பிலிருந்த கத்தியை உருவி எதிரியின் வயிற்றில் குத்தினான். அடுத்த இரண்டு பேரும் நெருங்கி வந்து மணியின் முதுகுப் பக்கமாகக் குத்தப் பார்க்க, அந்தக் கத்திகளை முத்தையா தன் வயிற்றில் வாங்கிக் கொண்டான். நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட மணி, நான்கு பேரையும் அடித்து வீழ்த்தினான். அவர்களின் கைகளில் இருந்த கத்திகள் பறந்து தூரமாக விழ, தன் கையிலிருந்த கத்தியால் நால்வரின் வயிற்றையும் குத்திக் கிழித்தான். முதலையிடம் மாட்டிக்கொண்ட மீன் குஞ்சுகளைப்போல் நால்வரும் அவனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் சிக்கித் தவித்தனர். அவர்களின் அலறல் சத்தம் மழையின் சத்தத்தையும் மீறி அகோரமாக எதிரொலித்தது. நால்வரின் உடலிலும் உயிரில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகுதான் மணி குத்துவதை நிறுத்தினான். மழையின் வேகம் குறைந்து தூறத் தொடங்கியது. பாதி மயக்கத்தில் கிடந்த முத்தையாவைத் தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு பெரியாஸ்பத்திரி நோக்கி ஓடினான். தன்னோடு வந்த மற்ற இரண்டு சைக்கிள்கள் எங்கு சென்றன என்கிற சந்தேகத்தோடு திரும்பிப் பார்த்தபோது பாலத்தின் எல்லைவரை ஒருவருமில்லை.
மதுவிலக்கு விலக்கப்பட்டு, கள்ளுக்கடைகளும் சாராயக்கடைகளும் திறக்க அனுமதியளித்து ஆறு மாதங்களாகின்றன. நகரங்களில் ஒரு புதிய வேலைவாய்ப்புக்கான சாத்தியங்கள் உருவாகின. 7,400 கள்ளுக்கடைகளும் 3,512 சாராயக்கடைகளும் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டபோது, ஒரு லிட்டர் கள் ஒரு ரூபாய் என்ற அளவிலும் ஒரு லிட்டர் சாராயம் பத்து ரூபாய் என்ற அளவிலும் வியாபாரத்துக்கு வந்தன. ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு சாராய வியாபாரி என்று பிரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுக்க 139 சாராய வியாபாரிகள் உருவானார்கள். இந்தப் புதிய வியாபாரிகள், குறுகிய காலத்தில் வேறு எவரும் ஈட்ட முடியாத வருமானத்தை ஈட்டியிருந்ததோடு, அதிகாரத்தைத் தீர்மானிக்கும் புதிய சக்திகளாகவும் மாறத் தொடங்கினார்கள். அந்த ஆண்டில் 210 கோடி ரூபாயை அரசாங்கம் வரியாகப் பெற்றபோதுதான், இந்த வியாபாரம் இனி சாம்ராஜ்யங்களை உருவாக்கவும் அழிக்கவும் சக்திகொண்டதாக மாறப்போகிறதென எல்லோரும் புரிந்துகொண்டனர்.
மற்ற வியாபாரங்களில் அடித்துக்கொண்டதைப் போல் அடித்துக்கொள்ளாமல், காளியும் சோமுவும் தங்கள் ஏரியாக்களில் கொடுக்கப்பட்ட கடைகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தனர். மதுரை நகரின் வெவ்வேறு பகுதிகளில் பெருகிவிட்ட கடைகளைச் சுற்றிப் புதிய சண்டைகளும், அவற்றைத் தீர்த்து வைக்கும் புதிய ஆட்களும் தலையெடுக்கத் தொடங்கினர். வெறும் தாட்டியம் மட்டும் இந்தத் தொழிலுக்குப் பத்தாது, தந்திரமும் தேவை என்பதை காளி விரைவிலேயே புரிந்துகொண்டான். மூர்த்தி அண்ணனிடமிருந்த தந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான். பணம் சேரச் சேர தன்னைச் சுற்றியிருந்தவர்களின் மீது நம்பிக்கை குறைந்தது.

சாராயக்கடைகளைப் பார்த்துக்கொள்ளவும், மார்க்கெட்டைப் பார்த்துக்கொள்ளவும் ஆட்களைத் தனித்தனியாக வைத்தான். தனக்குக் கீழிருக்கும் எல்லோரும் ஒன்றாக இருப்பதை அவன் விரும்பவில்லை. மார்க்கெட்டைவிடவும் பல மடங்கு வருமானம் சாராயக்கடைகளில் வந்ததால், காளியின் கவனம் முழுக்க கடைகளில்தான் இருந்தது. கடையை யார் பொறுப்போடு பார்த்துக்கொள்வார்கள் என்பதில் அவனுக்கு நல்ல புரிதல் இருந்ததால், முரட்டுத் தனமில்லாத ஆட்களை மட்டும் கடையைப் பார்த்துக்கொள்ளச் செய்தான். மற்றவர்களை விலக்கியே வைத்திருந்தான். விலக்கி வைக்கப் பட்டவர்களில் மணியும் ஒருவன். போட்டியும் பகையும் இப்போது காளியின் ஆட்களுக்குள்ளேயே உருவாகத் தொடங்கியிருந்தன. “காசில்லாதப்போ நல்லாத்தாண்ணே இருந்த... காசு பணம் வரவும் பணக்காரய்ங்க புத்தி வந்துருச்சு” என மூஞ்சிக்கு நேராகவே மணி சடவாகச் சொல்லிவிட்டான்.
