
குண்டுகள் பாய்ந்தன... ஆனால்?
கரிக்கட்டையாகக் கிடந்தது ஜெயிலர் ஜெயக்குமாரின் உடல். எந்தக் கைதிகள் போதையிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாரோ... எந்தக் கைதிகள் தனிமனித ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என நினைத்தாரோ அதே கைதிகள் அவரை உயிரோடு எரித்திருந்தார்கள்.
சிறைத் துறைக்காக, கைதிகள் நல்வாழ்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த மனிதர் ஜெயக்குமார். அவர் மூர்ச்சையாகி விழுந்த பிறகு, எங்கே அவர் மீண்டு எழுந்து வந்தால் தாக்கிய நம்மை தண்டித்து விடுவாரோ என்ற அச்சத்திலேயே அவரை தீ வைத்து எரித்துள்ளது அந்தக் கும்பல். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த சிறைக்காவலர் நடராஜனும் கைதிகள் தாக்குதலால் உயிரிழந்துவிட்டார். இரண்டு பேரை பலிவாங்கிய வரலாறு காணாத அந்தக் கலவரம், எப்படி அடக்கப்பட்டது?

சென்னை சிறைச்சாலையின் முன்வாயில்தான் பிரதான வாயில். அந்த வாயிலைத் தாண்டி உள்ளே வந்தால், நீளமான மற்றோர் இரும்பு கேட் இருக்கும். உள்ளே நுழைந்து வந்தால், முதல் தளத்தில் கண்காணிப்பாளர் அலுவலகம், சிறைச்சாலையின் இதர அலுவலகங்கள் இருக்கும். இவற்றுக்கு இடைப்பட்ட இரும்பு கேட் பூட்டப்பட்டு அங்கு ஒரு காவலர் பாராவில் இருப்பார். அதேபோல் பிரதான வாயிலிலும் துப்பாக்கி ஏந்திய ஒரு காவலர் பாராவில் இருப்பார். ஒரு கேட் திறக்கும்போது மற்றொரு கேட் பூட்டப்பட்டிருக்கும். ஒரு கேட்டைப் பூட்டிய பிறகுதான் மற்றொரு கேட்டைத் திறக்க முடியும்.
உள்கேட்டைத் தாண்டிச் சென்றால் தண்டனைக் குறைப்பு அலுவலகம், துணிக்கிடங்கு, குற்றக்காவலர்கள் தொகுதி, தியான மண்டபம், விறகுக் கிடங்கு ஆகியவை இருக்கும். அவற்றைத் தாண்டி மீண்டுமோர் இரும்பு கேட். அதைக் கடந்து சென்றால் வலதுபக்கம் 12 தொகுதிகள் இருக்கும். இடதுபுறத்தில் closed prison உள்ளது. வலதுபுறம் உள்ள 12 தொகுதிகளுக்கும் அருகே இரண்டாயிரம் பேர் அமர்வதற்கான பரந்து விரிந்த இடம் இருக்கும். அங்குதான் சிறைவாசிகளுக்கு வாரம் ஒருமுறை சினிமா காண்பிக்கப்படும். அதற்கு அருகில் புரொஜக்டர் ரூம் ஒன்றும், அதையொட்டி வொர்க் ஷாப்பும் இருந்தன.

அதற்கடுத்து சமையற்கூடம். அதன் பின்புறம் பாய்லர் ரூம். அருகிலேயே சமையற்கூடத்தில் பணிசெய்யும் கைதிகளுக்கான தொகுதி. அத்துடன் டவர் தொகுதி முடிந்தது. அதற்கு பின்னால் உள்ள கேட் வழியாகச் சென்றால் ஹாஸ்பிடல் பிளாக் இருக்கும். இடையில் உள்ள ஒவ்வொரு கேட்டும் பூட்டப்பட்டு, அனைத்து வாயில்களிலும் ஒரு காவலர் பாராவில் இருப்பார். டவர் பிளாக்கில் உள்ள 12 தொகுதிகளின் வாயில்களும் பூட்டப் பட்டிருக்கும். இதுதான் சென்னை சிறையின் அமைப்பு.
கலவரம் என தகவல் கிடைத்து, கையில் துப்பாக்கியுடன் படிக்கட்டு வழியாக நான் கீழே இறங்கும்போது கண்ட காட்சி என்னை உலுக்கிப் போட்டது. அங்கே 300-க்கும் மேற்பட்ட கைதிகள் இரும்பு கேட்டை உள்ளேயிருந்து தகர்க்க முயன்று கொண்டிருந்தனர். அதை உடைத்துவிட்டால் அங்கு உள்ள இரண்டு, மூன்று காவலர்களைத் தாக்கிவிட்டு பிரதான வாயிலைத் திறந்து எல்லா கைதிகளும் எளிதில் வெளியேறி விடலாம்.
