அலசல்
சமூகம்
Published:Updated:

கழுத்தறுத்து கொல்லப்பட்ட ரௌடி... சேலத்தில் தொடரும் பழிக்குப் பழி சம்பவங்கள்!

ஆனந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்தன்

ரௌடி ஆனந்தன் மீது 14-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருக்கின்றன. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய அன்பழகன் உள்ளிட்ட நால்வர் சென்னையில் சரணடைந்திருக்கிறார்கள்.

சேலம், வலசையூர் பகுதியைச் சேர்ந்தவன் பிரபல ரௌடியான காட்டூர் ஆனந்தன். கராத்தே மாஸ்டரான இவன்மீது சேலம், வாழப்பாடி, மல்லூர் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் பல நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஆனந்தனை கழுத்தறுத்துக் கொலை செய்திருக்கிறது ஒரு மர்மக் கும்பல்.

ரௌடி ஆனந்தனின் வாழ்க்கைப் பின்னணியில்தான் அவரது கொலைக்கான காரணமும் புதைந்திருக்கிறது என்கிறார்கள் போலீஸார். ‘‘2014-ம் ஆண்டில், பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் சண்முகத்தைக் கொன்றதுதான் அவனது முதல் கொலை. கொலையானவரின் தலையைத் துண்டித்து, பேருந்தினுள்ளேயே உதைத்து விளையாடிய கொடூரன் அவன். அதே பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, சோளக்காட்டு பொம்மையோடு சேர்த்துக் கட்டிவைத்து தலையையும், கை கால்களையும் துண்டு துண்டாக வெட்டிக் கொடூரமாகக் கொலைசெய்தான் ஆனந்தன். பதறவைக்கும் இந்தக் கொலைகளால் சேலத்தில் ரௌடி ஆனந்தனின் பெயர் தலைதூக்க ஆரம்பித்ததுடன், அவனுக்கு எதிரிகளும் அதிகரித்தனர்.

ஆனந்தன்
ஆனந்தன்

இன்னொரு பக்கம் ரியல் எஸ்டேட், அரசியல் கட்டப்பஞ்சாயத்துகளில் இறங்கி அரசியல் புள்ளிகளின் கோபத்துக்கும் ஆளானான். ஒருகட்டத்தில் தன்மீது எப்போது வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் நடவடிக்கை பாயும் என்பதை உணர்ந்த ஆனந்தன், ரௌடி இமேஜிலிருந்து தன்னை மெல்ல விடுவித்து, அரசியல்வாதியாகக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தான். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மாவட்ட நிர்வாகி வாயிலாக ஆளுங்கட்சிக்குள் நுழைந்தவன், எங்கே சென்றாலும் தன்னைச் சுற்றிலும் ஒரு படையோடு போவதை வழக்கமாக வைத்திருந்தான்.

கழுத்தறுத்து கொல்லப்பட்ட ரௌடி... சேலத்தில் தொடரும் பழிக்குப் பழி சம்பவங்கள்!

சம்பவத்தன்று ஆனந்தனும், அவனுடைய நண்பர் பிரபாகர் என்பவரும் வெள்ளியம்பட்டியிலுள்ள நண்பரைச் சந்தித்துவிட்டுவரலாம் என்று டூ வீலரில் கிளம்பியுள்ளனர். ஆள் படை இல்லாமல் அவன் செல்வதை நோட்டமிட்ட கும்பல், காட்டூர் சுடுகாடு அருகே சென்றபோது வழிமறித்து, ஆனந்தனின் தலையை மட்டும் துண்டாக அறுத்தெடுத்திருக்கிறது. பின்னர் ஆனந்தனின் உடலோடு தலையை ஒட்டவைத்துவிட்டுச் சென்றிருக்கிறது. எதிரிகளின் தலையைத் துண்டித்துக் கொலைசெய்த ஆனந்தனும் அதே பாணியில் கொலை செய்யப்பட்டிருக்கிறான். அவனுக்கு எதிரிகள் அதிகம் என்பதால் கொலை செய்தது யார் என்பதை உடனே உறுதி செய்ய முடியவில்லை’’ என்றனர்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமாரிடம் வழக்கு குறித்துக் கேட்டபோது, “ரௌடி ஆனந்தன் மீது 14-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருக்கின்றன. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய அன்பழகன் உள்ளிட்ட நால்வர் சென்னையில் சரணடைந்திருக்கிறார்கள். அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்தால்தான், கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றார்.