
இவனுக்கு சிறைக்கலவரத்தால் குண்டடி பட்டுவிட்டது. மிகவும் கஷ்டப்படுகிறான். அதற்காகத்தான் நீதிபதியிடம் மனு கொடுக்க வந்துள்ளோம்
சிறையில் நடந்த கலவரம் சம்பந்தமே இல்லாமல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் அரசியல் பாதைக்கு சிறு இடையூறு ஏற்படுத்தியது எனலாம். சிறையில் கலவரம் நடந்த நாள், அவரது அரசியல் வாழ்வில் முக்கியமான நாள்.
ஆம், 1999, ஆகஸ்ட் 17-ம் தேதி அன்றுதான் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை அரசியல் கட்சியாக அவர் மாற்றி, தேர்தலில் போட்டியிட முடிவுசெய்தார். தனது அரசுப் பணியையும் ராஜினாமா செய்தார். அதே நாளில்தான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில அளவிலான முதல் பேரணி சென்னையில் நடந்தது.
அந்தக் காலகட்டத்தில் அவரது பேரணியில் பங்கேற்ற கூட்டத்தைப் பார்த்தவர்கள் மலைத்துப்போனார்கள். ஆனால், தலைநகரைத் தாண்டி அந்தச் செய்தி பெரிய அளவில் மக்களிடம் சென்றடையவில்லை. காரணம், கலவரம். கலவரச் செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொள்ள பேரணிச் செய்தி பெரிதாக எடுபடவில்லை. அந்த வகையில் திருமாவளவனின் அரசியல் வாழ்வில் சங்கடத்தை ஏற்படுத்தியது இந்தக் கலவரம். ஆனால், அதிலும் அவருக்கு ஒரு நன்மை ஏற்பட்டதாகக் கருதினேன். கலவரம் உரிய நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டதால், பேரணியில் அசம்பாவிதம் நடப்பதும் தவிர்க்கப்பட்டது. ஒருவேளை சிறையிலிருந்து கொடிய ரெளடிக் கூட்டம் தப்பி, பேரணியில் ஊடுருவியிருந்தால், வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கலாம். நல்லவேளையாக அப்படி நடக்கவில்லை.
இப்படி சில நிம்மதிப் பெருமூச்சுகள் விட முடிந்தாலும், சிறைக்கலவரத்தால் வெளியிலும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தது. விசாரணை கமிஷன் முன் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒரு காவலர் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து என்னை உள்ளே அழைத்தார். நான் சென்றபோது, ஒருவர் தன் முகத்தில் பெரிய கட்டுடன் நீதிபதியைச் சந்திக்க வந்திருக்கிறார். முகத்தின் பெரும்பகுதி கட்டுகளால் சூழப்பட்டிருந்த நிலையில் அவரால் பேச முடியவில்லை. அவருடன் வந்தவர்தான் பேசினார்.
‘‘ஐயா, இவனுக்கு சிறைக்கலவரத்தால் குண்டடி பட்டுவிட்டது. மிகவும் கஷ்டப்படுகிறான். அதற்காகத்தான் நீதிபதியிடம் மனு கொடுக்க வந்துள்ளோம்’’ என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. `கலவரத்தில் குண்டடிப்பட்ட கைதிகள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். அப்படி இருக்க, இவர் மட்டும் எப்படி இங்கு வந்தார், அங்கிருந்து தப்பி வந்துவிட்டாரா அல்லது கலவரத்தின்போது தப்பிச் சென்று விட்டாரா?’ என எனக்குக் குழப்பம்... அதிர்ச்சி.
முதல்வரிடம் ‘ஒரு கைதிகூட தப்பிச் செல்லவில்லை’ என உறுதியளித்துள்ளேன். அவரும் என்னை நம்பி சட்டசபையில் பதில் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, இவர் எப்படி வந்தார் என எனக்கு விளங்கவில்லை.
விசாரித்தபோதுதான் விஷயம் புரிந்தது...
அந்த இளைஞரின் பெயர் அன்புச்செல்வம்; 25 வயது. கோயம்பேடு மார்க்கெட்டில் கூலிவேலைக்குச் செல்பவர். அவரின் தாயார் மற்றும் மூன்று தம்பிகளுடன் சிந்தாதிரிப் பேட்டை கிழக்கு கூவம் ஆற்றங்கரையில் வசித்துவந்தார். திருமணமாகாதவர். அவருடைய குடிசை, மத்திய சிறைக்கு தெற்கே அமைந்திருந்தது.
தினமும் அதிகாலை 4 மணிக்கு கிளம்பி கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் செல்வார். வேலையை முடித்து காலை 9 மணிக்கு வீடு திரும்பிவிடுவார்.
கலவரத்தின்போதும் காலை 9 மணிக்கு ரயில்வே மேம்பாலத்தில் நடந்து தன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போதுதான், எங்கிருந்தோ பறந்துவந்த துப்பாக்கித் தோட்டா, அவருடைய தாடையில் புகுந்து தொண்டை வரை தாக்கியது. சுயநினைவற்று அவர் விழுந்து விட்டார். உடன் இருந்த அவரின் நண்பர்கள், அவரை சென்னை பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவர் டிசம்பர் 6-ம் தேதி வரை 19 நாள்கள் சிகிச்சையில் இருந்துள்ளார்.
அன்புச்செல்வத்தின் தாடையில் எலும்பு முறிந்திருந்தது. நாக்கிலும் தோட்டா தாக்கி யிருந்தது. கீழ்தாடையில் உள்ள அனைத்து பற்களும் நீக்கப்பட்டுவிட்டன. சிகிச்சைக்குப் பிறகும் அவரால் திட உணவு சாப்பிட முடியவில்லை. திரவ உணவை மட்டுமே விழுங்க முடிந்தது. மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் தேவையான மருந்துகளை வாங்கவும் வழியில்லை.
கடுமையான வேதனையை அனுபவித்துவந்த அவர், இழப்பீடு கோரி முதல்வர், சிறைத்துறை தலைவர், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பலருக்கும் மனுக்களை அனுப்பியிருக்கிறார். எங்கிருந்தும் பதிலும் உதவியும் கிடைக்கவில்லை. துப்பாக்கித் தோட்டா தாக்கி, அவர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதிலும் அவர் காவல் துறையினரால் விசாரிக்கப்பட வில்லை.

