விமானத்தில் கரப்பான் பூச்சி தென்படுவது வாடிக்கையான செய்தியாகிவிட்டது. இந்த நிலையில், நாக்பூரிலிருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் மறைந்திருந்த தேள் ஒன்று, செளரப் சின்ஹா என்ற பெண் பயணியைக் கொட்டிவிட்டது. இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேறு பயணிகளையும் அந்தத் தேள் கொட்டிவிடுமோ என்ற அச்சம் சக பயணிகளுக்கு ஏற்பட்டது.
விமானத்தில் தேள் கொட்டிய பெண் பயணிக்கு முதலுதவி செய்யப்பட்டது. அதோடு மும்பை விமான நிலையத்துக்கு இது தொடர்பாகத் தகவல் கொடுக்கப்பட்டு, மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

மும்பையில் விமானம் தரை இறங்கியதும் டாக்டர்கள் தேள் கொட்டிய பெண்ணுக்கு உடனடியாகச் சிகிச்சையளித்தனர். சம்பந்தப்பட்ட பயணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விமானத்துக்குள் எப்படித் தேள் வந்தது என்று தெரியவில்லை. அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் வளைகுடா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த விமானத்தில் பறவை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் அந்தப் பறவை பைலட் அறையில் இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன்பே பைலட் அந்தப் பறவையைப் பார்த்துவிட்டார். உடனே பறவை வெளியில் செல்லட்டும் என்று கருதி கதவைத் திறந்து வைத்துவிட்டு, பைலட் சிறிது நேரம் வெளியில் சென்றுவிட்டு வந்தார். 10 நிமிடங்கள் கழித்து விமானம் புறப்பட்டுச்செல்ல அனுமதிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் கோழிக்கோட்டிலிருந்து துபாய்க்குச் சென்ற சரக்கு விமானத்தில் பாம்பு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.