சேலம், ஆத்தூர் டவுன் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, நேற்று எஸ்.பி-யிடம் மனு ஒன்று அளித்து தஞ்சம் அடைந்தனர். அதில், `நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் எங்கள் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. அதனால் நாங்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
அதன் மூலம் காதல் ஜோடிகளை ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி எஸ்.பி அலுவலகத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் காதல் ஜோடி ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்துக்குச் செல்லும்போதே, பெண்ணின் தரப்பிலிருந்து, காதலனுடைய அம்மாவுக்கு முன்னாள் ஆத்தூர் பா.ம.க நகரச் செயலாளர் அருள் என்பவர் போன் செய்து, `எங்கே உன் புள்ளை, ஒழுங்கு மரியாதையா பொண்ணை உயிரோடவோ அல்லது பொணமாகவோ ஒப்படைச்சுட்டு, ஓடிடச் சொல்லு. அதையயும் மீறி கல்யாண செஞ்சா, ரெண்டு பேரையும் துண்டு துண்டா வெட்டி வீசிடுவேன்.

ஆட்கள் ரெடியா இருக்காங்க, கேஸ் வாங்குறதுக்கு. அவன் எந்தக் கோயில்ல, போலீஸ் ஸ்டேஷன்ல கல்யாணம் பண்ணினாலும் அவங்க ரெண்டு பேரையும் பார்த்த இடத்துலயே எங்க ஆட்கள் வெட்டிப் போட்டுடுவாங்க’ என்று மிரட்டியிருக்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட காதல் ஜோடி சேலம் கொண்டாலாம்பட்டியிலுள்ள புறநகர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.
அதன் மூலம் காதல் ஜோடி கொண்டலாம்பட்டியிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பின்னர் கொண்டலாம்பட்டி போலீஸார் விசாரிக்க, பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் வர மறுத்துவிட்டனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி சிவக்குமாரிடம் பேசியபோது, “காதல் ஜோடியை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகவே, அவர்களை பாதுக்காப்பான இடத்தில் இருக்குமாறு கூறியிருக்கிறோம். மேலும் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த அருள், கண்ணையன், ரமேஷ், சுரேஷ் ஆகியோர்மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. இவர்களில் அருளின் தந்தை திடீரென இறந்ததால், அந்த ஈமச்சடங்குக்காகக் கைது செய்யாமல் இருந்துவருகிறோம். மற்ற மூன்று பேர்மீதும் கைது நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம்” என்றார்.