விபரீதத்தை உணர்ந்த நான், அந்தக் கைதி களிடம் “எல்லோரும் கலைந்து சிறைக்குள் செல்லுங்கள். இல்லாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, வாயிலில் உள்ள அலாரத்தை அடிக்க ஆணை யிட்டேன். அலாரம் ஒலி கேட்டு சிறையின் பிரதான வாயிலுக்கு வெளியே இருந்த 10, 15 காவலர்கள் உள்ளே ஓடிவந்தனர். காவலர்கள் கூடுவதைப் பார்த்ததும் இரும்பு வாயிலை உடைக்க முற்பட்டவர்கள் சற்று பின்வாங்கினர். இரும்பு வாயிலைத் திறந்து அங்கு இருக்கும் காவலர்களைத் திரட்டிக்கொண்டு கலவரக்காரர்களை நோக்கி நான் முன்னே சென்றேன். ‘`உடனடியாகக் கலைந்து போகாவிட்டால் தடியடி நடத்தி கலைக்கப்படும்’’ என எச்சரித்தேன்.
ஆனால், என் எச்சரிக்கையை கலவரக்காரர்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பாக்ஸர் வடிவேலுவை நாங்கள் கொன்றுவிட்டதாகக் கத்திக்கொண்டே எங்கள்மீது கற்களை வீசினர். எங்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இனியும் பொறுத்தால் நிலைமை மேலும் கைமீறிப்போய் விடும் எனத் தோன்றியது. தடியடிக்கு உத்தர விட்டேன். தடியடி நடத்தப்பட்டது. இரும்பு வாயிலின் முன் இருந்த 300-க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள், அடுத்த உள்வாயிலை நோக்கிச் சென்றனர்.

இரும்பு வாயிலுக்கும் அடுத்த உள்வாயிலுக்கும் இடையில் நான்கு பாதுகாப்புத் தொகுதிகள் இருந்தன. அவற்றில்தான் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்புத் தொகுதிக்கு முன்புறம் உணவுக்கிடங்கு இருந்தது. ஏற்கெனவே காவலர்கள் சிலரைத் தாக்கி சாவிகளைக் கைப்பற்றி யிருந்த கலவரக்காரர்கள், பாதுகாப்புத் தொகுதி அனைத்தையும் திறந்து விட்டனர். அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்ததை கவனித்தேன். திறந்து விடப்பட்ட பாதுகாப்புத் தொகுதியில் இருந்த பயங்கரவாதிகள் எவருமே ஏனோ கலவரக்காரர் களுடன் சேரவில்லை. தங்கள் இடத்தைவிட்டு அவர்கள் நகரவேயில்லை.
கலவரக்காரர்கள், உணவுக் கிடங்கில் புகுந்து அங்கு உள்ள பொருள்களைக் கொள்ளையடித் தனர். ஜெயிலர் ஜெயக்குமார் அலுவலகமும் உணவுக்கிடங்கின் அருகில்தான் இருந்தது. அங்கு சென்ற அந்தக் கும்பல், அலுவலகத்தில் அவர் இல்லாததைக் கண்டு ஆத்திர மடைந்து, அங்கு இருந்த பொருள்களைக் கொள்ளையடித்தது. தனது மேஜை டிராயரில் துப்பாக்கியை வைத்துப் பூட்டிவிட்டு ரவுண்ட்ஸ் சென்றிருக் கிறார் ஜெயக்குமார். டிராயரை உடைத்து, துப்பாக்கியை கவிக்கோ என்கிற சிறைவாசி எடுத்துக்கொண்டு ஓடினான்.
இரும்பு கேட்டின் முன் கலவரத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளை தடியடி நடத்தி, இரண்டாவது உள் கேட்டுக்கு நான் விரட்டிச் சென்றேன். அதைத் தாண்டி ஓடிய கைதிகள், திடீரென திரும்பி எங்கள்மீது கற்களை எறியத் துவங்கினர்.
இந்தச் சூழலில் கைதிகள் சிலர் நேர்மையுடன் நடந்துகொண்டதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு ஓடினான் அல்லவா கவிக்கோ... ஜெயிலர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மற்றொரு கைதி அவனைத் துரத்திச் சென்று துப்பாக்கி யைப் பறித்து வாயிலில் உள்ள கேட் கீப்பரிடம் கொடுத்துவிட்டான்.
