மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - புதிய தொடர் - 10 - எப்படி நிகழ்ந்தது பாக்ஸர் வடிவேலுவின் மரணம்?

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

- ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

பாக்ஸர் வடிவேலு, டவர் தொகுதிகளில் உள்ள நான்காம் தொகுதியில் அடைக்கப்பட்டிருந்தார். அதில் 200 தடுப்புக் காவல் கைதிகள் சிறைவைக்கப் பட்டிருந்தனர். அது, பூங்கா நகர் ரயில் நிலையத்தை யொட்டிய பகுதியில் இருந்தது. அந்த ரயில்நிலையத் தையும் சென்னை மத்திய சிறையையும் நீண்ட சுவர்தான் பிரித்துவைத்திருந்தது. சுவரிலிருந்து 15 அடி உள்ளேதான் அந்த நான்காம் தொகுதி. அங்கு பெரியதோர் ஆலமரமும் இருந்தது. பூங்கா நகர் ரயில் நிலையத்திலிருந்து பார்த்தால் அந்த மரம் நன்றாகத் தெரியும்.

கஞ்சாவைப் பொட்டலமாக மடித்து அதை ஒரு கல்லுடன் கட்டி ரயில் நிலையத்திலிருந்து வீசினால், உள்ளே அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள பாக்ஸர் வடிவேலுவின் ஆட்கள் சரியாக அதைக் கைப்பற்றி அவரிடம் கொடுத்து விடுவார்கள். எந்த நேரத்தில் வீச வேண்டும் என்பதையெல்லாம் ஏற்கெனவே சிறையில் சம்பந்தப்பட்டவர் களைப் பார்க்க வரும்போதே பகிர்ந்துகொண்டிருப்பார்கள். பத்து நொடிப் பொழுதில் போதைப்பொருள் மறைத்து வைக்கப் பட்டுவிடும். யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

*******

சிறைக்குள் போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும் என்ற எனது முயற்சியின் காரணமாக, போதைக்கு அடிமையானவர்கள் அனைவரும் போதை மறுவாழ்வு மையத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். சிறைக்குள் போதைப்பொருள் வியாபாரம் தடுக்கப்பட்டது. போதைப் பொருள்களைக் கடத்துபவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். பாக்ஸர் வடிவேலு வும் நான்காம் தொகுதியிலிருந்து சிறை வாயிலுக்கு அருகே உள்ள பாதுகாப்புத் தொகுதிக்கு மாற்றப் பட்டார். பாதுகாப்புத் தொகுதி, ஜெயிலரின் நேரடி மேற்பார்வையில் இருந்தது.

ஜி.ராமச்சந்திரன்
ஜி.ராமச்சந்திரன்

இந்த நிலையில்தான், பாக்ஸர் வடிவேலுவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவரை வெளி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல சிறை மருத்துவர் பரிந்துரைத்தார். ‘தனியாகப் பிரித்து வைத்ததால் பொய்யான காரணங்களைச் சொல்லி வெளியே மருத்துவமனைக்குச் செல்ல பாக்ஸர் வடிவேலு முயற்சி செய்கிறார். சாதாரண வயிற்றுப்போக்குக்கு சிறை மருத்துவமனையிலேயே வைத்தியம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஜெயிலர் ஜெயக்குமார் என்னிடம் கூறினார்.

வசதிபடைத்த கைதிகளும் தாதாக்களும், பொய்யான காரணங்களைக் கூறி வெளி மருத்துவ மனைகளுக்குச் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்வதுடன், அங்கு இருந்தபடியே குற்றச் செயல்களிலும் ஈடுபடுவது உண்டு. எனவே, பாக்ஸர் வடிவேலு சிறை மருத்துவமனையிலேயே 16.11.1999 அன்று மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வடிவேலு சற்று களைப்பாக இருந்ததால், அவருக்கு ஊசி மூலம் குளூக்கோஸ் செலுத்தப்பட்டது. உடல்நிலை சற்று சீரானவுடன் சிறை மருத்துவர் தன் பணி முடித்து வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பாஸ்கர் வடிவேலுவின் உடல்நிலை, இரவு மீண்டும் மோசமடைந்தது. நள்ளிரவு 2.45 மணியளவில் பணியில் இருந்த உதவி அலுவலர் மருத்துவருக்கு தகவல் அனுப்பவே, அவரும் உடனடியாக சிறைக்கு வந்தார். பாக்ஸர் வடிவேலுவைப் பரிசோதித்த அவர், நிலைமை சற்று மோசமாக இருப்பதைக் கருத்தில்கொண்டு உயிர் காக்கும் மருந்துகளைச் செலுத்தினார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படா ததால், உடனடியாக பாக்ஸர் வடிவேலு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பாக்ஸர் வடிவேலுவைப் பரிசோதித்த அவசரப் பிரிவில் இருந்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே வடிவேலு இறந்துவிட்டதாகக் கூறினர்.

