கடத்தல், கள்ளத்துப்பாக்கி, கொலை மிரட்டல்... பிரபல ரௌடி ‘சீசிங் ராஜா’வின் `பகீர்' பின்னணி!

பணத்துக்காக ஆட்களைக் கடத்துவது, அவர்களை மிரட்டிப் பணம் கேட்பது, கொடுக்கவில்லையென்றால் அடித்து, துன்புறுத்திக் கொடூரமாகக் கொலைசெய்து விட்டு எஸ்கேப்பாகிவிடுவது சீசிங் ராஜா டீமின் ஸ்டைல்.
நிலத்தகராறு ஒன்றில் கட்டப்பஞ்சாயத்து செய்து, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கைதாகி, சிறையிலிருக்கிறார் பிரபல ரௌடி சீசிங் ராஜா. தற்போது சிறைக்குள்ளிருந்தபடியே செல்போன் மூலம் தன்மீது புகார் கொடுத்தவர்களுக்கு சீசிங் ராஜா கொலை மிரட்டல் விடுத்திருப்பது சிறை வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.
யார் இந்த ‘சீசிங் ராஜா’?
டைரக்டர் ஹரி இயக்கிய ‘சிங்கம்’ திரைப்படத்தில், பில்டர்கள், தொழிலதிபர்களை மிரட்டுவது, ஆள்கடத்தல் செய்து பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றங்களைச் செய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் பிரகாஷ் ராஜ். அந்தக் கதாபாத்திரம்போலவே ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்களில் ஆள்கடத்தல், கொலைமிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு, தன் ரௌடி சாம்ராஜ்ஜியத்தை வளர்த்தெடுத்தவர் பிரபல ரௌடி சீசிங் ராஜா. சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த இவர்மீது தமிழ்நாடு, ஆந்திரா மாநில காவல் நிலையங்களில் கொலை, ஆள்கடத்தல், பணம் பறித்தல் உட்பட 33 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

2021-ம் ஆண்டு, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் என்பவரைக் கடத்திச் சென்று, இரண்டு நாள்களாக அவரை அடித்து, உதைத்து சித்ரவதை செய்த வழக்கில் சீசிங் ராஜா கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தவர், நீண்ட நாள்களாகத் தலைமறைவாகவே இருந்தார். இந்த நிலையில், வேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்த தியாகராஜன் (62) என்பவரின் வசமிருக்கும் 22 ஏக்கர் நிலத்தை எழுதித்தரக் கேட்டு, அவரின் மருமகளை போனில் மிரட்டிய புகாரில் ஆந்திர மாநிலம், சித்தூரில் வைத்து தனிப்படை போலீஸார் சீசிங் ராஜாவைக் கைதுசெய்தனர். 05-11-2022-ம் தேதி சென்னை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சீசிங் ராஜா, சிறைக்குள்ளும் யாருக்கும் கட்டுப்படாமல் தன் ரௌடி நெட்வொர்க்கை இயக்கிவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது.
சீசிங் ராஜாவின் க்ரைம் பின்னணியை அறிந்த போலீஸார் சிலரிடம் விசாரித்தோம். ``சென்ற வருடம், நவம்பரில் ஆந்திர மாநில எல்லையில் வைத்து தனிப்படை போலீஸார் சீசிங் ராஜாவைக் கைதுசெய்தனர். அப்போது அவனிடமிருந்து ஒரு கள்ளத்துப்பாக்கி, 14 தோட்டாக்கள், ஏழு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சிட்லபாக்கம் காவல் நிலைய சரித்திரப் பதிவேட்டில், ரௌடி சீசிங் ராஜாவின் பெயர் `ஏ ப்ளஸ் குற்றவாளி’ என்றே பதிவாகியிருக்கிறது. இதுவரை ஏழு முறை அவன்மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்திருக்கிறது. 2010-ம் ஆண்டு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணைக்காக வந்த பிரபல ரௌடி சின்னா, சின்னாவின் வழக்கறிஞர் பகவத்சிங் ஆகியோரை சீசிங் ராஜாவும், அவனின் கூட்டாளியான ஆற்காடு சுரேஷின் டீமும் கொலைசெய்தார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் சீசிங் ராஜாவின் பெயர் ரௌடிகள் வட்டாரத்தில் பிரபலமானது. எப்போதும் துப்பாக்கிகளுடன் தன்னைச் சுற்றி ஒரு பெரிய அடியாள் கூட்டத்தையே வைத்துக்கொண்டு தமிழகத்திலும் ஆந்திராவிலும் தனி சாம்ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டிருந்தான் சீசிங் ராஜா.

