ஜெயில்... மதில்... திகில்! - புதிய தொடர் - 11 - நேர்மை, துணிவு, தியாகம்... ஜெயிலர் ஜெயக்குமார்!

சிறைக்குள் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் போதை வஸ்துக்கள்தான் என்பதால், அதை முற்றிலுமாக ஒழிப்பதற்கான வேலைகளைச் செய்தோம்.
துப்பாக்கியுடன் சிறையை நோக்கி நான் புறப்பட்டபோது, என் மனக்கண்ணில் முதலில் நினைவுக்கு வந்தது ஜெயிலர் ஜெயக்குமாரின் முகம்தான். பாக்ஸர் வடிவேலுவின் மரணத்துக்கு நோய் காரணமாக இருந்தாலும், அவருடைய ஆதரவாளர்கள் அனைவரின் கோபமும் ஜெயக்குமார் மீதுதான் திரும்பும் என்பதை நான் யூகித்திருந்தேன்.
ஜெயக்குமார்... பணியில் அர்ப்பணிப்புகொண்டவர், துணிச்சலானவர் பொறுப் பானவர், துறுதுறுவென இருப்பார். அவர் சோர்ந்து அமர்ந்ததை நான் பார்த்ததே இல்லை. உடலை சீராகப் பராமரிப்பார். கட்டுமஸ்தான தேகத்தைக்கொண்டவர்.
சிவகங்கை, அவருக்கு சொந்த ஊர். உதவி சிறை அலுவலராக 1985-ம் ஆண்டு சிறைத் துறையில் பதவியில் சேர்ந்தார். சேலம் சிறையில் நான் இருந்தபோது என்னுடன் பணியாற்றியவர். சென்னை மத்திய சிறையின் பொறுப்பை நான் ஏற்றபோது அதன் நிலை மோசமாக இருந்தது. கொலை, கொள்ளை, பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய இரண்டாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் சென்னை சிறையில் இருந்தனர். சிறைச்சாலை, கைதிகளின் சாம்ராஜ்ஜியமாக இருந்தது.

இந்தச் சிறையை அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமாக எனக்குத் தோன்றவில்லை. அதற்கு நேர்மையும் துணிச்சலும்மிக்க அதிகாரிகள் நிறையபேர் தேவைப்பட்டனர். அப்போது நான் பட்டியலிட்ட அதிகாரிகளில் முதல் இடத்தில் இருந்தார் ஜெயக்குமார். அப்போது அவர், பொள்ளாச்சி கிளைச் சிறையில் கண்காணிப்பாளர். நான் சிறைத்துறைத் தலைவரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னை மத்திய சிறைக்கு துணை ஜெயிலராக ஜெயக்குமார் மாற்றப்பட்டார். அப்போது அவருக்கு வயது 37 அல்லது 38 இருக்கும்.
அந்த நேரத்தில் சென்னை மத்திய சிறையின் ஜெயிலர் பதவி காலியாக இருந்ததால், அந்தப் பணியையும் அவர் சேர்த்து கவனித்துவந்தார். அதனால் அவருக்கு வேலைப்பளு அதிகமாகயிருந்தது. சிறைவாசிகள் மற்றும் காவலர்களிடம் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதுதான் ஒரு ஜெயிலரின் முக்கியக் கடமை. அதை அவர் திறம்படவே செய்தார்.
தவறு செய்யும் கைதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். கைதிகளுக்குத் துணை போகும் காவலர்கள் களையெடுக்கப் பட்டனர். ரௌடிகள் அடக்கப்பட்டனர். பயங்கரவாதிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. ஒரே மாதத்துக்குள் சிறை எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதன் காரணமாகவே ரெளடிகள் பலருக்கும் எதிரியானார் ஜெயக்குமார்.
சிறைக்குள் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் போதை வஸ்துக்கள்தான் என்பதால், அதை முற்றிலுமாக ஒழிப்பதற்கான வேலைகளைச் செய்தோம். சிறைக்குள் போதைப்பொருளைக் கடத்தும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களை மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தினோம். கஞ்சா கடத்தலில் பாக்ஸர் வடிவேலு முக்கியமானவர். அதனால், அவரை நான்காம் தொகுதியிலிருந்து மாற்றி தனது நேரடிப் பார்வையில் உள்ள பாதுகாப்புத் தொகுதிக்குக் கொண்டுவந்தார் ஜெயக்குமார். இதனால், மற்ற கைதிகளால் பாக்ஸர் வடிவேலுவைச் சந்திக்க முடியவில்லை.
