மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 15 - தொலைந்தது தோட்டாக்கள் மட்டுமல்ல... தூக்கமும்தான்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை இவையே குற்றவியல் நீதி பரிபாலனத்தின் மூன்று நிலைகளாகும். இதில் கடைநிலை சிறைத் துறை என்பதால், சிறைத்துறைக் கண்காணிப்பாளருக்கு நீதிபதிக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு விளக்கம் சொல்லிவிட்டேன். விசாரணை கமிஷனை நியமித்து முதல்வரும் பதற்றத்தைத் தணித்துவிட்டார். அந்த கமிஷன் விசாரித்து அறிக்கை எப்போது தருமோ, எப்படித் தருமோ... அதைப் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை. ஆனால், கலவரம் நடந்த நாளிலிருந்து பல நாள்களுக்கு என் தூக்கம் தொலைந்துவிட்டது. காரணம், அந்த 10 தோட்டாக்கள்!

கலவரத்தை அடக்கிவிட்டு நான் வந்து அமர்ந்தபோது, என் உடலில் பல இடங்களில் காயங்கள். ஆங்காங்கே ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. துப்பாக்கி உறையின் மீதும் ரத்தப் பிசுபிசுப்பு. துப்பாக்கியை எடுத்துப் பார்த்தேன். கலவரத்துக்கு முன்பாக அதில் 10 தோட்டாக்கள் இருந்தன. இப்போது ஒன்றுகூட இல்லை. எத்தனை தோட்டாக்கள் எந்தெந்த உயிர்களை பலி வாங்கின எனத் தெரிய வில்லை. அந்த எண்ணமே என்னை பல நாள்கள் தூங்கவிடவில்லை. அதுவரை சிறைச்சாலை பற்றி எனக்குள் இருந்த கற்பிதம், பார்வை எல்லாமே மாறிப்போயின.

இந்தியாவில் சிறைச்சாலை என்கிற அமைப்பு, மன்னர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறது. பழைய கோட்டைக் கொத்தளங்கள் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன. தற்போதுள்ள சிறைச்சாலைக் கட்டமைப்பை உருவாக்கியது பிரிட்டிஷார்தான். இப்போது தமிழகத்தில் இருக்கும் மத்திய சிறைச்சாலைகள் அனைத்தும் 170 ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை - புழல் சிறையைத் தவிர.

இந்தியாவில் முதன்முதலாக 1837-ம் ஆண்டு பிரிட்டிஷார் காலத்தில் சிறைச்சாலை சீர்திருத்தம், மெக்காலேயால் மேற்கொள்ளப் பட்டது. சிறைச்சாலை நடைமுறைகள் நூல் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அனைத்து மத்திய சிறைகளும் மாவட்ட நீதிபதியின் தலைமையில் நிர்வகிக்கப்பட்டன. பிறகு, சிறைக் கண்காணிப் பாளர்கள் நியமிக்கப்பட்டனர். பெரும்பாலும் ஆங்கிலேயர்களே கண்காணிப்பாளர் களாக இருந்தார்கள். அவர்களுக்கு வானளாவிய அதிகாரம் தரப்பட்டிருந்தது.

காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை இவையே குற்றவியல் நீதி பரிபாலனத்தின் மூன்று நிலைகளாகும். இதில் கடைநிலை சிறைத் துறை என்பதால், சிறைத்துறைக் கண்காணிப்பாளருக்கு நீதிபதிக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் நினைத்தால் தடியடி நடத்தலாம்; துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடலாம். யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை.

சட்டப்படி எனக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கைதிகள்மீது தேவையின்றி தடியடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தை நான் செய்யவில்லை. சிறை தகர்க்கப்பட்டு கைதிகள் தப்பாமல் இருக்கவும், காவலர்களின் உயிரைக் காப்பாற்றவும், தற்காப்புக்காகவுமே துப்பாக்கியை நான் பயன்படுத்த வேண்டியதாயிற்று. எதையும் நான் விரும்பிச் செய்யவில்லை. சிறைக்குள் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிப்பதற்கு எனக்கு வேறு வழியே இல்லை.

நடக்கட்டும் விசாரணை... நான் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக நீதிபதி கண்டறிந்தால், என்னை தூக்கில் போடட்டும். ஏற்றுக்கொள்கிறேன். அந்தத் துணிவுடன்தான் விசாரணை கமிஷனை எதிர்கொண்டேன்.