மேம்பாலம் வழியாக நடந்து ரயில் பாதையைக் கடக்க முற்பட்டபோதுதான் அவர்மீது தோட்டா பாய்ந்திருக்கிறது. மேம்பாலத்தில் நின்று பார்த்தால், சிறைச்சாலையின் வெளிப்பக்கச் சுவர்களையும் உட்பக்கத்தையும் காண இயலும்.ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை
குண்டடி பட்டபோது அவரது ஏரியா நண்பர்கள் சிலரும் அவருடன் நடந்து சென்றுகொண்டிருந் தனர். இவர்மீது மட்டுமே குண்டடிபட்டுள்ளது. இவரைத் தாக்கிய குண்டு ‘பக்ஷாட்’ வகையைச் சேர்ந்தது. ‘காயங்கள் ஏற்படும்; இறந்துவிட மாட் டார்கள்’ என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன் அல்லவா... அந்த வகை குண்டு அது.
கலவரத்தின்போது சிறைக்குள் 20 அடி உயரமுள்ள கட்டடத்தின் மேலிருந்து காவல் துறையினர், கலவரக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அந்தக் கட்டடத்துக்கும் சிறை மதிலுக்கு வெளியே இவர் நடந்து சென்ற பாலத்துக்கும் இடையில் 200 அடி தூரம் இருக்கும். அவ்வளவு தூரம் தாண்டிச் சென்று இவர்மீது குண்டு பாய்ந்திருக்கிறது.

இவரது மனுவை ஏற்றுக்கொண்டார் விசாரணை ஆணையர். அவரது நிலையறிந்த நீதிபதி, பெரிதும் இரக்கம்காட்டினார். அந்த ஏழையின் வலியும் இயலாமையும் வாழ்வெல்லாம் தொடரும் என்பதால், அவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். அவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோன கைதிகளின் குடும்பங்களுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
விசாரணை ஆணையம் வருவதற்கு முன்பே, அதாவது கலவரம் நடந்த மறுநாளே தேசிய மனித உரிமை கமிஷன் சிறைக்கு வந்து விசாரணை நடத்தியது. அப்போது அதன் தலைவராக இருந்தவர் கார்த்திகேயன். ராஜீவ் காந்தி கொலைகுறித்து விசாரணை நடத்திய தனி சிறப்புப்படைக்கு தலைமை தாங்கிய அதே
ஐ.பி.எஸ் அதிகாரி கார்த்திகேயன்தான் அவர்.
நான் அறிந்தவரை கார்த்திகேயன், மிகப்பெரிய மனிதாபிமானி; குற்றவாளிகளிடம்கூட கடுமையைக் காட்டாதவர். மூன்றாம் தர அடக்குமுறைகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் மென்மையாகப் பேசினாலே குற்றவாளிகள் உருகிப்போய் உண்மைகளையும் சொல்லி விடுவார்கள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப் பட்டவர்கள், பூந்தமல்லி உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பாதுகாக்கும் பணியிலும் நான் இருந்தேன். அப்போது பலமுறை அவர் அந்தச் சிறைக்கு வந்து சென்றுள்ளார். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை அனுபவித்துவந்த நிலையிலும் சிறைக்கு வந்து அந்தச் சிறைவாசிகளின் நலம் விசாரித்தார் அவர்; நமது வேலை முடிந்தது எனக் கிளம்பிப் போய்விடவில்லை.
அவர் சிறைக்கு வந்து கலவரம் நடந்த இடங்களைப் பார்த்து, கைதிகளிடமும் காவலர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினார். சிறையில் நடந்த அனைத்தையும் அவரிடம் பொறுமையாக விளக்கினேன். இறுதியாக துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தேன்.

கைதிகளில் சிலர் அவரிடம், ‘ஜெயிலரை எரித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றால் துப்பாக்கியால் சுடாமல் என்ன செய்வார்கள்?’ என்று கேட்டார்கள். அவர்களிடம் கார்த்திகேயன், ‘இப்படிச் சொல்லும் நீங்கள், ஏன் அன்றைய தினம் கலவரக்காரர்களுடன் சேர்ந்து கலவரம் செய்தீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு ‘நாங்கள் அன்று அவர்களுடன் சேர்ந்திருக்காவிட்டால் எங்களை அடித்து நொறுக்கியிருப்பார்கள். அந்த பயத்தால் வேறு வழியில்லாமல் அவர்களுடன் சேர்ந்துகொண்டோம்’ என்றனர்.
இறுதியாக என்னிடம் விசாரிக்கும்போது, முதல்வர் கேட்டதைப்போலவே, `‘துப்பாக்கிச்சூடு நடத்தாமல் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாதா?’’ என்று கேட்டார். முதல்வரிடம் சொன்னதைத்தான் அவரிடமும் சொன்னேன்.
`‘இவ்வளவுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான்’’ என்று நிறுத்தினார். நான் உட்பட அனைத்து அதிகாரிகளும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று அவர் முகத்தையே பார்த்துக்கொண் டிருந்தோம்.
(கதவுகள் திறக்கும்)