ஆனால், ஜெயிலில் கடுமையாகத் தாக்கப்பட்டதால்தான் அவர் மீண்டும் நான்காம் தொகுதிக்கு அனுப்பப்படவில்லை என கைதிகள் பேசிக்கொண்டனர். உண்மையில், தனியாகப் பிரித்து வைக்கப்பட்ட அச்சத்திலேயே வடிவேலுவின் உடல்நிலை மோசமானது.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்காக அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டது. தன்னை உடனடியாக வெளி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாக்ஸர் வடிவேலு கேட்டுக்கொண்டார். அதையே சிறை மருத்துவரும் புகார் புத்தகத்தில் எழுதி, ‘இது மிகவும் அவசரம்’ என்றும் குறிப்பு எழுதினார். சில ரெளடிகள் மிரட்டினால் சிறை மருத்துவர்கள் இப்படி எழுதித் தருவது வழக்கமான ஒன்றுதான். இப்படிச் செல்லும் தாதாக்களும் ரெளடிகளும் வெளி மருத்துவ மனையில் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள்; தன்னுடைய சகாக்களை அங்கேயே சந்தித்து அடுத்தடுத்த குற்றச்சம்பவங்களையும் நடத்துவார்கள்.

வடிவேலுவுக்கு அனுமதி கேட்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் இதேபோல் ஒரு தாதாவையும் மருத்துவர் பரிந்துரையில் வெளி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தோம். அங்கே அவன் ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதியாகிவிட்டது. அதனால் இதுபோன்று கைதிகளை வெளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிறப்பு மருத்துவர்களை சிறைக்கு வரவழைத்து, சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிறைத்துறைத் தலைவர் அறிவுறுத்தியிருந்தார்.
‘இந்தக் காரணங்களால்தான் சாதாரண ஒரு வயிற்றுப்போக்குக்கு வெளி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை’ என்று வடிவேலுவுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதற்குப் பதிலாக சிறப்பு மருத்துவரை வரவழைத்து பாக்ஸர் வடிவேலுவுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தோம். சிறப்பு மருத்துவர் வருவதற்குள், அன்றிரவே வடிவேலுவின் உடல்நிலை மோசமானது. தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, அவர் இறந்துவிட்டதாகச் சொல்லிவிட்டனர்.
மறுநாள் காலையில் பாக்ஸர் வடிவேலுவின் போஸ்ட்மார்ட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, சிறைக்குள் சென்று அன்றாடப் பணிகளைப் பார்க்கத் தொடங்கினார் ஜெயிலர் ஜெயக்குமார். காலையில் சிறைத் திறப்பை மேற்பார்வையிட்டார். கைதிகளின் காலை நேர உணவைப் பரிசோதித்தார். நீதிமன்றங்களுக்கு அனுப்பவேண்டியவர்களைத் தயார்படுத்தினார். அன்றைக்கு விடுதலையாக வேண்டியவர்களைக் கணக்கிட்டு, அவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
காலை 8.30 மணி வரை எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்குப் பிறகு ஒருசில கைதிகள் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, ‘பாக்ஸர் வடிவேலுவை ஜெயிலர் ஜெயக்குமார் அடித்துக் கொன்றுவிட்டார். அவரை சும்மா விடக் கூடாது’ என்று தகவல் பரப்பி கலவரத்தைத் தூண்டினர். சில நிமிடங்கள்தான். சிறைக்குள் பரபரப்பு பற்றிக்கொண்டது. திடீரென கைதிகள் பலரும் சேர்ந்து சிறைக்காவலர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். காவலர்களிடம் இருந்த சாவிகளைப் பறித்து டவரின் 12 தொகுதிகளையும் திறந்துவிட்டனர். பெரும்பாலான கைதிகள் கூட்டமாகத் திரண்டு, சிறைக்காவலர்களைக் கொடூரமாகத் தாக்கினர். ஒரு கும்பல் ஜெயக்குமாரை வெறியோடு தேடியது.
மற்றொரு கும்பல், சிறையின் பிரதான வாயிலைத் தாக்கி சிறைக்கதவுகளை உடைத்துக்கொண்டு வெளியேறத் துடித்தது. ஒரு கும்பல் கடப்பாரையால் சிறையின் பின்புறம் உள்ள வெளிச்சுற்றுச் சுவரை உடைத்து தப்பிச் செல்ல முயன்றது. புரொஜக்டர் மற்றும் அவை சார்ந்த பொருள்களை அடித்து நொறுக்கினர். விறகு குடோனை உடைத்த கைதிகள், அங்கே மலைபோல் குவிக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டனர்.
