திருப்பூர் அவிநாசி சாலையில் ``பெட் பாங்க் பைனான்சியல் சர்வீஸ்' என்ற பெயரில் வங்கி சாரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பெயரில் 297 பவுன் போலி நகைகளை அடகுவைத்து, லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றிருப்பதாக அதன் மண்டல வர்த்தகப்பிரிவு பொறுப்பாளர் சரண் சிவகுமார், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் அண்மையில் புகாரளித்தார்.
இந்தப் புகாரின்பேரில், வழக்கு பதிவுசெய்த போலீஸார், வாடிக்கையாளர்களிடம் விசாரித்தபோது அவர்கள், தாங்கள் அடமானம் வைத்த நகைக்கு உரிய பணத்தைச் செலுத்தி நகையைத் திரும்பப் பெற்றுச் சென்றதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, நிதி நிறுவன மேலாளரான உடுமலையைச் சேர்ந்த சிவா ( 29), நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய திருப்பூர் செட்டிப்பாளையம் பொங்குபாளையத்தைச் சேர்ந்த பிரபு (32), ஊழியரான குன்னத்தூரைச் சேர்ந்த விஸ்வநாதன் (32) ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அடகுவைத்த நகையை வாடிக்கையாளர்கள் திருப்பிச் சென்ற பிறகு, அந்தக் கணக்கை முடிக்காமல், அதில் ஏற்கெனவே வாடிக்கையாளர் வைத்த நகைபோல், போலியாக நகைசெய்து வங்கிப் பெட்டகத்தில் வைத்து ரூ.81 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவா, பிரபு, விஸ்வநாதன் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.