புதுக்கோட்டையைச் சேர்ந்தவர், பிரபல திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ். இவர், `பசங்க’, `வம்சம்’ உட்பட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது, சென்னையில் வசித்துவரும் பாண்டிராஜ், அவ்வப்போது, புதுக்கோட்டைக்கு வந்து சென்றிருக்கிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பே, நில புரோக்கராக பாண்டியராஜிடம், புதுக்கோட்டை, பூங்கா நகரைச் சேர்ந்த குமார் (49) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.
அப்போது குமார், சிப்காட் பகுதியில், விற்பனைக்கு நிலம் இருப்பதாகவும், அதை வாங்கித் தருவதாகவும் கூறி, பாண்டியராஜிடம் இரண்டு தவணைகளில் ரூ.40 லட்சம் வரையிலும் பணம் வாங்கியிருக்கிறார். அந்த இடம், தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது அதன் பிறகுதான் பாண்டியராஜுக்கு தெரியவந்திருக்கிறது.

இதற்கிடையே பாண்டியராஜ், குமாரைத் தன்னுடைய படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கவைத்திருக்கிறார். இதேபோல், டி.வி.எஸ் கார்னர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாகக் கூறி, இந்த முறை எந்தச் சிக்கலுமின்றி, அதுவும் குறைந்த விலைக்கு வாங்கித் தருகிறேன் என்று குமார், பாண்டியராஜிடம் மீண்டும் ரூ.1 கோடி வரை பணம் பெற்றிருக்கிறார். இதற்கிடையே, அவ்வப்போது கடனாகவும், பணம் வாங்கியிருக்கிறார். மொத்தமாக ரூ.1,89,50,000 பணத்தை குமாரிடம் பாண்டியராஜ் கொடுத்திருக்கிறார்.
டி.வி.எஸ் கார்னர் இடமும், வேறு ஒருவர் பெயரில் இருப்பது பாண்டியராஜுக்குத் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த, பாண்டியராஜ், குமாரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், அவர் பணத்தைக் கொடுக்கவில்லை.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் இயக்குநர் பாண்டிராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாரிமன்னன், மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.

குமார், மோசடியில் ஈடுபட்டது, உறுதிசெய்யப்பட்ட நிலையில், குமாரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டையில், நிலம் வாங்கித் தருவதாகக் கோடிக்கணக்கில் பிரபல இயக்குநர் ஏமாற்றப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.