கட்டட வேலைக்கான கடப்பாரைகள், இரும்புச்சட்டிகள், மண்வெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையையும் உடைத்தனர். அவை ஆயுதங்களாக மாறின. கைதிகளுக்கான தட்டுகள் மற்றும் குவளைகள் ஆயிரக்கணக்கில் ஓர் அறையில் அடுக்கப்பட்டிருக்கும். அவற்றையும் எடுத்துக்கொண்ட கைதிகள், அலுமினியத்தால் ஆன தட்டுகளையும் கத்தி போன்று கூரிய ஆயுதங்களாக மாற்றிக்கொண்டனர். கண்ணில்பட்ட சிறைக்காவலர்கள், மற்ற பணியாளர்கள் எல்லோரையும் கொடூரமாகத் தாக்கினர்.
நூற்றுக்கணக்கான கைதிகள், மரங்களின் மீதும் சிறைக் கட்டடங்களின் மீதும் ஏறிக்கொண்டார்கள். வெளியிலிருந்து போலீஸார் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காகவே மேலே நின்றுகொண்டு, கற்களையும் கட்டைகளையும் எறிந்து கொண்டிருந்தனர். கைதிகளைக் கண்காணிப் பதற்கு அமைக்கப்பட்டுள்ள டவருக்கு தீ வைத்து சிறைக்கு உள்ளே செல்லும் வழியையும் அடைத்துவிட்டனர்.

அவர்கள் இரண்டாயிரம் பேர். பெரும்பாலானவர்களின் கைகளில் ஆயுதங்கள். அந்த நேரத்தில் 30-லிருந்து 35 சிறைக்காவலர்கள்தான் பணியில் இருந்தனர். அதிலும் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்திருந்தார்கள். ஒருசிலர், மறைவிடங் களில் ஒளிந்துகொண்டு அங்கே நடக்கும் விஷயங்களை எங்களுக்கு வொயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துக்கொண்டிருந்தனர். ‘விருமாண்டி’ படத்தில் பார்த்திருப்பீர்களே... இதை வைத்துதான் எடுத்தார்களா எனத் தெரியவில்லை. அதுபோன்ற காட்சிகள் அங்கே நிஜத்தில் அரங்கேறிக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் டவர்கேட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார் ஜெயிலர் ஜெயக்குமார். அவரை நோக்கி பெரிய ரெளடி கும்பல் ஒன்று ஆக்ரோஷமாகச் சென்றது. அந்த நேரத்தில் காவலர்கள் யாரும் அவருடன் இல்லை. எனவே, அவர் வேகமாக நடந்து தண்டனைக் குறைப்பு அலுவலகத் துக்குள் நுழைந்தார். அங்கே நான்கைந்து காவலர்கள் இருந்தனர். ஜெயக்குமாரைத் துரத்தி வந்த கும்பல், அந்தக் காவலர்களை அடித்து துவம்சம் செய்தது. அதன் பிறகு, ஜெயிலர் ஜெயக்குமாரை கடுமையாகத் தாக்கினர். அவர் மூர்ச்சையாகி விழுந்தார்.
கலவரம் அடக்கப்பட்டு, நாங்கள் அங்கே சென்றபோது தண்டனைக் குறைப்பு அலுவலகமே எரிந்துகொண்டிருந்தது. அங்கு இருந்த காவலர்களும் தாக்குதலில் மயங்கி விழுந்திருந்தனர். விழித்தெழுந்த அவர்களுக்கு, ஜெயக்குமார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவர் எங்கோ தப்பிவிட்டார் என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம்.
தீயணைப்புத் துறை வாகனம் வந்து தீயை அணைத்து, இடிபாடுகளை அகற்றினர். அங்கே எரிந்த நிலையில் ஓர் உடல் காணப்பட்டது. அந்த உடலின் மீது தோல் பெல்ட், ஷூ, சீருடையின் கீழ்ப்பகுதி, இரு தோள்களிலும் நீல நிறத்தில் உள்ள ரிப்பன் மற்றும் தோள்பட்டை நட்சத்திரங்கள் கருகிப்போயிருந்தன. நெஞ்சில் குத்தியிருந்த பெயர்பட்டையும் அரைகுறையாக எரிந்து கிடந்தது. அதிலிருந்த பெயர்... ஜெயக்குமார்.
அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்ட மற்றொரு நபர், சிறைக்காவலர் நடராஜன்.
இந்தக் கலவரத்துக்குள் நான் எப்படி என்ட்ரி ஆனேன்... அந்தக் கலவரம் எப்படி அடக்கப்பட்டது... ஜெயக்குமார் தன் துப்பாக்கியை ஏன் பயன்படுத்தவில்லை?
(கதவுகள் திறக்கும்)