பணத்துக்காக ஆட்களைக் கடத்துவது, அவர்களை மிரட்டிப் பணம் கேட்பது, கொடுக்கவில்லையென்றால் அடித்து, துன்புறுத்திக் கொடூரமாகக் கொலைசெய்து விட்டு எஸ்கேப்பாகிவிடுவது சீசிங் ராஜா டீமின் ஸ்டைல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ‘சீறும்’ கட்சிப் பிரமுகர் ஒருவரை சீசிங் ராஜா டீம் இதேபோல கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியது. உயிருக்கு பயந்து அந்தப் பிரமுகரும் ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, தப்பித்துவந்தார்.
இந்த விஷயத்தை சென்னை புறநகர் காவல் சரகம் ஒன்றில் உதவி கமிஷனராக இருந்த ‘தமிழ்க் கடவுள்’ பெயர்கொண்ட அதிகாரி எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார். அவர் சீசிங் ராஜாவிடம் 50 லட்சத்தைக் கேட்டு பேரம் பேசியதாகச் சொல்கிறார்கள். இறுதியாக 35 லட்சமாகப் பேரம் படிந்திருக்கிறது. இதனால், கடத்தப்பட்ட சீறும் கட்சியின் ரியல் எஸ்டேட் பிரமுகரையே புகாரளிக்க
விடாமல் மிரட்டி அனுப்பியிருக்கிறார் ‘தமிழ்க் கடவுள்’ உதவி கமிஷனர். மேலும், சீசிங் ராஜாவிடம் கறந்த தொகையில், தன்னுடைய பங்காக 10 லட்சத்தை எடுத்துக்
கொண்டு, மீதி 25 லட்சத்தை உயரதிகாரி ஒருவரிடம் பவ்யமாக ஒப்படைத்திருக்கிறார், அந்த உதவி கமிஷனர். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில காவல்துறை உயரதிகாரிகளுடன் சீசிங் ராஜாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்தக் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் ஒன்றாக அமர்ந்து மாலை நேர மது கேளிக்கைகளில் ஈடுபடும் அளவுக்கு சீசிங் ராஜாவுக்குச் செல்வாக்கு அதிகரித்தது.

காவல்துறை செல்வாக்கும், வழக்கறிஞர்கள் சிலரின் சப்போர்ட்டும் சீசிங் ராஜாவுக்குப் பக்கபலமாக இருந்ததால், அவனை அவ்வளவு லேசில் கைதுசெய்ய முடியவில்லை. வேறு சிலரோ புகாரளிக்கவே பயந்தார்கள். வேளச்சேரி கட்டப்பஞ்சாயத்து சம்பவத்தில் சீசிங் ராஜா நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால், ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் கொடுத்த வழக்கில் சீசிங் ராஜா நேரடியாக ஈடுபட்டிருந்ததால், அந்த வழக்கை வாபஸ் பெறச் சொல்லி சிறைக்குள்ளிருந்தே சரவணனை மிரட்டியிருக்கிறான். இது தொடர்பாக சரவணன் புகாரளிக்க முன்வந்தபோது போலீஸார் அந்தப் புகாரை வாங்க மறுத்ததோடு, சரவணனை அலைக்கழித்திருக்கிறார்கள். இதையடுத்து சரவணன், சில முக்கியக் காவல்துறை உயரதிகாரிகளைச் சந்தித்து முறையிட்ட பிறகே, சீசிங் ராஜா மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
சிறையில் போதைப்பொருள், செல்போன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கைதிகள் யாராவது பயன்படுத்துகிறார்களா என்று ஸ்பெஷல் டீம் மூலம் அடிக்கடி சோதனை நடத்தப்படும். சீசிங் ராஜா சிறையில் செல்போனைப் பயன்படுத்தியிருந்தால் நிச்சயம் அவன்மீதும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர் விரிவாக.