அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

வழிப்பறி... நிர்வாண வீடியோ... பணம் பறிப்பு! - ஆண்களை மட்டும் குறிவைத்த கொள்ளைக் கும்பல்!

ஜெயபாலா, முனீஸ்குமார், மாரீஸ்வரன், முனியசாமி, கலைச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயபாலா, முனீஸ்குமார், மாரீஸ்வரன், முனியசாமி, கலைச்செல்வன்

கைதான ஐந்து பேரும் வேலை வெட்டிக்குச் செல்லாமல், இதே தொழிலாக இருந்திருக்கிறார்கள். இதில் கிடைத்த பணத்தைக்கொண்டு, ‘கஞ்சா, மது’ எனக் குதூகலமாக இருந்திருக்கிறார்கள்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்துவருபவர் விஜயகுமார். சில நாள்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவரைக் கடத்திச் சென்று பணம், நகையைப் பறித்தது ஒரு கொள்ளைக் கும்பல். பிறகு அவரை அடித்து உதைத்து நிர்வாண வீடியோ எடுத்த கும்பல், ‘நாங்கள் கேட்கும்போதெல்லாம் பணம் தரவில்லையென்றால், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம்’ என மிரட்டி அனுப்பியிருக்கிறது.

இது குறித்த வழக்கில், ஜெயபாலா, முனீஸ்குமார், முனியசாமி, கலைச்செல்வன் என நான்கு பேரைக் கைது செய்திருக்கின்றனர் கேணிக்கரை தனிப்படை போலீஸார். பிடிபட்ட நான்கு பேரின் செல்போன்களை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் மேலும் சில ஆண்களின் நிர்வாண வீடியோக்களும் போட்டோக்களும் இருந்திருக்கின்றன.

ஜெயபாலா, முனீஸ்குமார், மாரீஸ்வரன், முனியசாமி, கலைச்செல்வன்
ஜெயபாலா, முனீஸ்குமார், மாரீஸ்வரன், முனியசாமி, கலைச்செல்வன்

திடுக்கிட்ட போலீஸார் குற்றவாளிகளிடம் விசாரித்தபோது, ‘‘எங்களை ஈ.சி.ஆர் சாலையில் ஆங்காங்கே நிற்க வைத்துவிட்டு, எங்கள் கும்பல் தலைவன் மாரீஸ்வரன் வேறோர் இடத்தில் நின்றபடி சாலையை கவனிப்பார். பின்னர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வரும் நபரின் அடையாளத்தைச் சொல்லி, சிக்னல் கொடுப்பார். அந்தக் குறிப்பிட்ட நபரிடம் நாங்கள் லிஃப்ட் கேட்டு ஏறி, கடத்திச் சென்று வழிப்பறி செய்வோம்.

வழிப்பறி... நிர்வாண வீடியோ... பணம் பறிப்பு! - ஆண்களை மட்டும் குறிவைத்த கொள்ளைக் கும்பல்!

சமீபகாலமாக ராமநாதபுரம் ஈ.சி.ஆர் சாலையில் அடிக்கடி போலீஸ் ரோந்து செல்வதால் எங்களால் தொடர்ந்து வழிப்பறி செய்ய முடியவில்லை. எனவே, ‘கடத்துபவர்களை நிர்வாண வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு, தேவைப்படும்போதெல்லாம் மிரட்டிப் பணம் பறித்துக்கொள்ளலாம்’ என மாரீஸ்வரன் ஐடியா கொடுத்தார். மேலும், ‘பெண்களைக் கடத்தி வழிப்பறி செய்தால் பாலியல் போன்ற கடுமையான சட்டங்களில் சிக்கிக்கொள்வோம். ஆண்களை மட்டுமே கடத்தினால் சாதாரண வழக்கு மட்டுமே போடுவார்கள். மாட்டிக்கொண்டாலும் எளிதில் வெளியே வந்துவிடலாம்’ என்றார். அதன்படிதான், அந்த ஆண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்துவைத்து, மிரட்டிப் பணம் பறித்துவந்தோம்’’ என்று சொல்லி அதிரவைத்திருக்கின்றனர்.

இதற்கிடையே வழிப்பறிக் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்ட மாரீஸ்வரனை போலீஸார் தேடிவந்த நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் ஐடி ஊழியர் ஒருவரை இதேபோல் வழிப்பறி செய்து, நிர்வாண வீடியோ எடுத்த வழக்கில் மாரீஸ்வரன் சிக்கிக்கொண்டார். இது குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, “கைதான ஐந்து பேரும் வேலை வெட்டிக்குச் செல்லாமல், இதே தொழிலாக இருந்திருக்கிறார்கள். இதில் கிடைத்த பணத்தைக்கொண்டு, ‘கஞ்சா, மது’ எனக் குதூகலமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள்மீது கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்திருக்கிறோம்’’ என்றார்.

ஜாக்கிரதை... ஆண்களே!