கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று ஆத்தூர் நோக்கிப் புறப்பட்டது. அப்போது அயோத்தியாபட்டினம் அருகே பேருந்து வந்தபோது பயணிகளில் ஒருவர் டிக்கெட் எடுக்கவில்லை என நடத்துனருக்குத் தெரியவந்தது. இதனால் நடத்துனர் கமலக்கண்ணன் பயணச்சீட்டைச் சரிபார்த்தபோது, திருநங்கை ஒருவர் டிக்கெட் எடுக்காதது தெரியவந்தது.
டிக்கெட் எடுக்குமாறு அவரிடம் கேட்டபோது நடத்துனருக்கும், திருநங்கைக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. பின்னர், பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்துக்கு வந்தபோது டிக்கெட் எடுக்காமல் பயணித்த திருநங்கையை நேரக் காப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு அபராதம் செலுத்தும்படி கமலக்கண்ணன் கூறியிருக்கிறார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருநங்கை, தனது செல்போன் மூலம் ஆத்தூர் பகுதியிலுள்ள மற்ற திருநங்கைகளுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேரக் காப்பாளர் அறைக்கு திரண்டுவந்து அங்கிருந்த கமலக்கண்ணனைச் சரமாரியாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதைக் கேட்கவந்த மற்ற பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்களையும் திருநங்கைகள் தாக்கியிருக்கின்றனர்.
இதை அறிந்து அந்தப் பகுதியிலுள்ள புறக்காவல் நிலைய போலீஸார் வந்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட திருநங்கைகளை அங்கிருந்து அனுப்பிவைத்திருக்கின்றனர்.
இதனால் நடத்துனர்கள், ஓட்டுநர்கள், `தாக்குதலில் ஈடுபட்ட திருநங்கைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேருந்து நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துகள் இயங்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தவே, கலைந்து சென்றனர்.