சமூகம்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 13 - போர்க்களமானது சிறை... வென்றது போலீஸ் படை!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

புதிய தொடர்

எப்படியும் வெளியிலிருந்து போலீஸ் படையை வரவழைப்பார்கள் என்பதை, கலவரக்காரர்கள் யூகித்திருந்தார்கள். அதனால் சிறை வாயிலிலேயே போலீஸ் மீது தாக்குதலை நடத்த திட்டமிட்டார்கள். சிறைக் கட்டடங்கள், மரங்கள்மீது ஏறினார்கள். ஓடுகளைப் பிரித்தும் கற்களைக் குவித்தும் சிறைக்கு வரும் வாகனங்கள்மீது வெறிகொண்டு வீசினார்கள்.

சிறைத்துறை துணைத்தலைவர் விஜய நாராயணனின் கார் கண்ணாடி நொறுங்கியது. முன் சீட்டில் அமர்ந்திருந்த அவருடைய முகத்தில் கண்ணாடித் துகள்கள் தெறித்தன. நல்லவேளையாக பெரிய காயம் எதுவும் இல்லை. கல்வீச்சால் போலீஸ் வாகனங்கள் எதுவும் சிறை அருகே நெருங்க முடியவில்லை. அவை பாலத்தின் மேலே நிறுத்தப்பட்டன. பாலத்துக்குக் கீழே உள்ள வழியாக போலீஸார் சிறை வாயிலுக்கு வந்தார்கள்.

பிரதான வாயிலுக்கு வந்து நான் அவர்களைச் சந்தித்தேன். ‘சிறையில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை போலீஸார் ஏற்க வேண்டும்’ என்ற கடிதத்தை இணை கமிஷனரிடம் ஒப்படைத்தேன். வந்திருந்த போலீஸ் அதிகாரிகளிடம் சிறையின் அமைப்பு, கலவரம் தொடங்கியது எப்படி, எங்கெல்லாம் கலவரக்காரர்கள் ஒளிந்திருந்து தாக்குகிறார்கள் என விளக்கினேன். கடப்பாரை, கம்பி, கூர்மையாக மடிக்கப்பட்ட அலுமினியத் தட்டுகள், குவளைகள், இரும்புத் தகடுகள், அரிவாள் போன்றவற்றை கைதிகள் வைத்திருப்பதால் தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் எந்த மாதிரியான விபரீதங்கள் ஏற்படும் என்பதையும் தெளிவாக விளக்கினேன்.

கலவரக்காரர்கள் முன் கேட் வழியாக வர முடியாதபடி சிறைக்காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் பின்பக்க சுற்றுச்சுவரை உடைக்கத் தொடங்கினார்கள். அதை உடைத்து விட்டால் அனைத்துக் கைதிகளும் தப்பிவிடுவார் கள். இதை பதற்றத்துடன் போலீஸ் அதிகாரிகளிடம் விவரித்தேன். கூடவே ஜெயக்குமார் உள்ளே சிக்கிக்கொண்டிருப்பதையும் கைதிகள் சிலருக்கு அவர் மீதான கோபத்தையும் விவரித்தேன்.

இப்போதுபோல் கண்காணிப்பு கேமராக்கள் அப்போது கிடையாது. நான் இப்படி விளக்கமாகச் சொன்னால்தான் அவர்களுக்குப் புரியும். நான் சொன்னதை வைத்து, உள்ளிருக்கும் உக்கிரத்தையும் அசாதாரணமான சூழ்நிலை யையும் போலீஸ் அதிகாரிகள் உணர்ந்து கொண்டனர். கலவரத்தை எப்படி அடக்குவது, எந்த மாதிரியான வியூகம் அமைப்பது என்பதை விவாதித்தோம்.

நான்கு விஷயங்கள் முடிவுசெய்யப்பட்டன. ஒன்று, தண்டனைக் குறைப்பு அலுவலகத்தில் அகப்பட்டுள்ள காவலர்களையும் ஜெயிலரையும் காப்பாற்றுவது. இரண்டாவது, ஜெயிலின் மற்ற பகுதிகளில் சிக்கியுள்ள 15-க்கும் மேற்பட்ட காவலர்களைக் காப்பாற்றுவது. மூன்றாவது, கலவரக்காரர்கள் ஜெயிலை தீயிட்டுக் கொளுத் துவதைத் தடுப்பது. நான்காவது, சிறை ஆவணங்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது. அதன்படி, நான்கு குழுக்களாகப் பிரிந்து செல்ல முடிவெடுத்தோம். ஒவ்வொரு குழுவிலும் 20 காவலர்கள் இடம்பெற்றார்கள்.

