ஜெயில்... மதில்... திகில்! - 14 - கலவரம்... பேட்டிகொடுத்த ஜெயலலிதா... கனிவுகாட்டிய கருணாநிதி!

சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, சிப்பாய்க்கலகம் போன்றவையெல்லாம் சிறையில் இருந்து தொடங்கியவைதான்.
கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கலவரத்தைத் தூண்டிய கைதிகள் அடையாளம் காணப்பட்டனர். கைதிகளில் இறந்தவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தவிர்த்து, மீதம் உள்ள கைதிகளின் எண்ணிக்கை துல்லியமாக இருந்தது. ஒருவரும் தப்பிச் செல்லவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
கைதிகள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் பூட்டப்பட்டனர். தடியடியிலும் துப்பாக்கிச்சூட்டிலும் காயம்பட்ட கைதிகள் அனைவரும் டவர் பிளாக் முன் இருக்கும் மைதானத்துக்குக் கொண்டுவரப் பட்டனர். காயம்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட கலவரக் காரர்கள், உடலெங்கும் காயத்துடன் ரத்தம் சிந்திக்கொண்டிருந்தனர்.
அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இறந்தவர் களின் உடல்களும் அதே மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. கலவரத்தில் காயம்பட்ட காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தன. சைரன் சத்தம் நிற்கவேயில்லை.

கலவரம் நடந்தபோது சட்டமன்றமும் நடந்து கொண்டிருந்தது என்பதால், பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது. தகவல் அறிந்து சிறைக்காவலர்கள், கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள் என சிறைக்கு முன்பாக ஏராளமானோர் குவியத் தொடங்கினர். அப்போதெல்லாம் அலைபேசி களும் தொலைக்காட்சி நியூஸ் சேனல்களும் பெரிதாக இல்லையே. இதனால், விவரம் அறிவதற்காகக் குவியும் கூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. வெளியிலும் பதற்றம் அதிகமானது. சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும் தகவல் அறிந்து, ஜெயலலிதா உஷ்ணமானார்.
சிறைச்சாலைதான் தவறு இழைத்தவர்களைத் திருத்தும் இடம். சட்டமும் நீதியும் இங்கே உயிர்ப்புடன் இருப்பதற்கு அடையாளமாகத்தான் அனைத்து சிறைச்சாலைகளிலும் தினமும் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. சிறைச்சாலை உடைக்கப்பட்டால் சட்டம் - ஒழுங்கு சடலமாகி விட்டது என்றுதான் அர்த்தம்.
சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, சிப்பாய்க்கலகம் போன்றவையெல்லாம் சிறையில் இருந்து தொடங்கியவைதான். ஆனால், அவையெல் லாம் அடக்குமுறைக்கும் பாசிசத்துக்கும் எதிராக அமைந்தன. ஆனால், ஜனநாயக நாட்டில் தற்போதுள்ள சிறைகள் தகர்க்கப்படுவது சட்டம் - ஒழுங்கையும் மக்கள் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கும் விஷயம்.
அதிலும் சென்னை சிறைக்கலவரத்தின்போது சிறையில் அடைபட்டு இருந்தவர்களில் கணிசமானோர் கொடும் குற்றவாளிகள். தொடர் குற்றங்களைச் செய்து மக்களை அச்சுறுத்திவந்த ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தப்பியிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை கற்பனைகூட செய்ய முடியவில்லை.
அதைத் தடுப்பதற்காகத்தான் இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை நான் எடுக்க வேண்டியிருந்தது. நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஜெயிலர் ஜெயக்குமார் தன் உயிரைக் கொடுத்திருக்கிறார். சிறைக்காவலர் நடராஜன் கொல்லப்பட்டிருக்கிறார். ஏராளமான போலீஸார் காயமடைந்துள்ளனர். 13 கைதிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
சிறையில் இத்தனை உயிர்கள் பலியானதை நினைத்தபோது துயரம் நெஞ்சை அடைத்தது. ஆனாலும், ஒரு கைதியைக்கூட தப்பவிடாமல் தடுத்ததில் எனக்குள் சிறு நிம்மதி. ஒருவேளை இரண்டாயிரம் கைதிகளும் தப்பியிருந்தால் ஏதேதோ நடந்திருக்கும். ஆட்சிக்கே ஆபத்தாகவும் முடிந்திருக்கும். அது நடக்கவில்லை. ஆனால், வெளியே பரவிய செய்தி வேறுமாதிரியாக இருந்தது.
அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ‘நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிவிட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது’ என்று பேட்டி யளித்தார். இப்படியான இக்கட்டான சூழலில் தான், ‘கோட்டைக்கு வந்து முதல்வரை சந்திக்கவும்’ என்று அன்றைய முதல்வர் கருணாநிதி அலுவலகத்திலிருந்து எனக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு வந்திருந்தது.
முதலில் அதிர்ச்சி ஏற்பட்டாலும் ஒரு கைதியையும் தப்பவிடாமல் தடுத்து, கடமையை சரியாகச் செய்திருக்கிறோம் என்கிற உணர்வு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை என்று தலைமைச் செயலகத்துக்குப் புறப்பட்டேன்.