விசாரணை தொடங்கியது. வழக்கமாக இதுபோன்ற விசாரணை கமிஷன்களை அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்ட பிறகு, ஆணை பிறப்பிக்கவே வெகுநாள்களாகும். அந்த கமிஷன் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப் பிப்பதற்குள் சில வருடங்கள்கூட உருண்டோடி விடும். அதற்குள் மக்களும் எதிர்க்கட்சியினரும் அதை மறந்திருப்பார்கள். ஆனால், இந்த விஷயத்தில் அப்படியான தாமதம் எதுவும் இல்லை.

கலவரம் நடந்தது 1999 நவம்பர் 17 அன்று. அடுத்த ஓரிரு நாள்களிலேயே விசாரணை ஆணையம் அமைக்க அரசாணை வெளியிடப் பட்டது. கலவரத்துக்கான காரணம், கலவரம் நடந்த விதம், துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது, சிறை அலுவலர்கள் தவறுகள் செய்தார்களா, சிறைக்கான சீர்திருத்தங்கள் என்ன என்பது குறித்து விசாரித்து அறிக்கையும் ஆலோசனையும் தருமாறு ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப் பட்டது.

விசாரணை ஆணையத்துக்கு அரசு அளித்த கால அவகாசம், வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே. விசாரணை ஆணையராக நியமிக்கப் பட்ட நீதிபதி டேவிட் கிறிஸ்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். வழக்கமாக, இதுபோன்ற விசாரணை கமிஷனுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளைத்தான் நியமிப்பார்கள். ஆனால், பணியில் இருக்கும் நீதிபதியை நியமித்ததன் மூலம் விசாரணையை எந்தளவுக்கு நேர்மையாக அரசு நடத்தியது என்பதைப் புரிந்துக்கொள்ளலாம். ஒரே வாரத்தில்... அதாவது 1999 நவம்பர் 24-ம் தேதியன்றே ஆணையத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் டேவிட் கிறிஸ்டியன். ஆனால், சில காரணங்களால் விசாரணை தொடங்க சில நாள்களாயிற்று.

புதிய நூற்றாண்டை உலகமே பெருமகிழ்வோடு வரவேற்றுக் கொண்டாடிக்கொண்டிருந்தது. 2000-வது ஆண்டு ஜனவரி 29 அன்று, சிறைக்கு நேரில் வந்து விசாரணையை மேற்கொண்டது ஆணையம். சிறைத்துறை, காவல்துறை வழக்கறிஞர்கள், உயிரிழந்த சிறைக்கைதிகளின் மற்றும் பிற சிறைக்கைதிகளின் வழக்கறிஞர்கள், ஆணையத்தின் வழக்கறிஞருடன் சிறைக்கு வந்தார் நீதிபதி.

சிறையில் அனைத்துப் பகுதிகளையும் பார்வை யிட்டது ஆணையம். கலவரம், துப்பாக்கிச்சூடு நடந்த இடங்கள், ஜெயிலர் ஜெயக்குமார் எரிக்கப் பட்ட இடம், கலவரக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்ட அரசு உடைமைகள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், சிறையிலிருந்து தப்பிக்க முயன்று அவர்களால் உடைக்கப்பட்ட சுற்றுச்சுவர் என எல்லாவற்றையும் பார்வையிட்டு பல கேள்விகளை எழுப்பியது ஆணையம்.

சிறைத்துறை தரப்பில் 18 சாட்சிகள், காவல்துறை சார்பில் 21 சாட்சிகள், ஆணையம் தரப்பில் 8 சாட்சிகள், கைதிகள் தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 36 சான்று ஆவணங்களின் பட்டியலும், 46 அறிக்கைகளும் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. அனைத்து தரப்பினரும் தீர விசாரிக்கப்பட்டு அவர்களுடைய வாக்குமூலங் கள் பதிவுசெய்யப்பட்டன.

விசாரணை ஆணையம் கொடுத்த அறிக்கையின் சாராம்சம் இதுதான்...

`சென்னை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த பாக்ஸர் வடிவேலு சித்ரவதை செய்யப்பட்டதால் இறந்தார் என்ற பொய்யான வதந்தி ஒன்று பரப்பப்பட்டதால், சென்னை மத்திய சிறையில் கலவரம் ஏற்பட்டது. உண்மையில் இயற்கையாகத்தான் பாக்ஸர் வடிவேலு இறந்திருக்கிறார். கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஒருசில கைதிகள் இந்த வதந்தியைப் பரப்பியுள்ளனர்; ஏனைய கைதிகளையும் தூண்டிவிட்டுள்ளனர்.

ஜெயிலர் ஜெயக்குமாரைத் தாக்கி, எரித்துக் கொல்ல வேண்டும் என்று ஒருசில கைதிகள் இந்த வேலையைச் செய்துள்ளனர். பெரும்பாலான கைதிகளை கலவரம் செய்யுமாறு இவர்கள் தூண்டிவிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் ஜெயிலர் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

ஜெயில்... மதில்... திகில்! - 15 - தொலைந்தது தோட்டாக்கள் மட்டுமல்ல... தூக்கமும்தான்!