அவன் மட்டும் அதைச் செய்யாமல் அந்தத் துப்பாக்கி கைதிகளிடம் கிடைத்திருந்தால், எங்கள் தரப்பில் சாவு எண்ணிக்கை அதிகரித் திருக்கும். மற்றொரு கைதி, தண்டனைக் குறைப்பு அலுவல கத்தில் அடிபட்டுக் கிடந்த நான்கு காவலர்களையும் இழுத்து வராண்டாவில் போட்டுவிட்டான். இல்லாவிட்டால், அவர்கள் நால்வரும் ஜெயக்குமாரு டன் சேர்த்து உயிருடன் எரிக்கப்பட்டிருப்பார்கள். ஒருசில நல்ல கைதிகள், சிறை நிர்வாகத்துக்குத் துணையாக இருந்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
இரும்பு கேட்டின் முன் கலவரத்தில் ஈடுபட்டி ருந்த கைதிகளை, தடியடி நடத்தி இரண்டாவது உள்கேட்டுக்கு நான் விரட்டிச் சென்றேன். அதைத் தாண்டி ஓடிய கைதிகள், திடீரென திரும்பி எங்கள்மீது கற்களை எறியத் தொடங்கினர். 12 தொகுதிகளிலிருந்தும் வெளியில் வந்த கைதிகளும், கலவரக்காரர்களுடன் சேர்ந்து எங்கள்மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். எங்களைத் துரத்திக்கொண்டு பிரதான வாயிலுக்கு முன்னேற முயன்றனர். ‘துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்’ என்று அவர்களை எச்சரித்தேன்.
என் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்னேறவே, ஒருசில குண்டுகளை வானத்தை நோக்கிச் சுட்டேன். மொத்தக் கூட்டமும் பயப்படாமல் பாய்ந்து வந்தது. வேறு வழியின்றி, கூட்டத்தைப் பார்த்து பத்து குண்டுகளை இடை விடாமல் சுட்டேன். மூன்று கைதிகள் அங்கேயே சுருண்டு விழுந்தனர். ஒருசிலர் குண்டடிப்பட்டு தொகுதிகளை நோக்கி ஓடினர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த கலவரக்காரர்கள், மீண்டும் உக்கிரமாகி கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு எங்களைத் தாக்க ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் என்னிடம் உள்ள காவலர்களை வைத்துக்கொண்டு கலவரத்தை ஒடுக்க முடியாது என எனக்குத் தெரிந்துவிட்டது. போலீஸின் உதவியை நாட தீர்மானித்தேன்.
என்னுடன் வந்த காவலர்களிடம், கார்டு ரூமில் இருந்த துப்பாக்கிகளை எடுத்துவரச் சொன்னேன். பிளாங்க் தோட்டாக்கள் என்னும் வெற்றுத் தோட்டாக்களைக் கொடுத்து, சுட்டுக் கொண்டிருக்கச் சொன்னேன். அதற்கு மேலும் கூட்டம் முன்னேறி வந்தால், ‘பக்ஷாட்’ (buckshot) குண்டுகளை உபயோகப்படுத்தச் சொன்னேன்.
எங்களிடம் இருந்த துப்பாக்கிகள், 410 மஸ்கட் ரகத்தைச் சேர்ந்தவை. அவற்றில் பிளாங்க் (Blank), பக்ஷாட் (Buckshot), பால் ஆமினேஷன் (Ball amination) ஆகிய மூன்று வகையான குண்டுகளைப் பயன்படுத்தலாம். பிளாங்க் குண்டு வெறும் வெத்து வேட்டு; எந்தத் தீங்கும் செய்யாது; எதிராளிகளை பயமுறுத்தும். பக்ஷாட் குண்டுகளால் சுட்டால் எதிரிக்கு காயங்கள் ஏற்படும். ஆனால், இறந்துவிட மாட்டார்கள். பால் ஆமினேஷன் குண்டுகளால் சுட்டால் எதிரி இறப்பது உறுதி.
எனவேதான் முதலில் வெத்துவேட்டு குண்டு களும், பிறகு பக்ஷாட் குண்டுகளும், அதன் பிறகு தவிர்க்க முடியாமல் தேவைப்பட்டால் பால் ஆமினேஷன் குண்டுகளையும் பயன்படுத்த வேண்டும் என உத்தரவு கொடுத்து, கூடுதல் கண்காணிப்பாளரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, என் அலுவலகத்துக்கு ஓடினேன். அங்கு இருந்த ஹாட்லைன் மூலம் போலீஸ் கமிஷனர் அலுவலக கன்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டேன். சிறைக்குள் நடக்கும் பெரும் கலவரத்தை அடக்க, உடனடியாக போலீஸ் உதவி தேவைப்படுவதாகக் கூறினேன்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து முக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. அப்போது பணியில் இருந்த இணை கமிஷனர் இளங்கோவன், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், அண்ணாநகர் துணை கமிஷனர் சிவனாண்டி, மோட்டார் வாகனப் பராமரிப்பு துணை கமிஷனர் ஜெஸ்பர் சிங் ராஜா ஆகியோர் 80-க்கும் மேற்பட்ட காவலர்களைத் திரட்டிக்கொண்டு மத்திய சிறையை நோக்கி விரைந்து வந்தனர். அதிரடிப்படையினரும் அவர்களுடன் இருந்தனர்.
அதற்குள் ஒரு கும்பல், காஸ் சிலிண்டர்களைப் பற்றவைப்பதற்காக உள்ளே ஓடியது!
(கதவுகள் திறக்கும்)