அலசல்
சமூகம்
Published:Updated:

கவுன்சிலருக்கு போட்ட ஸ்கெட்ச்... மாடியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு! - யார் இந்த ஓட்டேரி கார்த்திக்?

நாட்டி வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டி வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சிகள்

தன் நட்பு வட்டத்திலிருந்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவனின் வீட்டில் ஓட்டேரி கார்த்திக் தங்கியிருந்தபோது, அந்த ரௌடியின் உறவுக்காரப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றான்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரைக் கொல்வதற்காக, வீட்டின் மொட்டைமாடியில் வைத்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோது, வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு கைகளையும் இழந்திருக்கிறார் பிரபல ரௌடி ஓட்டேரி கார்த்திக். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டாவது நாளில்தான் இந்தச் சம்பவம் போலீஸாருக்கே தெரியவந்திருக்கிறது என்பது அடுத்த அதிர்ச்சி!

சென்னை அம்பத்தூர் ஒரகடம், வெங்கடேஸ்வரா நகர், முனுசாமி பிள்ளை கோயில் தெருவில் வசிப்பவர் விஜயகுமார். இவரது வீட்டின் மொட்டைமாடியில், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில், விஜயகுமார் ஒரு நபரைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் அந்த நபருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்ட பிறகே சிகிச்சை பெறுபவர் பிரபல ரௌடியான ஓட்டேரி கார்த்திக் என்பதும், குண்டு வெடிப்பு பற்றியும் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு (4-ம் தேதி) ஒரகடம் கிராம உதவியாளரிடம் புகாரைப் பெற்று அம்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்.

கவுன்சிலருக்கு போட்ட ஸ்கெட்ச்... மாடியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு! - யார் இந்த ஓட்டேரி கார்த்திக்?

யார் இந்த ஓட்டேரி கார்த்திக்..?

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னை தாம்பரம், பீர்க்கன்காரணையைச் சேர்ந்த கார்த்திக், சிறு வயது முதலே திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தவன். பத்தாண்டுகளுக்கு முன்பு ரௌடிகளின் பட்டியலிலும் இடம்பிடித்தான். வண்டலூரை அடுத்த ஓட்டேரி பகுதியில் வசித்துவந்ததே இவனது அடைமொழிக்கு காரணம். பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெகன், நந்தா ஆகிய ரௌடிகளுடன் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்கக் கற்றுக்கொண்ட ஓட்டேரி கார்த்திக், தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டான். ரௌடி ஜெகன் கொலைசெய்யப்பட்ட பிறகு, நந்தா தலைமையிலான டீமின் முக்கியமான அடியாளாக ஓட்டேரி கார்த்திக் இருந்தான்.

இந்த நிலையில், நந்தா டீமிலிருந்த சதீஷ் என்ற ரௌடிக்கு அரிசிக்கடை வியாபாரி ஒருவரின் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டது. சதீஷுக்காக, கடந்த 2014-ம் ஆண்டு அந்த வியாபாரியைக் கொலைசெய்ததுதான் ஓட்டேரி கார்த்திக் மீது பதிவான முதல் கொலை வழக்கு. அதன் பிறகு மிகக்குறுகிய காலகட்டத்தில் தனக்கென்று ஒரு ரௌடி நெட்வொர்க்கை உருவாக்கிக்கொண்டான். அவர்கள் மூலமாக கஞ்சா, கள்ளத்துப்பாக்கி விற்பனை ஆகியவற்றிலும் ஈடுபட்டான். கொரோனா காலகட்டத்தில் தன்னுடைய கஞ்சா தொழிலுக்கு இடையூறாக இருந்த பலரின் மீதும் வெடிகுண்டு வீசி அச்சுறுத்திவந்தான். இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிகப்பெரிய கஞ்சா நெட்வொர்க்கின் தலைவனாக மாறினான் ஓட்டேரி கார்த்திக்.

ஓட்டேரி கார்த்திக்
ஓட்டேரி கார்த்திக்

நண்பனுக்கு துரோகம்... தலைமறைவு வாழ்க்கை!

தன் நட்பு வட்டத்திலிருந்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவனின் வீட்டில் ஓட்டேரி கார்த்திக் தங்கியிருந்தபோது, அந்த ரௌடியின் உறவுக்காரப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றான். அதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பகையாக மாறியது. இது இரு தரப்புகளுக்குமிடையே அடிக்கடி மோதலை ஏற்படுத்தியது. மூன்று முறை நடத்தப்பட்ட கொலை முயற்சிகளிலிருந்தும் தப்பித்த ஓட்டேரி கார்த்திக், எப்போதும் தன் பாதுகாப்புக்காக வெடிகுண்டு, நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வலம்வரத் தொடங்கினான். ஒரு கட்டத்துக்கு மேல் உயிர் பயம் காரணமாக தலைமறைவாகவே இருந்துவந்தான். இந்த நிலையில்தான் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டு கைகளை இழந்திருக்கிறான்” என்றார்.

குண்டு வெடித்தது எப்படி?

அம்பத்தூர் போலீஸாரிடம் பேசினோம். ``நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் கரைகண்ட கார்த்திக், அவற்றை விற்பதைத் தன் உபரி வருமானத்துக்கான தொழிலாகவே செய்துவந்திருக்கிறான். அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் ‘பெட் அனிமல் பிசினஸ்’ செய்துவரும் விஜயகுமாருடன் சேர்ந்து, அவரின் வீட்டு மொட்டைமாடியில் வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோதுதான் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் அவனது இரு கைகளும் முழுமையாகச் சிதைந்ததுடன், முகத்திலும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த ஓட்டேரி கார்த்திக், அவன் கூட்டாளி விஜயகுமார் இருவரையும் கைதுசெய்திருக்கிறோம்.

நாட்டி வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சிகள்
நாட்டி வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சிகள்
நாட்டி வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சிகள்
நாட்டி வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சிகள்

இருவரும் எதற்காக நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்தார்கள் என்று விசாரித்தபோது அவர்களின் கொலைச் சதி குறித்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை புறநகரைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் விஜயகுமாரிடம் பணத் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். வாய்ச் சண்டை கைகலப்பு வரை போயிருக்கிறது. அந்த கவுன்சிலரைப் போட்டுத்தள்ள திட்டமிட்ட விஜயகுமார், அதற்காக ஓட்டேரி கார்த்திக் மூலம் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிக்க, தன்னுடைய வீட்டின் மொட்டைமாடியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், இதுவரை அவர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. விசாரணை தொடர்கிறது” என்றனர்.

வெடிகுண்டு விபத்து தொடர்பான தகவல்களை மூடிமறைக்க அம்பத்தூர் போலீஸார் முயல்வதாகக் கூறப்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க உளவுத்துறையும், ஆவடி கமிஷனர் அலுவலகமும் உத்தரவிட்டிருக்கின்றன!