ஜெயில்... மதில்... திகில்!  - 13 -  போர்க்களமானது சிறை... வென்றது போலீஸ் படை!

முடிந்தவரை துப்பாக்கிச்சூடு நடத்தாமல், கைதிகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் கலவரத்தை அடக்க வேண்டும் எனத் திட்ட மிட்டோம். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், அண்ணாநகர் துணை கமிஷனர் சிவனாண்டி, மோட்டார் வாகனப் பராமரிப்பு துணை கமிஷனர் ஜெஸ்பர் சிங் ராஜா ஆகியோர் தலைமையில் மூன்று குழுக்களும் என்னுடைய தலைமையில் ஒரு குழுவும் உள்ளே செல்வது என முடிவெடுத்தோம்.

சிறை வளாகமே போர்க்களமாக மாறி இருந்தது. உள்ளே இரண்டாயிரம் பேர் கொண்ட பெரும் படை ஆக்ரோஷமாக வெறித்தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தது. நாங்களோ சிறு படை. `எதையும் எதிர்கொள்வோம்’ என்ற துணிச்சலுடன் உள்ளே நுழைந்தோம். துணை கமிஷனர் ஜெஸ்பர் தலைமையிலான குழு, கட்டடம்மீது ஏறி அங்கு இருந்த கலவரக்காரர்களை கீழே இறங்கும்படி எச்சரித்தது. மூர்க்கத்தின் உச்சியிலிருந்த கும்பல் அதைப் பொருட்படுத்தவில்லை.

அவர்களைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே நாங்கள் சிறைக்குள் செல்ல முடியும். உள்ளே சிக்கியிருக்கும் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை
ஜெயில்... மதில்... திகில்!  - 13 -  போர்க்களமானது சிறை... வென்றது போலீஸ் படை!

இதனால், கட்டடங்களின் மேலே இருந்த கைதிகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது. கட்டடம் மற்றும் மரங்களின் மீது இருந்த கைதிகள் தொப் தொப்பெனக் குதித்து, தொகுதிகளுக்குள் ஓடி ஒளிந்தார்கள். பலருக்கு கீழே குதித்ததில் எலும்புகள் முறிந்தன. நான்கு போலீஸ் குழுக்களும் உள்ளே நுழைந்து முன்னேறின.

தண்டனைக் குறைப்பு அலுவலகத்தின் முன் நின்றிருந்த நூற்றுக்கணக்கான கலவரக்காரர்களை கலைந்து செல்லும்படி ஒலிபெருக்கியில் எச்சரித்தார் துணை கமிஷனர் பாலசுப்ரமணியம். கூட்டம் கலையவில்லை. `தடியடி நடத்தப்படும்’ என்றார். அதற்கும் அஞ்சாமல் போலீஸார் மீது எதிர்தாக்குதல் நடத்தியது அந்தக் கும்பல். அதனால் அந்தக் கும்பலின்மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. அப்போதும் அசராமல் தாக்குதலைத் தொடர்ந்தார்கள். இதனால், தடியடி நடத்தினோம். அதிக எண்ணிக்கையிலான கலவரக்காரர்கள் எங்களை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு உக்கிரமாகத் தாக்கத் தொடங்கினார்கள்.

‘எல்லோரும் கலைந்து செல்லுங்கள்; இல்லா விட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்’ என்று இறுதி எச்சரிக்கை கொடுத்தார் பாலசுப்ரமணியம். அதற்கும் அந்தக் கூட்டம் அஞ்சாமல் போலீஸார் மீது ஆவேசமாகப் பாய்ந்தது. வேறு வழியின்றி சுட ஆரம்பித்தது போலீஸ் படை. கலவரக்காரர்கள் நான்கு பேர் சுருண்டு விழுந்தனர். கூட்டம் பின்னால் ஓடத் தொடங்கியது. அதன் பிறகே தண்டனைக் குறைப்பு அலுவலகத்தை நெருங்க முடிந்தது.

அந்த அலுவலகம் பாதிக்கும்மேல் எரிந்து கிடந்தது. வாசலில் நான்கு காவலர்கள் மூர்ச்சை யாகிக் கிடந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அப்போ தெல்லாம் ஜெயிலர் ஜெயக்குமார் எங்கே இருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை.