கொண்டுவரும்போதே இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனையில் இறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இறப்பு குறித்து அரசு மருத்துவ மனை காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப் பட்டது. அவரின் உடல் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவல்களையெல்லாம் அதிகாலை 5 மணிக்கு என்னிடம் போனில் சொன்னார்கள். மற்ற சிறைகளில் சிறை வளாகத்திலேயே கண்காணிப்பாளருக்கு வீடு ஒதுக்கப்பட்டிருக்கும். சென்னை மத்திய சிறையில் அந்த வசதி இல்லை. என் வீடு கீழ்ப்பாக்கத்தில் உள்ள டவர் பிளாக் என்ற இடத்தில் இருந்தது. சிறைக்கும் என் வீட்டுக்கும் சுமார் ஐந்து கி.மீ தூரம். ஓட்டுநருக்காகக் காத்திருக்காமல், நானே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

சிறை மருத்துவமனைக்குச் சென்று மருத்து வரைச் சந்தித்து ‘மரணம் எவ்வாறு நிகழ்ந்தது?’ என்பதைக் கேட்டறிந்தேன். ‘‘என்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்துவிட்டேன். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. எனவே, அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடிவு செய்தேன்’’ என்றார் சிறை மருத்துவர். ‘‘சாதாரண வயிற்றுப்போக்கு மரணத்தை விளைவித்துவிடுமா?’’ என்று நான் கேட்க, ‘‘போஸ்ட்மார்ட்டம் செய்த பிறகுதான் இறப்புக்கான உண்மைக் காரணம் தெரியும்’’ என்று அவர் கூறினார்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

சிறை மருத்துவமனையில் பாக்ஸர் வடிவேலு அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரை வெளி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வரை வடிவேலுவின் நண்பர் ஒருவரும் உடன் இருந்தார். அவரிடம் விசாரித்தபோது, ‘‘இரவு முழுவதும் வடிவேலுவை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொண்டனர். திடீரென ‘ரொம்ப முடியவில்லை’ என்று வடிவேலு கூறியவுடன், சிறை மருத்துவர் அழைக்கப்பட்டார். அவரும் ஒருசில நிமிடங்களில் வந்துவிட்டார். தச்குந்த முறையில் சிகிச்சை யளிக்கப்பட்டது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை’’ என்று என்னிடம் கூறினார். மேலும், ‘‘வடிவேலுக்கு வேறு எந்த நோயும் இல்லை. திடகாத்திரமாகத்தான் இருந்தார்’’ என்றார். இரவுப் பணியில் இருந்த சிறை அலுவலரும், மருத்துவமனையில் இருந்த மற்ற கைதிகளும் நடந்த சம்பவங்களை உறுதிப்படுத்தினர்.

அன்றைய தினம் பாக்ஸர் வடிவேலுவின் கூலிப்படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறைக்குள் இருந்ததால், அவருடைய இறப்பு ஏதாவது பிரச்னைக்கு வித்திடும் என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. கைதிகளுக்குள் எந்தப் பதற்றமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி எனக்குக் கீழுள்ள அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டு விட்டு, சிறை முழுவதும் சுற்றிப் பார்த்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு என் அலுவலகம் திரும்பினேன்.

வழக்கம்போல் காலை 6 மணிக்கு சிறைவாசிகள் அனைவரும் தொகுதிகளிலிருந்து திறந்துவிடப் பட்டனர். காலை உணவு வழங்கப்பட்டது. காலையில் விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகள், நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டிய சிறைவாசிகள் அனைவரும் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு தண்டனைக் குறைப்பு அலுவலகம் முன் அமரவைக்கப்பட்டனர்.

