சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள புல்லக்கவுண்டன்பட்டி கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவர் கேசவன். இவருக்குச் சொந்தமாக, 'இந்தியன் நேஷனல்' என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டுவருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுவருகிறது. பட்டாசு ஆலையில் சுமார் 60 அறைகளில் பட்டாசுகள் தயாரிப்புப் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல பட்டாசு தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டபோது, அதிகளவு வெப்பத்தின் காரணமாக பட்டாசு வேதிப்பொருள் வைத்திருந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் இரண்டு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கி மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மனைவி ஜெயசித்ரா(வயது 24) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வெடி விபத்து குறித்து தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸ், சாத்தூர் தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கட்டட இடிபாடுகளில் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்த தீயை ஜே.சி.பி மற்றும் தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான புகாரின்பேரில், ஆலை உரிமையாளர் கேசவன், போர்மென் முனியசாமி ஆகியோர்மீது ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இதில் போர்மென் முனியசாமி கைதுசெய்யப்பட்டார். கேரளாவில் தலைமறைவாகியிருக்கும் கேசவனைக் கைதுசெய்ய போலீஸார் விரைந்திருக்கின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த ஜெயசித்ராவின் குடும்பத்துக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாய் மற்றும் ஈமச்சடங்கு வகைக்காக 50,000 ரூபாய் பெற்று வழங்கப்பட்டிருக்கிறது" என்றனர்.