சின்னத்திரை நடிகை ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 14.2.2020-ல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார், சில தினங்களுக்கு முன்னர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
எஃப்.ஐ.ஆரில், ``நான் (ரம்யா – பெயர் மாற்றம்) சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் வசித்துவருகிறேன். நான் கடந்த எட்டு ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்துவருகிறேன். என்னுடைய தோழி மூலமாக சென்னை கீழ்கட்டளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் எனக்கு அறிமுகமானார். நானும் ராஜேஷும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்துவந்தோம். இரு வீட்டினர் சம்மத்துடன் 2019-ம் ஆண்டு, டிசம்பர் 1-ம் தேதி எனக்கும் ராஜேஷுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடிச் சந்தித்துப் பேசினோம். பொது இடங்களுக்கு ஜோடியாகச் சென்றோம். இந்தச் சமயத்தில் ராஜேஷ், என்னைத் தொடர்புகொண்டு நட்சத்திர விடுதி ஒன்றில் நிகழ்ச்சி நடப்பதாகக் கூறி அங்கு வரும்படி என்னை அழைத்தார். நானும் வருங்காலக் கணவர் என்ற முறையில் அங்கு சென்றேன்.

அப்போது, ராஜேஷ் என்னிடம் நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என்பதால் சந்தோஷமாக இருப்பதில் தவறில்லை என்று ஆசைவார்த்தைகளைக் கூறினார். என்னை மூளைச் சலவை செய்த ராஜேஷ், என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அதன் பின்னர் அவருடைய நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. என்னுடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். அது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, `என்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை’ என்று கூறினார். மேலும், `சந்தோஷமாக இருக்கவே திருமண நாடகத்தை நடத்தினேன்’ என்றும் தெரிவித்தார். `சந்தோஷமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு, உன் சினிமா வாழ்க்கையை அழித்துவிடுவேன்’ என்று மிரட்டினார்.
`என்னைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் பத்து லட்சம் ரூபாய் தர வேண்டும்’ என்று ராஜேஷ் கூறினார். அவருடைய மிரட்டலுக்கு பயந்து இதுவரை 2.5 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். இந்தப் பிரச்னை தொடர்பாக புகார் கொடுக்க முயன்றால், `ஆசீட் வீசி வாழ்க்கையைச் சீரழிப்பேன்’ என்றும் `லாரியை ஏற்றிக் கொலை செய்துவிடுவேன்’ என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் 28.1.2020-ல் புகார் கொடுத்தேன். அதன்பேரில் இருவரையும் அழைத்து போலீஸார் விசாரித்தனர். ஆனால், புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

ஏற்கெனவே மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஜனவரி 3-ல் தற்செயலாக என்னை அழைத்துச் சென்று சில காவலர்களின் உதவியோடு என்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிக்கொண்டார். எந்தக் காவல் நிலையம் என்றாலும் ராஜேஷ், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை மிரட்டிவருகிறார். எனக்கு எந்தவித உதவியும் செய்ய ஆளில்லாமல் நிர்க்கதியாக நிற்கிறேன். எனவே ராஜேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்படப்பட்டிருக்கிறது. புகாரின்பேரில் 28.12.2020-ல் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 376, 417, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்திருக்கின்றனர்.
ராஜேஷ், ஈவென்ட் மேலாளராகப் பணியாற்றிவருவதாக போலீஸார் தெரிவித்தனர். அவரைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. ராஜேஷ் விளக்கமளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர், அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.