அரசியல்
அலசல்
Published:Updated:

பழிக்குப் பழி கொலைகள்... பயமுறுத்துமா டுமீல்... டுமீல்!

பயமுறுத்துமா டுமீல்... டுமீல்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயமுறுத்துமா டுமீல்... டுமீல்!

அப்போது அவர்கள் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பிச் செல்ல முயன்றனர். நல்லவேளையாக வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை

சென்னை புறநகரில், ரெளடி சச்சின் துப்பாக்கியால் சுடப்பட்டதன் பின்னணியை விசாரித்தால் தலை கிறுகிறுக்கிறது!

சென்னை புறநகரில் ரௌடிகள் இடையேயான மோதலால் பழிக்குப் பழி கொலைகள் தொடர்கதையாகிவருகின்றன. சில தினங்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரியில் சந்துரு என்ற ரௌடியை அவர் மனைவி கண்ணெதிரிலேயே முகம் சிதைத்து, கொடூரமாகக் கொலைசெய்தது ஒரு கும்பல். 2021-ல் செங்கல்பட்டு மாவட்டம், எருமையூரில் நடந்த கொலைக்கு, பழிக்குப் பழியாகவே இந்தக் கொலை நடந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான் சச்சின்மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கிறது போலீஸ்.

பழிக்குப் பழி கொலைகள்... பயமுறுத்துமா டுமீல்... டுமீல்!

இது தொடர்பாக போலீஸாரிடம் பேசியபோது, “பிரபல ரெளடி நெடுங்குன்றம் சூர்யாவின் இரு கரங்களாக இருந்தவர்கள் லெனின், மேத்யூ. சூர்யாவிடமிருந்து பிரிந்து வந்து தனித்தனியே ‘தொழில்’ செய்துவந்த இந்த இருவரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது. அதன் உச்சமாக, மாறி மாறிக் கொலைகளும் நடந்தன. மேத்யூ தரப்பைச் சேர்ந்த ரெளடி அபிஷேக் தலை துண்டிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். அந்தக் கொலைக்குப் பழிக்குப் பழியாக, லெனினின் தம்பி நரேஷை அவனது திருமணத்தின்போதே கொலை செய்யப்போவதாக, மேத்யூ டீமைச் சேர்ந்த சச்சின் முகநூலில் பகிரங்கமாகவே மிரட்டல் பதிவிட்டான். இதையடுத்து நரேஷின் திருமணத்துக்கு வந்த கார்களையெல்லாம் சோதனையிட்டோம். எனவே, அன்றைய தினம் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த 26-9-2021-ம் தேதி லெனின் தரப்பைச் சேர்ந்த ரௌடி சந்துருவை ஒரு கும்பல் கொலைசெய்தது. இதை இப்படியேவிட்டால், மாறி மாறிக் கொலைகள் விழுந்துகொண்டேயிருக்கும் என்று, முகநூலில் மிரட்டல் விடுத்த எருமையூரைச் சேர்ந்த ரௌடி சச்சினைத் தேடினோம். சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படை 27-9-2022-ம் தேதி அதிகாலையில் சச்சினையும், அவனுடைய கூட்டாளியான பரத்தையும் மடக்கியது.

லெனின், மேத்யூ, சந்துரு, சச்சின்
லெனின், மேத்யூ, சந்துரு, சச்சின்

அப்போது அவர்கள் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பிச் செல்ல முயன்றனர். நல்லவேளையாக வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. எனவே, காவலர் பாஸ்கரன் துணிச்சலாக சச்சினைப் பிடிக்க முயன்றார். அப்போது சச்சின், காவலர் பாஸ்கரனின் தோள்பட்டையில் கத்தியால் வெட்டினான். அதனால்தான் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ரௌடி சச்சின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டியதாகிவிட்டது. இதில் சச்சினின் இடது காலில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. பரத் தப்பி ஓடிவிட்டான்” என்றனர்.

சச்சின் மீதான துப்பாக்கிச்சூடு காரணமாக, பழிக்குப் பழியாக வேட்டையாடிக்கொண்டிருந்த ரெளடிகள் மத்தியில் பயம் வந்திருப்பதாகவும், எனவே குற்றங்கள் குறையும் என்றும் நம்புகிறது போலீஸ்... பார்க்கலாம்!