Published:Updated:

சென்னை: மகளுக்குத் துணி எடுத்துவரச் சென்ற ரௌடி கொலை - மது விருந்தில் நடந்த கொடூரம்

க்ரைம் - கொலை
News
க்ரைம் - கொலை

மது விருந்தில் நடந்த மோதலில் பிரபல ரௌடி கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

சென்னை: மகளுக்குத் துணி எடுத்துவரச் சென்ற ரௌடி கொலை - மது விருந்தில் நடந்த கொடூரம்

மது விருந்தில் நடந்த மோதலில் பிரபல ரௌடி கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

க்ரைம் - கொலை
News
க்ரைம் - கொலை

சென்னை, எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் (21). இவர்மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவரின் மனைவி நிஷா. கடந்த சில மாதங்களாக அஜய், எந்தவிதக் குற்ற வழக்கிலும் கைதுசெய்யப்படவில்லை. அவர் மனம் திருந்தி வாழ்ந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் அருகே அஜய் வசித்துவருகிறார். இந்த நிலையில் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால், அஜய் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அஜய், தன் மகளை அனுமதித்திருக்கிறார்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

இந்த நிலையில் மகளுக்குத் துணி எடுத்துவர வீட்டுக்குச் சென்ற அஜய், தன்னுடைய நண்பர்கள் ஜீவா, விக்கி, அன்பரசு மற்றும் சிலரைச் சந்தித்திருக்கிறார். பின்னர் அவர்களோடு மது அருந்தியிருக்கிறார். அப்போது போதையில் அஜய்க்கும் அவரின் நண்பர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் மகளின் துணிகளை வைத்திருந்த பையையும் அவரின் நண்பர்கள் குப்பைத்தொட்டியில் வீசியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அஜய், `எப்படி என் மகளின் துணிகளை குப்பை தொட்டியில் வீசலாம்?’ என நண்பர்களிடம் கேட்டதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டியிருக்கிறார்.

போதையில் பிரபல ரௌடி அஜய் இருந்ததால், அவரிடமிருந்த கத்தியைப் பறித்த நண்பர்கள், அதே கத்தியால் அஜய்யைச் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்கள். ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அஜய், உயிருக்குப் போராடியிருக்கிறார். இதையடுத்து அவரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிந்ததும், சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீஸார் சென்றனர். உயிருக்குப் போராடிய அஜய்யை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மது விற்பனை
மது விற்பனை

இதையடுத்து கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், ஜீவா மற்றும் மூன்று சிறுவர்களைப் பிடித்து விசாரித்துவருகிறார்கள். விசாரணைக்குப் பிறகு அவர்கள் சிறையிலும் சீர்திருத்தப் பள்ளியிலும் சேர்க்கப்படவிருக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட அஜய், பிரபல ரௌடி. இவரின் அம்மாவின் வீடு எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருக்கிறது. மேலும் மணலி புதுநகரிலும் அஜய்க்கு நண்பர்கள் இருக்கின்றனர். அங்கிருந்தால், நண்பர்களுடன் சேர்ந்து அஜய் குற்றச் செயலில் ஈடுபடுவார் என்று கருதிய அவரின் மனைவி, புதுவண்ணாரப்பேட்டைக்குக் குடிபெயர்ந்தார். மகளுக்கு உடல்நலம் சரியில்லாததால் தண்டையார்பேட்டை மருத்துவமனைக்கு வந்த நிலையில்தான் அஜய், தன்னுடைய பழைய நண்பர்களைப் பார்த்து மது அருந்தியிருக்கிறார். அப்போது நடந்த மோதலில் அஜய் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் இன்னும் சிலரை தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.