ஒரு நாளைக்கு 500-லிருந்து 800 பேர் வரை சென்னை மத்திய சிறையிலிருந்து நாட்டில் உள்ள சுமார் 50 நீதிமன்றங்களுக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்கப்படுவர். அவர்களது வாரன்ட்கள் படிக்கப்பட்டு, கோர்ட்டுக்கு அனுப்ப வேண்டிய கைதி இவர்தானா என சரிபார்க்கப்படும். பிறகு காலை உணவு வழங்கப்பட்டு, தண்டனைக் குறைப்பு அலுவலகம் முன் அமரவைக்கப்படுவர். ஒவ்வொரு நீதி மன்றத்துக்கும் செல்ல வேண்டிய வழிகாவலர்கள் வந்ததும், வாரன்ட் சோதனை செய்யப்பட்டு அவர்களுடன் கைதிகள் அனுப்பி வைக்கப்படுவர்.

தொகுதிகளில் மீதம் உள்ள அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டு, தொகுதிகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, சிறைக்குள் எந்தப் பிரச்னையுமில்லை என உறுதிசெய்யப்பட்டது.

பிறகு, காலை 8.30 மணியளவில் அரசு மருத்துவ மனைக்கு நான் புறப்பட்டுச் சென்று, வடிவேலுவுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளித்த மருத்துவர்களைச் சந்தித்துப் பேசினேன். ‘‘கொண்டு வரும்போதே அவர் இறந்துவிட்டார். நோயின் தன்மையால்தான் அவர் இறந்திருக்கிறார். எந்தக் காயங்களும் அவரின் உடலில் இல்லை’’ என்றனர்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

அதன் பிறகு பிணவறைக்குச் சென்று பாக்ஸர் வடிவேலுவின் உடலைப் பார்த்துவிட்டு, மருத்துவமனை காவல் நிலையம் சென்றேன். ‘‘இறந்துபோனது, காசிமேட்டைச் சேர்ந்த பிரபல தாதா. அவரின் ஊர்க்காரர்கள் மருத்துவமனைக்கு வந்து பிரச்னை ஏதும் செய்யக்கூடும். எனவே, சற்று அதிகமான காவலர்களை மருத்துவமனை பந்தோபஸ்துக்கு ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று காவலர்களிடம் சொல்லி விட்டு, என் அலுவலகம் வந்தேன்.

காசிமேடு காவல் நிலையத்துக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாக்ஸர் வடிவேலு சிறையில் இறந்த விவரத்தைக் கூறி, ‘‘அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பந்தோபஸ்து ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள்’’ என்றேன். பாக்ஸர் வடிவேலு சிறைக்குள் இறந்த விவரத்தை எழுத்துமூலம் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத் துக்குத் தெரிவித்து, ‘‘பிரேதப்பரிசோதனை விசாரணை நடத்த ஆர்.டி.ஓ-வுக்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டேன்.

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரைப் பதிவுசெய்து எஃப்.ஐ.ஆர் கொடுத்தால்தான், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் பிரேதப்பரிசோதனை விசாரணை நடத்துவார். எனவே, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளருக்கும் வடிவேலுவின் இறப்புகுறித்து கடிதம் அனுப்பப்பட்டது. இறப்பு குறித்த தகவல், என் மேலதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

*******

சிறைக்குள் எந்தப் பதற்றமும் இல்லை என்பதால், வழக்கம்போல் என் குளியலறைக்குச் சென்று குளிக்கத் தொடங்கினேன். பாதி குளிப்பதற்குள் குளியலறைக் கதவு பலமாகத் தட்டப்பட்டது. பாதி குளியலிலேயே கதவை சிறிது திறந்து, என்னவென்று அலுவலக உதவியாளரிடம் கேட்டேன். ‘‘சிறைக்குள் ஏதோ விபரீதம் நடந்துகொண்டிருக்கிறது. ஐயா உடனடியாக வர வேண்டும்’’ என்றார் பதற்றமாக. அரைகுறை குளியலுடன் சீருடை அணிந்து என் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அலுவலக மாடியிலிருந்து இறங்கினேன்.

(கதவுகள் திறக்கும்)