டெல்லியிலுள்ள அகில்யாபாய் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் விடுதி வார்டனுடன் சமுதாய நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றனர். சென்ற இடத்தில் வார்டன் பேக்கில் இருந்த 8,000 ரூபாய் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த வார்டன், இது குறித்து மாணவிகளிடம் விசாரித்துப் பார்த்தார். இதில் இரண்டு மாணவிகள் பணத்தை எடுத்திருப்பதாக வார்டன் சந்தேகப்பட்டார். உடனே இரண்டு மாணவிகளையும் விடுதியில் வைத்து மற்ற மாணவிகளின் துணையோடு ஆடையை அவிழ்த்து சோதனை செய்து பார்த்தார். ஆனால், இந்தச் சோதனையில் மாணவிகளிடம் பணம் எதுவும் சிக்கவில்லை.
அதே சமயம் சோதனைக்குள்ளான மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். உடனே பெற்றோர் விடுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விடுதி வார்டனுடன் தகராறு செய்தனர். பின்னர் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் செய்தனர். அதோடு இது குறித்து உள்ளூர் போலீஸிலும் புகார் செய்தனர்.

அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உத்தரவிட்ட கல்லூரி நிர்வாகம் அதற்காக முதல்வர் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது.
அதோடு விடுதி வார்டன் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து போலீஸ் அதிகாரி சஞ்சய் குமார், ``மாணவிகள் துன்புறுத்தப்படுவதாகவும், ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தப்படுவதாகவும் எங்களுக்குப் புகார் வந்திருக்கிறது. அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறோம்” என்று தெரிவித்தார். ஏற்கெனவே மாணவிகள் நீட் தேர்வின்போது ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.