மணி தன்னோடு சடவாக இருக்கிறான் என்பதற்காகக் காளி வருத்தப்படவில்லை. ‘சனியன் இப்பிடியே விலகிட்டான்னா நல்லது’ என்றுதான் யோசித்தான். பலகாலப் பழக்கம், விசுவாசமான ஆள் என்பதெல்லாம் இந்தத் தொழிலுக்கு உதவாது என்பது காளியின் புரிதல். ஓங்கு தாங்கான ஆளாக இருந்தும், மற்றவர்களிடமிருக்கும் பொறுப்போ அக்கறையோ இல்லாதவன். அவனை நம்பிக் கடைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லும் துணிச்சல் காளிக்கு இல்லை. காளிக்கும் மணிக்கும் மனக்கசப்பு வந்தபோதே மணி தனக்காகச் சிலரைச் சேர்த்துக்கொண்டிருப் பதையும் பார்த்திருந்தான். நண்பன் எதிரியானால், அவனது கத்தி ரத்தம் குடிக்கும் வரை ஓயாது என்பதைச் சின்னதிலிருந்து கதையாகக் கேட்டு வளர்ந்தவன் காளி. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மணிக்கும் தனக்குமான பகை வெடிக்கக் கூடுமென காளி நினைக்க முக்கியக் காரணம் வேணி.
மணிக்கும் வேணிக்கும் இடையிலான விவகாரம் காளிக்குத் தெரிந்திருந்தது. கடுமையான பாதுகாப்பு வளையங்களையும் மீறி வேணி டுட்டோரியலுக்கு வரும் நேரங்களில் மணி தேடிப்போய்ப் பார்த்தான். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத அவனது காதல், காளியை அச்சுறுத்தியது. மூர்த்தி குடும்பத்தைப் பகைத்துக்கொள்வது கொடும் விஷம் கொண்ட நல்ல பாம்பை பகைத்துக்கொள்வதுபோல் ஆபத்தானது. சிறுகச் சிறுக, தான் கட்டிவைத்திருக்கும் கோட்டையை அவனுக்காகக் காவு கொடுக்க முடியாதெனப் புரிந்து கொண்டவன், அவனையே காவு கொடுத்துவிட முடிவுசெய்தான்.
அந்த அகால வேளையில் பெரியாஸ்பத்திரியின் அவசர வார்டில் ஒரேயொரு நர்ஸும் இரண்டு கம்பவுண்டர்களும் மட்டுமே பணியிலிருந்தனர். தோளில் கிடந்த முத்தையாவை ஒரு பழைய ஸ்ட்ரெச்சரில் போட்ட மணிக்கு மூச்சு வாங்கியது. உடலிலிருந்து சொட்டிய மழைநீரோடு ரத்தமும் கலந்து அவனது உடைகள் சிவப்பேறிப் போயிருந்தன. வழியெங்கும் முத்தையாவிடம் பேச்சுக் கொடுத்து, அவன் மயங்கிவிடாதபடி பார்த்துக் கொண்ட மணிக்கு ஆஸ்பத்திரியை அடைந்தபோதுதான் தன்னுடலில் இருந்த காயங்கள் உறைத்தன. முத்தையாவைப் பாதுகாப்பாகச் சேர்த்துவிட்ட நிம்மதியில் அப்படியே மயங்கி விழுந்தான்.
கண்விழித்தபோது, உடலெங்கும் காயங்களை மறைத்துக் கட்டுகள் போடப்பட்டிருந்தன. முத்தையா இன்னும் மயக்கத்திலிருந்தான். தனக்காகச் சாகவும் துணிந்த அவனை ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாதென நினைத்துக் கொண்ட அதேவேளையில், காளியின் துரோகத்துக்குப் பழியெடுக்க அவன் மனம் கொதித்தது. சாவைப் பார்த்துவிட்டு வந்தவனுக்கு எதிரியை முழுமையாக அழிக்கும் வரை வன்மம் அடங்குவதில்லை. மணியின் ரத்தம், சதை, நரம்பு எல்லாவற்றிலும் காளியின் மீதான வன்மமே ஓடத் தொடங்கியது.
(ஆட்டம் தொடரும்...)