டெல்லி திகார் சிறை மிகவும் பாதுகாப்பு மிக்கது என்று சொல்லப்பட்டாலும், அதில் அடிக்கடி வன்முறைகள் நடந்துகொண்டேயிருக்கின்றன. இந்தச் சிறையில்தான் சுகேஷ் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு பல கோடி லஞ்சம் கொடுத்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தான். இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிரிமினல்கள் அடிக்கடி மோதிக்கொள்வது வழக்கம். இன்று அதிகாலையில் அது போன்று இரண்டு கும்பல்கள் மோதிக்கொண்டனர். சுனில் மான் என்று அழைக்கப்படும் தில்லு தாஜ்புரியா என்ற கிரிமினல் திகார் சிறையில் கீழ் தளத்தில் அடைக்கப்பட்டிருந்தான்.

அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் முதல் தளத்தில் அவனது எதிரிகள் யோகேஷ், தீபக், ராஜேஷ், ரியாஜ் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இரவில் சிறைக்கம்பிகளை உடைத்துக்கொண்டு கீழ் தளத்துக்கு வந்து சுனில் மான் அடைக்கப்பட்டிருந்த அறையின் கம்பியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அவர்கள் சுனில் மானை இரும்புக்கம்பியால் அடித்து உதைத்தனர்.
அதிகாலையில் சுனில் மான் காயமடைந்து கிடப்பதைப் பார்த்த சிறை பாதுகாவலர்கள், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சுனில் மான் ஏற்கெனவே இறந்திருந்தார். இந்தச் சம்பவத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் யோகேஷ், தீபக், ராஜேஷ், ரியாஜ் ஆகியோர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். சிறையில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

2021-ம் ஆண்டு தில்லு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் போன்று வேடமணிந்து டெல்லி ரோகினி நீதிமன்றத்துக்குச் சென்றனர். அவர்கள் ஜிதேந்தர் என்ற கிரிமினலை சுட்டுக் கொலைசெய்தனர். அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் சுட்டுக்கொலை செய்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக தில்லு ராஜ்புரியா சேர்க்கப்பட்டிருந்தான். தில்லுதான் சிறையில் இருந்தபடி ஆட்களை அனுப்பி ஜிதேந்தரை படுகொலை செய்தான் எனத் தெரியவந்தது. ஜிதேந்தர் கூட்டாளிகளுக்கும், தில்லு கூட்டாளிகளுக்குமிடையே பல ஆண்டுகளாக பகை இருந்துவருகிறது. இப்போது ஒருவர் மாற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இப்போது தில்லுவைக் கொலைசெய்தது ஜிதேந்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இரு கும்பலைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டு 12-க்கும் மேற்பட்டோரை கொலைசெய்திருக்கின்றனர்.