ஜெயிலர் ஜெயக்குமார், கடமையில் உறுதியானவர்; நேர்மையானவர். சிறை விதிகளின்படி ஒழுங்குக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதிலும் மிகவும் கவனமாக இருந்துள்ளார். சிறைக்குள் சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுத்துள்ளார். சிறைக்குள் கைதிகள் சிலர் தங்கள் விருப்பம்போல் காரியங் களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அவர் தடையாக இருந்துள்ளார். அதனாலேயே அவரைக் கொல்ல அந்தக் கும்பல் குறிவைத்திருக் கிறது.

சிறை அதிகாரி ஜெயக்குமாருக்கு தேவையான உதவியையும் பாதுகாப்பையும் அளிக்க சிறைப் பணியாளர்கள் தவறிவிட்டார்கள். அதனாலேயே, கொடூரமான முறையில் கைதிகள் அவரைக் கொன்றுள்ளனர்.
ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

அதிகளவிலான கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்துள்ளது. சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிறைக் கண்காணிப்பாளரும் காவல்துறை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்தபோதும் கைதிகள் கலையாததால்தான் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, சிறைக் கண்காணிப்பாளரும் காவல்துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியது தவிர்க்க முடியாதது; நியாயமானது. இதனால் 13 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

கலவரச் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் காவல்துறை அதிகாரிகளின் தரப்பில் எந்தவிதமான குறைபாடும் இல்லை. கலவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் அவர்கள் செயல்பட்டுள்ளனர். கடைசி நடவடிக்கையாகத் தான் பலப்பிரயோகம் செய்தனர். அப்படிச் செய்யாமலிருந்தால் மேலும் பல உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். சொத்துகளும் சேதமடைந் திருக்கும்.

ஜெயில்... மதில்... திகில்! - 15 - தொலைந்தது தோட்டாக்கள் மட்டுமல்ல... தூக்கமும்தான்!

கொந்தளிப்பான நிலையில் உள்ள கும்பலில் இருப்போர், தன்னைத்தானே தலைவர்கள் ஆக்கிக்கொள்வார்கள். அந்த வகையில்தான் இந்தக் கலவரம் தூண்டப்பட்டிருக்க வேண்டும். கைதிகள் அனைவரும் தப்பிப்பதற்காக முதன்மை வாயிலை நோக்கி முன்னேறியுள்ளனர். கட்டடங் களிலிருந்து எடுத்த ஓடுகள், கம்பி வேலிகள், இரும்புப் பொருள்கள், கற்கள், மரக்கட்டைகள் எல்லாவற்றையும் கைதிகள் ஆயுதங்களாக்கிக் கொண்டனர். அலுமினியத் தட்டுகளை கூரிய முனை உடைய ஆயுதங்களாகச் செய்து கொண்டனர். கட்டுமானப் பணிக்காக தியான மண்டபத்துக்கு அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கல்களை எடுத்து எறிந்துள்ளனர்.

ஜெயில்... மதில்... திகில்! - 15 - தொலைந்தது தோட்டாக்கள் மட்டுமல்ல... தூக்கமும்தான்!

கைதிகளின் கும்பலைக் கலைப்பதற்கு தடியடி மட்டும் பயனளிக்காது என்பதை கண்காணிப் பாளர் உணர்ந்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான ஒரு சூழ்நிலையைச் சந்தித்தபோது, அவரிடம் சுழல் துப்பாக்கி மட்டுமே இருந்தது. ஏனைய சிறைக்காவலர்களின் கைகளில் தடிகள் மட்டுமே இருந்தன. கலவரத்தை அடக்கி கைதிகளை டவர் தொகுதிக்குத் தள்ளுவதற்கு அவர் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. கலவரத்தின் கடுமை தணியாததால்தான் துப்பாக்கியால் சுடுவது என சிறைக் கண்காணிப் பாளர் முடிவுசெய்திருக்கிறார். அதன் பிறகே காவல்துறை அதிகாரிகளுக்கும் அவர் தகவல் தெரிவித்திருக்கிறார்’ - அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்த மேற்கண்ட விஷயங்கள் எங்களுடைய மனநிம்மதியை மீண்டும் எங்களிடம் கொண்டுவந்து சேர்த்தது.

அந்தச் சிறைக்கலவரத்தால் கைதிகள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், சம்பந்தமே இல்லாமல் ஒருவர் பாதிக்கப்பட்டார். அவர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்!

(கதவுகள் திறக்கும்)