கலவரம் பற்றிக் கேள்விப்பட்டதுமே சிறைத் துறை அமைச்சர் ஆலடி அருணா, உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சிறைத்துறைத் தலைவர் கே.வி.எஸ்.மூர்த்தி, சிறைத்துறை துணைத் தலைவர்கள் விஜய நாராயணன், ஜெயராஜ், மாநகர காவல் ஆணையர் காளிமுத்து உள்ளிட்ட பலரும் சிறைக்கு வந்து நேரிலேயே எல்லாவற்றையும் விசாரித்துத் திரும்பிவிட்டனர். அவர்கள் முதல் வரிடம் எல்லாவற்றையும் விளக்கி இருப்பார்கள். ஆனால், என்னிடம் அதைப் பற்றி நேரில் விசாரிக்க விரும்பியிருக்கிறார் முதல்வர்.
முதல்வரின் அறைக்குள் நான் சென்றபோது சிறைக்கு வந்திருந்த அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் இருந்தனர். அன்றைக்கு சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராச்சாமியும் அங்கு இருந்தார். முதல்வரிடம் இயல்பான புன்னகை இல்லை. சற்று கடுமையாகவே பேசத் தொடங்கினார். ‘கலவரம் எப்படி ஏற்பட்டது, எத்தனை பேர் கலவரத்தில் தப்பிச் சென்றார்கள், எத்தனை பேர் இறந்துபோனார்கள், கலவரம் கட்டுக்குள் வந்துவிட்டதா, துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியம் என்ன, அதை ஏன் தவிர்க்கவில்லை?’ என்றெல்லாம் வரிசையாக கேள்விகளால் துளைத்தார்.
பாக்ஸர் வடிவேலு நெஞ்சுவலியால் இறந்துபோனதையும், அவரை ஜெயிலர் அடித்துக் கொன்றுவிட்டதாகப் பரவிய வதந்தியால்தான் கலவரம் ஏற்பட்டது என்பதையும் விளக்கினேன். கலவரம் தொடங்கியவிதம், சிறைக்காவலர் களை அடித்து நொறுக்கியது, சிறையை தீக்கிரையாக்கியது, ஜெயிலரை எரித்தது, சிறைக்காவலர் ஒருவரை அடித்துக் கொன்றது, சிறையின் சுற்றுச்சுவரை உடைத்துத் தப்பிச் செல்ல முயற்சி செய்தது என எல்லாவற்றையும் விரிவாக விளக்கினேன். பிறகு, வேறு வழியின்றியே துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது என்றும் விளக்கினேன்.
`‘நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்று விட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனரே, உண்மையா?’’ என்று கேட்டார். `‘இல்லவே இல்லை’’ என்றேன் நான். இறுதியில் மென் புன்னகையுடன் ‘`உன்னை நம்புகிறேன்’’ என்றார். அப்போதுதான் என் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துகொண்டிருந்ததையும் அவர் கவனித்தார். அருகில் இருந்த ஆற்காடு வீராச்சாமியிடம், ‘`இவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினார். எரித்துக் கொல்லப்பட்ட ஜெயக்குமாரைப் பற்றி விரிவாக விசாரித்தார்.

நான் கிளம்ப எத்தனித்தேன். மீண்டும் ஒரு முறை என்னை ஊடுருவிப் பார்த்தவர், `‘கைதிகள் யாரும் தப்பிச் செல்லவில்லையே?’’ என்று அழுத்தமாகக் கேட்டார். நான் அதைவிட அழுத்தமாக, ‘‘இல்லவே இல்லை. மொத்த கைதி களையும் கணக்கெடுத்து யாரும் தப்பிச் செல்லவில்லை எனத் தெரிந்த பிறகே சிறையிலிருந்து வெளியே வந்தேன்’’ என்றேன்.`‘சரி... சரி... மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்’’ என்று கனிவுடன் கூறினார்.
‘வரலாறு காணாத அசம்பாவிதம் நடந்துவிட்டது. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று எதிர்க்கட்சி யினர் குற்றம்சாட்டினார்கள். அத்தனைக் கும் நீதான் பொறுப்பு... உன்னை டிஸ்மிஸ் செய்கிறேன்’ என்று கூறுவார் என எதிர்பார்த்தேன். மாறாக அவர் என்மீது காட்டிய பரிவு என்னை மிகவும் நெகிழச் செய்தது.
‘கலைஞர் பல தோல்விகளையும் துயரங்களையும் கடந்துவந்தவர். எத்தகைய சூழ்நிலையிலும் பதற்றம் கொள்ளாதவர்’ என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அன்றைக்குத் தான் அதை நேரில் பார்த்தேன். மாநிலமே பதற்றமான சூழலில் இருக்கும் போது, உண்மை நிலையை உள்வாங்கிக் கொண்டு பதற்றமின்றி எதிர்கொண்ட ஆளுமையைப் பார்த்து வியந்தேன்.
மறுநாள் சட்டசபை கூடியது. எதிர்க் கட்சிகள் ஒரு போருக்குத் தயாராக இருந்தன. அன்றிரவுக்குள் விரிவான அறிக்கையை தயார்செய்திருந்தது அரசு. கலவரம் ஏன் ஏற்பட்டது, துப்பாக்கிச்சூடு ஏன் அவசியமானது என்பதைப் பற்றிய அந்த அறிக்கையை, சட்டசபையில் வாசித்தார் கருணாநிதி. ஒரு கைதிகூட தப்பிச் செல்லவில்லை என்பதை உறுதியாக உரக்கக் கூறினார்.
அதன் பிறகும் எதிர்க்கட்சியினர் எதிர்க்குரல் எழுப்பினார்கள். அப்போது, ‘இதுதொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக் கிறேன். அவர் விசாரணை அறிக்கை அளித்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சட்டசபையில் கூறியபடி உயர் நீதிமன்ற நீதிபதி டேவிட் கிறிஸ்டியன் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப் பட்டது. விசாரணை கமிஷன் ஒரு வருடக்காலம் கலவரம் சம்பந்தமாக விசாரணை நடத்தியது.
விசாரணை் கமிஷன் என்ன சொன்னது? அது யாருக்குமே தெரியாது. விகடன் வாசகர்களுக்காக அடுத்த இதழில் அதை விளக்குகிறேன்.
(கதவுகள் திறக்கும்)