தீயின் உக்கிரம் மேல்தளத் தையும் பற்றிக் கொண்டதில் மேல்தளம் இடிந்து விழத் தொடங்கியது. புகை சூழ்ந்தது அந்த இடம். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப் பட்டன. நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத் தார்கள். அதற்குள் மற்றொரு கும்பல், டவர் பிளாக்கைத் தீயிட்டுக் கொளுத்தியது. அங்கு இருந்த மேஜை, நாற்காலிகள், ஆவணங்கள் அனைத்தையும் எரித்தார்கள்.

நாங்கள் வாயிலைத் தாண்டி தொகுதிக்குள் போக முடியவில்லை. தீயணைப்புத் துறையினர் அங்கே சென்று தீயை அணைத்த பிறகே சிவனாண்டி தலைமையிலான குழு அங்கே நுழைய முடிந்தது. சலவைக்கூடத்தில் ஐந்து காவலர்கள் சிக்கிக் கொண் டிருந்தார்கள். கலவரக்காரர் கள் அவர்களைத் தாக்க முற்பட்டனர். கடைசி நேரத்தில் உள்ளே புகுந்து ஐந்து காவலர் களையும் மீட்டது குழு.

அங்கிருந்து பின்வாங்கிய கூட்டம் எங்கள்மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதுடன், சமையற்கூடத்தில் உள்ள எரிவாயுக் கொதிகலனுக்கு தீ வைத்து கொளுத்தப்போவதாகவும் எச்சரித்தது. பிரமாண்டமான காஸ் சிலிண்டர்கள்கொண்ட அமைப்பு அது.

அப்படி தீ வைத்தால் பெருவெடிப்பு ஏற்படும். நூற்றுக்கும் அதிகமானோர் தீக்கு இரையாவார்கள். ஒரு நிமிடம் நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அடுத்த நிமிடமே கொதிகலன் நோக்கிச் சென்ற கலவரக்காரர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினோம். கைதிகள் பலர் சுருண்டு விழுந்தனர். பலர் தொகுதிகளுக்குள் அடைக்கலம் புகுந்தனர். அத்தனை தொகுதிகளும் உடனே பூட்டப்பட்டன.

ஜெயில்... மதில்... திகில்!  - 13 -  போர்க்களமானது சிறை... வென்றது போலீஸ் படை!

கலவரத்தை தலைமையேற்று நடத்திய கைதிகள் வெள்ளை ரவி, குணா, கருணா, திருவள்ளூர் விஜி உட்பட 200-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பலருக்கு கை, கால்களில் குண்டுகள் பாய்ந்திருந்தன. காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

சிறை வளாகத்தில் ஆங்காங்கே கைதிகளின் உடல்கள் கிடந்தன. சம்பவ இடத்திலேயே 11 கைதிகள் இறந்துவிட்டார்கள். மருத்துவ மனையில் இரண்டு கைதிகள் இறந்துபோனார்கள். சிறைத்துறை தரப்பில் ஜெயிலர் ஜெயக்குமார், சிறைக்காவலர் நடராஜன் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். போலீஸ் தரப்பிலும் பலருக்கும் கடுமையான காயங்கள். போர் முடிந்த களமாகக் காட்சியளித்தது சிறை வளாகம்.

1999 நவம்பர் 17-ம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்குள் இத்தனையும் நடந்து முடிந்து, பேரமைதியில் மூழ்கியிருந்தது சென்னை மத்திய சிறை வளாகம். அப்போது சட்டசபை நடந்துகொண்டிருந்தது. தகவலறிந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா, உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சென்னை மாநகர காவல் ஆணையர் காளிமுத்து மற்றும் அதிகாரிகள் பலரும் சிறைக்கு வந்துவிட்டனர்.

எனக்கு உடல் முழுவதும் காயங்கள்; அதைவிட ஆழமாகயிருந்தது மனக்காயம். எனது பணிக்காலத்தில் இப்படி ஒரு கலவரம் நடந்து இத்தனை உயிர்கள் பலியாகிவிட்டனவே என, என் மனம் வேதனையில் குமுறியது. எல்லாவற்றையும்விட நேர்மையும் துணிச்சலும்கொண்ட ஜெயிலர் ஜெயக்குமார் உயிருடன் எரிக்கப்பட்டதை நினைத்தபோது, நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. உடைந்து அழவும் வழியில்லை.

எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டேன். கலவரத்தின் காட்சிகளை, அந்தந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கினேன். அவர்கள் கிளம்பிவிட்டார்கள். மனமெல்லாம் வலியுடன் என் அறையை நோக்கி நான் சென்ற போதுதான் அந்த அழைப்பு வந்தது. அழைத்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி!

(கதவுகள் திறக்கும்)