Published:Updated:

சென்னை: `உன்னைக் கொன்றுவிடுவேன்'- ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் மனைவியை வீடு புகுந்து தாக்கிய கும்பல்!

கொள்ளை
News
கொள்ளை

சென்னையில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியைத் தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:

சென்னை: `உன்னைக் கொன்றுவிடுவேன்'- ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் மனைவியை வீடு புகுந்து தாக்கிய கும்பல்!

சென்னையில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியைத் தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொள்ளை
News
கொள்ளை

சென்னை அரும்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் வசித்துவருபவர் கங்கா (70). இவரின் கணவர் உமாசங்கர். இவர் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு உமாசங்கர் இறந்துவிட்டார். அதனால் கங்கா, தன்னுடைய மகன்கள் வீட்டில் வசித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 20.3.23-ம் தேதி மாலையில் கங்கா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரின் வீட்டுக்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கதவைத் தட்டியது.

கதவை திறந்த மூதாட்டி கங்காவை கத்தி முனையில் அந்தக் கும்பல் மிரட்டியது. பின்னர் அவரைத் தாக்கியதோடு கை, கால்களைக் கட்டிப் போட்டது. சத்தம் போடாமலிருக்க வாயிலும் துணியை வைத்த அந்தக் கும்பல் பீரோவிலிருந்த 25 சவரன் தங்க நகைகள், 60,000 ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்தது. அப்போது கொள்ளைக் கும்பலுடன் கங்கா போராடியபோது அவரின் விரல்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கொள்ளைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

கொள்ளை
கொள்ளை

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கங்காவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கங்கா, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ``என்னுடைய மகன் மகாதேவ், மருமகள் ஜெயஸ்ரீ ஆகியோருடன் நான், அரும்பாக்கத்தில் வாடகை வீட்டில் முதல் தளத்தில் வசித்துவருகிறேன்.

என் கணவர் இறந்துவிட்டதால், நான் தஞ்சாவூரிலுள்ள மற்றொரு மகன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் மகாதேவ் வீட்டுக்கு வந்தேன். என்னுடைய மகன் மகாதேவ், மருமகள் ஜெயஸ்ரீயும் அரும்பாக்கத்தில் எக்ஸ்போர்ட் கம்பெனி நடத்திவருகின்றனர். 20-ம் தேதி மாலையில் வீட்டின் காலிங்பெல் அடித்ததால் நான் கதவைத் திறந்தேன். அப்போது 35 வயது மதிக்கத்தக்க, பார்த்தால் தெரியக்கூடிய இரண்டு பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மஞ்சள், வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார்கள்.

திடீரென அவர்கள் இருவரும் என்னை ஹாலுக்கு தள்ளிட்டு போய் `உன் மகன் எங்கே.., உன் மகனை வரச்சொல், வராவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்று மஞ்சள் கலர் பனியன் போட்டவன் என் கழுத்தில் கத்தியை வைத்தபடி மிரட்டினான். வெள்ளை கலர் சட்டை போட்டவன், என் வயிற்றில் கத்தியை வைத்து மிரட்டினான். அப்போது வெள்ளை சட்டை போட்டவன், போன் செய்ததும் மேலும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள், `உன் மகன் ஊரெல்லாம் ரூ.50 லட்சம் சுருட்டிட்டு ஏமாற்றியிருக்கான்’ என்று கூறியபடி பீரோவைத் திறந்து பார்த்தான். அப்போது என் அருகிலிருந்த இரண்டு பேரும் என்னைப் புடவையைக் கழற்றச் சொல்லி நிர்வாணமாக்கி மஞ்சள் சட்டை போட்டவன் போட்டோ எடுத்தான்.

அப்புறம் பீரோவிலிருந்த செயின்கள், மோதிரம், வளையல்கள் என 25 சவரன் தங்க நகைகளையும் 60,000 ரூபாயையும் கொள்ளையடித்துவிட்டு நாங்கள் போகும்வரை சத்தம் போட்டால் உன்னை நிர்வாணமாக்கிய போட்டோவை சமூகவலைதளத்தில் போட்டு உன் மானத்தை வாங்கிவிடுவேன் என்று சொல்லிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து, என் மகன் மகாதேவ் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்தபிறகு அவன் என்னை மீட்டான். எனவே, என்னை நிர்வாணமாக்கி கைகளைக் கட்டிப்போட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார்.

கைது
கைது

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் அந்தப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, பைக்கில் கொள்ளைக் கும்பல் வந்தது தெரியவந்தது. கொள்ளையர்களின் உருவத்தைப் பார்த்த கங்காவின் மகன், இவர்களில் மணிகண்டன் தன்னுடைய துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்ப்பவன் என்று அடையாளம் காட்டினார். அதனால் மணிகண்டனின் செல்போன் சிக்னலை போலீஸார் ஆய்வுசெய்தனர். அதனடிப்படையில் மணிகண்டனை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார், ``கொள்ளைச் சம்பவத்தில் மணிகண்டன், அவனின் நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மணிகண்டனிடம் விசாரித்தபோது கங்காவின் மகன் நடத்திவரும் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்தபோது சில மாதங்கள் தனக்குத் சம்பளத்தைத் தரவில்லை. அதனால் சம்பளத்தைக் கேட்டபோது அவர் என்னை ஏமாற்றிவந்தார். அதனால்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நண்பர்களுடன் ஈடுபட்டதாகத் தெரிவித்திருக்கிறார். விசாரணைக்குப்பிறகு மணிகண்டன், ரமேஷ், மாரியப்பன் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து 30,000 ரூபாய், மூன்று செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தலைமறைவாக உள்ள இரண்டு பேரைத் தேடிவருகிறோம்" என்றனர்.