நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமாக இந்தப் பள்ளியில் படித்துவருகிறார்கள்.
இந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிலர் கடந்த இரு வாரங்களாக, தாங்கள் சார்ந்த சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் சாதிக்கயிறு கட்டியபடி பள்ளிக்கு வந்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியில் இரு பிரிவினரிடையே பகைமை ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் ஒரு மாணவனுக்கும், அவனுடன் படிக்கும் வேறு சில மாணவர்களுக்கும் இடையே கையில் கயிறு கட்டியது தொடர்பாக மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இரு பிரிவினரும் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது தனியாகச் சிக்கிக்கொண்ட ஒரு மாணவரை, மற்றொரு பிரிவினரைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டாகச் சேர்ந்து கையாலும் கற்களாலும் தாக்கியுள்ளனர். கடந்த 25-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதில் பலத்த காயமடைந்த மாணவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாதியப் பிரச்னை காரணமாக பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பள்ளக்கால் புதுக்குடி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், சாலைமறியலில் ஈடுபட்டதால் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.
பள்ளியில் மாணவர்கள் சாதிக்கயிறு கட்டுவதைக் கண்காணிக்க வேண்டிய ஆசிரியர்கள், கவனக் குறைவாகச் செயல்பட்டுள்ளனர்.சமூக ஆர்வலர்கள்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ``ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களும் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் தனித்தனி வண்ணங்களில் சாதிக்கயிறு கட்டிக்கொள்கிறார்கள். இது சாதி மோதலைத் தூண்டுகிறது. பள்ளியில் இதைக் கண்காணிக்கவேண்டிய ஆசிரியர்கள், கவனக் குறைவாகச் செயல்பட்டதால் ஒரு மாணவனின் உயிர் பறிபோயிருக்கிறது” என்று வேதனைப்பட்டார்கள்.
போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்திவருகிறார்கள். முதற்கட்டமாக மூன்று மாணவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.